எஸ் எம் எஸ் மூவீஸ் சார்பில் ஏ சி சுரேஷ் , மகேந்திரன் , சாய் மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க,
கில்லி, குருவி, தூள் ஆகிய படங்களை இயக்கிய தரணி, புதிய கீதம் படத்தை இயக்கிய ஜெகன், வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபு சிவன்,
மௌன குரு படத்தை இயக்கிய சாந்த குமார் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய,
சுரேஷ் சீதாராம் முதன் முதலாக இயக்கும் காமெடி திரில்லர் படம் சைவ கோமாளி .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் தரணி. பாபு சிவன், மற்றும் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களையும் முன்னோட்டத்தையும் வெளியிட்டனர் .
சம்மந்தப்பட்ட அனைவருமே தரணியிடம் உதவியாளராக இருந்தவர்கள்
திரையிடப்பட்ட முன்னோட்டம் காதல் , காமெடி , திரில் எல்லாம் கலந்த கலவையாக இருந்தது . சுரேஷ் , மகேந்திரன் , சாய் மகேந்திரன் ஆகிய மூவரின் முதல் எழுத்தின் இணைப்பே எஸ் எம் எஸ் மூவீஸ் என்றாலும்,
அதற்கு Story Makes Success (கதையே வெற்றியை உருவாக்கும்) என்ற ஒரு நல்ல விளக்கமும் கொடுத்து இருந்தனர்.
கானா பாலா எழுதிப் பாடிய — 108 ஆம்புலன்சின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கும் வகையில் ‘ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா ஒதுங்கு, யம்மா ஹாஸ்பிடல் வந்துடுச்சி இறங்கு ‘ என்ற பாடல் கவனம் கவர்ந்தது .
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுரேஷ் சீதாராம் ” என்னை பெற்றெடுத்தது அம்மா அப்பா என்றால் வளர்த்தவர் தாரணி சார்தான். என்னை நல்ல முறையிலேயே இவர்கள் உருவாக்கி உள்ளனர் .
எனவே என் படத்தில் ஆபாசம் உட்பட்ட வேண்டாத விசயங்கள் எதுவும் இருக்காது
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சைக்கோவும் உண்டு . கோமாளியும் உண்டு . அவன் எந்த முகத்தை எப்படி வெளிப்படுத்துவான் என்பது ,
இந்த சமூகம் அவனை எதிர்கொள்ளும் முறையில்தான் இருக்கிறது இந்த கருத்தையும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான தீர்வையும் இந்தப் படத்தில் சொல்கிறேன்
படத்தில் அசிஸ்டன்ட் கமிஷனராக பவர் ஸ்டார் சீனிவாசன், உண்டு கொழுக்கும் வாழ்க்கை வாழும் கிரிமினல் அமைச்சராக ஜி எம் குமார்,
மிரட்டலான சைக்கோ வேடத்தில் புதுமுகம் ரஞ்சித் கலக்கலான காமெடி வேடத்தில் டி பி கஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் ” என்றார் .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாபு சிவன் சுரேஷ் சீதாராமின் உழைப்பை பாராட்டினார் . வேட்டைக்காரன் படத்தில் தனக்கு சிறப்பான உதவியாளராக பணியாற்றியதையும் குறிப்பிட்டார் .
பேரரசு தன் பேச்சில் தரணி தனது முதல் படத்தில் பட்ட கஷ்டங்களை எல்லாம் விளக்கியதோடு சுரேஷையும் வாழ்த்தினார்.
“மிகச் சிறந்த உழைப்பாளி சுரேஷ் சீதாராம் . ” என்றார் தரணி
பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது ” இந்தப் படத்தில் கமிஷனராக நடித்துள்ளேன் . இந்தப் படத்தின் இணை இயக்குனர் உதயக்குமார்தான் வந்து என்னிடம் பேசினார் .
படப்பிடிப்பில் இயக்குனர் சுரேஷ் சீதாராம் மிக சிறப்பாக படம் பிடித்தார் . என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்த உதயகுமார் இயக்கத்தில் நான் தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை ஜனவரியில் துவங்குகிறேன் ” என்றார்
108 ஆம்புலன்சின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கும் பாடலை எழுதிப் பாடிய கானா பாலா தன் பேச்சில் ” பொதுவா எனக்கு மதுப் பழக்கம் இல்லை . நான் பெண்களை கிண்டல் செய்தது இல்லை .
ஆனால் எனக்கு வந்த பாடல்கள் எல்லாம் அப்படியே அமைந்தன .
அண்மையில் எலக்ஷன் சமயத்துல கலெக்டர் என்னை கூப்பிட்டு, நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஒரு பாடலை பண்ணித் தரச் சொன்னபோது சந்தோஷமாக செய்து கொடுத்தேன். அதுக்கு காசு வாங்கல.
முறைப்படி இந்த ஆம்புலன்ஸ் பாட்டுக்கும் தயாரிப்பாளர்கள் கிட்ட காசு வாங்கி இருக்கக் கூடாது . ஆனா அப்போ உள்ள சூழ்நிலைல வாங்கிட்டேன். அடுத்த படத்துல அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன் .
இந்த — 108 ஆம்புலன்சின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கும் பாடலை பாடிய வகையில் , என் அனுபவத்தில் இருந்து ரெண்டு விஷயம் சொல்லணும்.
ஒன்று …
ரோட்ல ஆம்புலன்ஸ் போகும்போது அது பின்னாடியே பல பேர் வேகமா போறாங்க . ஏன்னா அது கூடவே போனா சீக்கிரம் போயடலாமாம்.
அப்புறம் ஆம்புலன்ஸ் டிரைவர் சடன் பிரேக் போட்டாருன்னு வை , ஒரேடியா சீக்கிரம் போய் சேர்ந்துடுவ . அதனால அத யாரும் பண்ணாதீங்க .
இன்னொன்னு …
ஆம்புலன்ஸ் போகும்போது உள்ள எட்டிப் பார்த்து , யாரும் இல்லன்னா , டிரைவரை முறைக்கிறாங்க . ஏன்னா அவரு ஏமாத்துறாராம். இதுவும் தப்பு .
ஏன்னா பேஷன்ட் இருந்தால்தான்னு இல்ல … பேஷண்டை கூப்பிடக் கூட ஆம்புலன்ஸ் டிரைவர் வேகமாதான் போகணும் . இல்லன்னா பேஷன்ட் உயிருக்கு ஆபத்து . அதனால இனி அப்படி முறைக்காதீங்க ” என்றார் .
சபாஷ் கானா பாலா !