எம் கே சினி ஆர்ட்ஸ் சார்பில் மாதேஸ்வரன் தயாரித்து கதாநாயகனாக நடிக்க , கதாநாயகியாக காஷிஹா என்ற கேரளப் பெண் அறிமுகம் ஆக, சாம்ராஜ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் சாந்தன் .
இந்த மாதேஸ்வரன் நிஜ வாழ்க்கையில் ஒரு கோவில் கட்டும் ஸ்தபதி . (சிலை மட்டும் செய்பவர் சிற்பி . சிலை மட்டுமல்லாது கோவிலின் அனைத்து கட்டுமான வேலைகளையும் செய்பவர் ஸ்தபதி!).
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் தங்கராசு , முத்து ராசு என்ற இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையில் ரத்த பாசத்தின் ஆழத்தை உணர்த்தும் வகையில் நிகழும் சம்பவங்களையும் திருப்புமுனைகளையும், நகைச்சுவை கலந்து கிராமியப் பின்னணியில் சொல்லும் படமாம் இது .
படத்தில் அண்ணன் தங்கராசுவாக ஸ்தபதி மாதேஸ்வரன் நடிக்க , அவரது நண்பராக — விஜய்யின் திருப்பாச்சி படத்துக்குப் பிறகு –முக்கியக் கதாபாத்திரத்தில் காமெடி மற்றும் செண்டிமெண்ட் சேர்ந்த பாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் பெஞ்சமின்.
பழி உணர்ச்சியோடு கிளம்பும் ஒருவன், அதை விட சாந்த குணமே பெரிது என்று புரிந்து கொள்வதுதான் கதை என்பதால் படத்துக்கு இந்தப் பெயராம்.
படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் மற்றும் திரைப்பட தணிக்கைக் குழு பிரமுகர் எஸ்.வி.சேகர், ஜாகுவார் தங்கம் , கவிஞர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் பேசிய எஸ் வி சேகர் “தணிக்கைக் குழு பற்றி இப்போதெல்லாம் பல விமர்சனங்கள் வருகின்றன . ஆனால் தணிக்கைக் குழு எல்லோருக்கும் பொதுவானது . ஒரு படத்தின் தன்மையைப் பொறுத்து ஏ சான்றிதழ் , யூ ஏ சான்றிதழ் , யூ சான்றிதழ் தரப்படுகிறது .
ஒருவேளை உங்கள் படத்துக்கு ஏ சான்றிதழோ யூ ஏ சான்றிதழோ கொடுக்கப்பட்டு , உங்களுக்கு யூ சான்றிதழ் வேண்டும் என்றால் அவர்கள் சொல்கிற காட்சிகளை நீக்க சம்மதம் தந்தால் யூ கொடுக்கப்படும்” என்றார் .
அடுத்துப் பேசிய ஜாகுவார் தங்கம்
” சேகர் சார் இப்படி சொல்கிறார் . ஆனால் ஒரு வசனத்தை வார்த்தையை வரியை பெரிய தயாரிப்பாளர்கள் எடுக்கும் படத்தில் அனுமதித்து விட்டு , சின்ன தயாரிப்பாளர் படங்களில் அதே வசனம் அதே வரி வார்த்தை வந்தால் மட்டும் நீக்க சொல்கிறர்கள். இது என்ன நியாயம் ? ” என்று கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன எஸ் வி சேகர் ” ஒரு படம் ஆரம்பித்து எடுத்து முடித்து வெளியிட குறைந்தது ஒரு வருடமாவது ஆகிறது .அந்த படம் வெளிவருவதில் தணிக்கை என்பது மிக முக்கியமான விஷயம். அதுக்கு ஒரு மாசமாவது தயாரிப்பாளர்கள் டைம் எடுத்துக்கணும். ரிலீஸ் தேதியை அறிவிச்சிட்டு ஒரு வாரத்துக்குள்ள சென்சார் சர்டிபிகேட் வேணும்னு பரபரக்கறதாலதான் மாநில சென்சார் போர்டு அப்ஜெக்ஷன் பண்ணும்போது உங்களுக்குரிவைசிங் கமிட்டிக்கோ டிரிப்யூனலுக்கோ போக டைம் இருப்பது இல்லை .
சென்சார் போர்டு விதிமுறைகள் பற்றிய புத்தகத்தை நான் தமிழில் மொழி பெயர்த்து கொடுக்க இருக்கேன் . அதை வைத்துக் கொண்டு அதன்படி படம் எடுத்தால் எந்த சென்சார் ஆபீசரும் உங்களை எதுவும் செய்ய முடியாது” என்றார்
(இங்கே ஒரு கொசுறு செய்தி. விசு இயக்கத்தில் எஸ் வி சேகர், சாந்தி கிருஷ்ணா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற மணல் கயிறு படத்தை இப்போது சேகர் மீண்டும் எடுக்கிறார . அந்த மணல்கயிறு படத்தில் நடித்த எஸ் வி சேகர் , விசு , சாந்தி கிருஷ்ணா , குரிய கோஸ் ரங்கா ஆகியோர் இந்தப் படத்திலும் நடிக்கிறார்கள. அந்தப் படத்தில் கல்யாணத்துக்கு எஸ் வி சேகர் எட்டு கண்டிஷன் போடுவார் . இதில் எஸ் வி சேகரின் மகளாக நடிக்க இருக்கும் கேரக்டர் இன்னும் நிறைய கண்டிஷன் போடுமாம் )
எஸ் வி சேகரை அடுத்துப் பேசிய கவிஞர் சினேகன் ” சென்சார் போர்டு பற்றி எஸ் வி சேகர் பேசினார் . ஜாகுவார் தங்கமும் பேசினார் . இரண்டு தரப்பிலும் உண்மை உள்ளது . ஆனால் சென்சார் போர்டிலும் நல்லவர்கள் இருப்பதை அண்மையில் நான் உணர்ந்தேன் .
மாஸ் படத்தின் பெயர் தமிழில் இல்லாததால் அதற்கு வரிவிலக்கு இல்லை என்றார்கள் .ஆனால் கடைசி நேரத்தில் அந்தப் பெயரை மாசு என்கிற மாசிலாமணி என்று மாற்றிய பிறகும் வரிவிலக்கு கிடைக்க வில்லை . படத்தை சன் டிவிக்கு விற்றதால்தான் அதிமுக அரசு வரி விலக்கு தரவில்லை என்று அநியாயமாக பழி போடுகிறார்கள். ஆனால் காரணம் அதுவல்ல .
மாஸ் படத்தில் இலங்கைத் தமிழராக வரும் சூர்யாவை பார்த்து வில்லன் “இலங்கைத் தமிழனா நீ ? அப்படின்னா உன்னைத்தான் முதலில் உதைக்கணும்” என்று ஒரு வசனம் வைத்து இருக்கிறார்கள். அதைப் பார்த்த ஒரு சென்சார் போர்டு அதிகாரி கொந்தளித்து விட்டார் . ”நாடிழந்து வீடிழந்து தவிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளைப் பற்றி நீங்களே இப்படி ஒரு வசனம் வைக்கலாமா”? என்று பொங்கி விட்டார் .
இவர்கள் அப்புறம் வசனத்தை மாற்றிக் கொண்டு போனபோதும் வருத்தம் தணியாத அந்த அதிகாரி வரிவிலக்குக்கு மறுத்து விட்டார் . இப்படி தமிழ் இனத்துக்கு எதிராக மாஸ் படத்தில் வந்த வசனமே வரி விலக்கு கொடுக்கப் படாததற்கு காரணம் ” என்றார் சினேகன் .
அடப் பாவிகளா!