பி வி பி நிறுவனத்துக்கு முதல் பிரதி அடிப்படையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை நடித்தும் தயாரித்தும் கொடுத்த சந்தானம், அதில் தனக்கு கிடைத்த கதாநாயக வெற்றியைத் தொடர்ந்து , முழுக்க முழுக்க சொந்தப் படமாக , தனது ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இனிமே இப்படிதான்’ .
முருகன் ஆனந்த் என்ற இருவர் தங்களது பெயரையே ஒன்றாக்கி படத்தை இயக்கி இருக்கிறார்கள் . இதில் ஆனந்த் சந்தானத்தின் பால்ய கால நண்பர் . சந்தானத்தின் லொள்ளு சபா நிகழ்ச்சியிலேயே அவரது பங்களிப்பு இருக்க , அதே நிகழ்ச்சியில் சந்தானத்தோடு இணைந்தவர் முருகன் .
”நான் சினிமா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் காலம் வந்தால் உங்களுக்கு ஒரு படம் இயக்கத் தருவேன்” என்று ஏழு வருடங்களுக்கு முன்பு சொல்லி இருந்த சந்தானம், இப்போது அதை நிறைவேற்றி இருக்கிறார். (சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்குபவர் கூட சந்தானத்துடன் ஆரம்ப காலம் முதலே பணியாற்றும் சேது என்பவர்தானாம்) .
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் குடும்பக் குத்து விளக்காக நடித்த ஆஸ்னா சவேரி, இதில் கும்மாங்குத்து பெட்ரோமாக்ஸ் லைட்டாக சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க, பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கதாநாயகியாக நடித்த அகிலா கிஷோர் கொஞ்சம் சதை போட்டு இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.
வரும் 12 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படக் குழு .
படத்தின் பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டன .
படத்தின் முன்னோட்டம் கலர்புல்லாக வழக்கமான சந்தானம் ஸ்டைல் பஞ்ச்களோடு இருந்தது . அறிமுக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில் இனிமையாக ஒலிக்கும் பாடல்களில் சந்தானம் ஃபிட்டான ஹீரோவாக ஆடிப் பாடுகிறார். ஆஸ்னா சாவேரியை பிரிபிரியாய் உரித்து.. மஞ்சள் தடவி (சற்றே பொன்னிறமாக வறுக்காதது ஒன்றுதான் பாக்கி !) மயங்க வைக்கிறார்கள் .
”இந்தப் படத்துல காமெடி இருக்கு. லாஸ்ட்ல ஒரு அருமையான செண்டிமெண்ட் விஷயம் இருக்கு”என்று ஆர்வ குளுக்கோஸ் ஏற்றுகிறார் சந்தானம்
கொஞ்ச நாட்கள் முன்பு நடந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு, சந்தானத்துக்கு நெருக்கமான ஆர்யா மற்றும் உதயந்தி ஸ்டாலின் இவர்களோடு சந்தானத்தின் மரியாதைக்குரிய கவுதம் மேனன் என்று பலர் கலந்து கொண்டிருக்க,
அப்போது பேசிய சந்தானம் “இந்த மேடையில் இருக்கும் சிம்பு, ஆர்யா, உதயநிதி , கவுதம் மேனன் சார் இவங்க படங்களில் மட்டும் எப்பவும் காமெடியனா நடிப்பேன் . மத்த யாராக இருந்தாலும் ஹீரோவாதான் நடிப்பேன் . ஏன்னா இனிமே இப்படிதான் . ” என்று கூறி இருந்தார் .
அதையே கேள்வியாகி சந்தானத்திடம் ” ஹீரோவாக மட்டும் நடிப்பேன் என்றால் எல்லோருக்கும் அதே என்ற முடிவில் இருக்க வேண்டும் . அல்லது காமெடியனாக நடிப்பேன் என்றால் நல்ல கேரக்டர் கொடுத்தால் யார் படமாக இருந்தாலும் நடிப்பேன் என்று முடிவெடுக்க வேண்டும். ஆனால் அந்த நால்வருக்கு மட்டும் காமெடியனாக நடிப்பேன் என்றால்.. அது என்ன செண்டிமெண்ட் ஏரியாவா ? என்று கேட்டேன் .
“செண்டிமெண்ட் எதுவும் இல்ல” என்று ஆரம்பித்த சந்தானம் “ஒரு முறை ஆர்யா கிட்ட ‘ஒகே ஒகே படத்துல யாரு ஹீரோ நீங்களா ? சந்தனமா?’ன்னு டுவிட்டர்ல ஒருத்தர் கேட்டு இருக்காரு . இவர் சட்டுன்னு சந்தானம்னு சொல்லிட்டாரு. உடனே “அப்போ அந்தப் படத்துல நீங்க யாரு?”ன்னு கேள்வி வர ” நான் காமெடியன் ” அப்படின்னு ஆர்யா பதில் சொன்னாரு .
படத்துல உண்மையான ஹீரோ அவர்தான் . ஆனா அவரு எவ்ளோ பிரண்ட்லியா இருக்காரு பாருங்க. நான் இப்போ ஹீரோவாவும் நடிக்க ஆரம்பிச்ச பிறகு அவரு கூட நடிக்கறது எப்பவும் போல வசதியா இருக்கும். ஆனா மற்ற ஹீரோக்கள் படத்துல நடிக்கப் போனா , ‘ எங்க இவன் நம்மள டாமினேட் பண்ணுவானோ’ன்னு யோசிப்பாங்க . அது படத்தையே பாதிக்கலாம் . ஆனா நான் சொன்ன அந்த நாலு பேர் படங்களிலும் இந்த பிரச்னை வராது . அதான் ” என்றார் .
“சரி… நீங்க உதயநிதியை இவ்வளவு நெருக்கமா சொல்லியும் அவரு அடுத்த படமான கெத்து படத்துல நீங்க இல்லியே ?” என்றேன். “அது நாங்களா எடுத்த முடிவுதான். அவரோட படங்கள்ல நான் தொடர்ந்து நடிச்சேன் . ஒவ்வொரு படத்துலயும் வெவ்வேற மேனரிசம் கூட பண்ணினேன் . ஆனாலும் ரெண்டு பேரும் தொடர்ந்து ஒண்ணாவே நடிச்சதால நான் நினைச்ச அளவு அது எல்லாம் கவனிக்கப் படல. அதனால ஒரு கேப் விடுவோம்னு கேப் விட்டு இருக்கோம் ” என்றார் .
“கெத்து படத்துக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் படத்திலும் கூட நீங்க இல்லையாமே ?” என்று ….
…..கேட்க நினைத்தேன் .
சந்தானத்தின் முந்தைய பதில் இந்தக் கேள்விக்கும் பொருத்தமாகவே இருக்குமே .
தவிர , இந்தக் கேள்விக்கு அவரிடம் இன்னும் நல்ல பதில் கூட இருக்கலாமே.
‘இனிமே இப்படித்தான்’ வாழ்த்துகள் சந்தானம் !