ராக்கெட்ரி – நம்பி விளைவு @ விமர்சனம்

ட்ரை கலர் பிலிம்ஸ் சார்பில் சரிதா மாதவன் மற்றும் மாதவன்,  மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் மற்றும் 27th என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் 

மாதவன், சிம்ரன், ரவி ராகவேந்தரா, முரளிதரன், மிஸா கோஷல், ஷ்யாம் ரெங்கநாதன், கார்த்திக் இவர்களுடன் கவுரவத் தோற்றத்தில் சூர்யா நடிக்க, மாதவனின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் தமிழில் வந்திருக்கும் படம். சூர்யாவுக்குப் பதிலாக ஷாருக் கான் , ரவி ராகவேந்தருக்குப் பதிலாக  ரஜித் கபூர் நடிக்க ROCKETRY THE NAMBI EFFECT என்ற பெயரில் ஆங்கிலம் இந்தியிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது இந்தப் படம் 
 
மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைகழகத்திலும் படித்த விண்வெளிப் பொறியாளரும் 
 
ராக்கெட்டை இயக்கும் திரவ எரிபொருள் என்ஜினான விகாஸ் என்ஜினை வடிவமைத்து மேம்படுத்தியவரும் 
 
இஸ்ரோவில் பணியாற்றியவரும் அதன் கிரையோஜெனிக் பிரிவின் பொறுப்பாளரும் 
 
திருவனந்தபுரத்தில் வாழும் நாகர்கோவில் தமிழ் பிராமணருமான நம்பி நாராயணன்  மீது அவர் நாட்டுக்காக செய்த மாபெரும் சாதனைகளுக்கான கொடிய பரிசாக , 
 
‘ராக்கெட் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றார் ; அதற்காக ஒரு பெண்ணோடு சல்லாபித்தார் . பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்று பொய் வழக்கு ஒன்றை அமெரிக்கா பாகிஸ்தான் ஆட்களின் உதவியோடு கேரளா போலீஸ் போட்டது .  
 
நம்பி நாராயணனை விட்டால் ராக்கெட் தொழில் நுட்பத்தில் இந்தியா பிரம்மாதமாக வளர்ந்து விடும் ; அவரை முடக்க வேண்டும் என்பதால் அந்நிய நாடுகள் செய்த சதிக்கு கேரளா போலீஸ் சோரம் போன நிகழ்வு அது 
 
கேரள போலீசும் மக்களும்  அவரையும் அவரது குடும்பத்தையும் அடித்து உதைத்து அடித்து உதைத்து அவமானப்படுத்தி பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கி நரகத்தின் நடு மையத்துக்குத் தள்ளினார்கள். 
 
ஆனால் தொடர்ந்து போராடி சி பி ஐ யின் உதவியோடு தான் நிரபராதி என்பதை நிரூபித்தார். அவருக்கு சுமார் ஒன்றரைக் கோடி நஷ்ட ஈடும் கிடைத்தது. 
 
இந்தக் கொடுமையில் கேரளா போலீசின் பங்கு பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி கே ஜெயின் ஒரு கமிட்டியையும் அமைத்தார், ஆனால் கேரள அரசு அதை நேக்காக ஊத்தி மூடியது . 
 
அப்படிப்பட்ட நம்பி நாராயணனின் வாழ்க்கை நிகழ்வுகள்தான் இந்தப் படம் . 
 
கவுரவமாக வாழும் நம்பி நாராயணனும் அவர் மனைவி மகன் மகள், மருமகன்  ஆகியோரும்  கேரள போலீசாரால் கடுமையாக தாக்கப்படுவதில் துவங்கும் படம்  அதன் பின்னர் அவரது கல்வி மற்றும் அறிவியல்  சாதனைகளை விவரிக்கிறது , 
 
தான் படிக்கும் புத்தகத்தில் ஒரு தவறைக் கண்டுபிடித்து நம்பி நாராயணன்  சொல்ல, அதை  ஆசிரியர்   கண்டிக்க, புத்தகத்தை எழுதியவரையே அந்தத் தவறை ஒத்துக் கொள்ள வைப்பது, திடப் பொருள்  வேதியல்  படிக்கச் ஆரம்பித்து திரவ வேதியியல் படிக்க முடிவு செய்தது ,கிலீவர் என்ற பேராசிரியரிடம் படிக்க அவர் வீட்டில் நம்பி நாராயணன் வேலை செய்தது ; உடல்நிலை சரியில்லாத அவரது மனைவியைப் பார்த்துக் கொண்டது, ஒரு முக்கியப் பயிற்சிகாக சுமார் ஐம்பது விஞ்ஞானிகளை பிரஞ்சு கற்றுக் கொள்ள வைத்து ஆனால் பிரான்சில் பிரெஞ்சு தெரியாதது போல நடிக்க வைத்து பயிற்சி பெற வைத்தது , 
 
இந்தியாவில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட என்ஜினை பரிசோதனைக்குக் கொண்டு போய் கொண்டு வரும் நேரத்தில்  ரஷ்யா நாடு சிதற, அமெரிக்கா இந்தியாவின் சாதனைகளை தடுக்க முயல , அமெரிக்காவின்  துரத்தலையும் மீறி ஜேம்ஸ் பாண்ட் பட நாயகன் போல அந்த எஞ்சின் பகுதிகளை  செர்பியப் பாலைவனம் வழியே பாகிஸ்தான் கராச்சியில் பெட்ரோல் நிரப்பி இந்தியா கொண்டு வந்தது … 
 
இப்படி அவர் சாதனைகளை சொல்லும் படம் 
 
அதனாலேயே அந்த நாடுகள்  நம்பி நாராயணனை ஒழிக்கப் பார்க்க,  மன நிலை பாதிக்கப்பட்ட அவரது மனைவிக்கு சிகிச்சை கூடப் பெற விடாமல் கேரள போலீசாரும் செய்த கொடுமைகளைப் பார்க்கும்போது அப்படியே உறைந்து போகிறோம் . 
 
மொத்த படமும் நடிகர் சூர்யாவுக்கு நம்பி நாராயணன் கொடுக்கும் பேட்டியாக  விரிகிறது .
 
தொழில் நுட்ப ரீதியாக அதே நேரம் போர் அடிக்காமல் முதல் பாகம் பயணிக்க, இரண்டாம் பாகம் உணர்வுப் பூர்வமான சினிமாவாக விரிகிறது. 
இளம் வயது, நடுத்தர வயது , மூத்த வயது என்று பல கெட்டப்களில் நம்பி நாராயணனாக வாழ்ந்து இருக்கிறார் மாதவன் . நாட்டுக்காக  குடும்பத்தைக் கூட கவனிக்காமல் சாதனை செய்த விஞ்ஞானியை அடித்து உதைக்கும் போது , மாதவன் தரும் அதிர்ச்சி, குழப்பம், பின்னர் தெளிவு தொடர்பான ரியாக்ஷன்கள் அற்புதம். நம்பி நாராயணனை நாம் வெகு சுலபமாக உள்வாங்க மாதவனின் நடிப்பு  பேருதவி செய்கிறது . 
 
மனநிலை பாதிக்கப்படும் காட்சிகளில் நடிப்பில் அதிர வைக்கிறார் சிம்ரன். 
 
தனது கவுரவத் தோற்றத்தை மிக சிறப்பாகச் செய்து படத்துக்கும் கவுரவம் தந்து தனக்கும் கவுரவம் தேடிக் கொண்டு இருக்கிறார் சூர்யா 
 
சிகிச்சைக்குப் போய் விட்டு வந்து ஆட்டோ ஏற , கொட்டும் மழையில் நம்பியையும் அவரது மனைவியையும் மலையாள ஆட்டோ டிரைவர் கீழே தள்ளிவிட்டு ஆட்டோ எடுக்கும் காட்சி மாதவனின் சிறப்பான  இயக்கத்துக்கு ஒரு சோறு பதம் . 
 
நம்பி நாராயணனாக மாதவனே நடித்துக் கொண்டிருக்க , சட்டென்று ஒரு முக்கியம்னா தருணத்தில் நம்பி நாராயணனே தோன்றி கலங்கி அழும் காட்சியில் ஒரு நிமிடம் நம்மை உறைய வைக்கிறது. இந்த இடத்தில் டைரக்ஷன் உத்தியில் ஜொலிக்கிறார் மாதவன் படத்தில் இன்னொரு சிறப்பு அற்புதமான வசனங்கள் . நீங்க நல்லவர் என்றால் உங்களுக்கு ஆதரவா எந்த இஸ்ரோ விஞ்ஞானியும்  ஏன் குரல் கொடுக்கல என்ற நடிகர் சூர்யாவின்  கேள்விக்கு  ” தெரியல .. ஒரு ராக்கெட் கவுந்தா எப்படி ரியாக்ட் பண்ணனும் ன்னு தெரிஞ்ச விஞ்ஞானிகளுக்கு ஒரு மனுஷன் கவுந்தா என்ன பண்ணனும்ன்னு தெரியாது போல ” என்ற வசனம் அதில் சிகரம் . 
 
ஜார்ஜியா , ரஷ்யா, பிரான்ஸ், செர்பியா நாடுகளில் நடந்துள்ள வெளிப்புறப் படப்பிடிப்புகள் அருமை சிர்ஷா ரே சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் .சாம் சி எஸ் சின் பின்னணி இசை அற்புதமாக பாய்ந்து ஓடுகிறது. 
 
மதுரை தியாகராஜர் கல்லூரி பற்றி படத்தில் சொல்லி இருக்கலாம் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமை சற்றே எள்ளல் செய்வது போன்ற காட்சிகளை தவிர்த்து இருக்கலாம் . 
 
மிக முக்கியமாக  நம்பி நாராயணனுக்கு கேரளாவில் நடந்த கொடுமைகளுக்கு அவர் தமிழர்  என்பதால் ஏற்பட்ட இனத் துவேஷம்தான் காரணம் என்பதைச் சொல்லாமல் .. 
அவர் தேசத் துரோகி என்பதை நம்பி தேசப்பற்று காரணமாகத்தான் அவரையும் அவரது குடும்பத்தையும் கொடுமை செய்தார்கள் என்பது போன்ற ஒரு பசப்பலான தொனியைக் கொண்டு வருவது , நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்கு இணையானது 
 
மொத்தத்தில் ராக்கெட்ரி – நம்பி விளைவு……. நம்பிப் பார்க்கலாம். மனசுக்கு நல்ல விளைவைத் தரும் . 
 
மகுடம் சூடும் கலைஞர்கள்
******************************
ஆர்.மாதவன் , சாம் சி எஸ்
 
 
 
  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *