ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்க , ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தொட்டால் தொடரும்’ ஆகிய படங்களில் நடித்துள்ள தமன் ஹீரோவாக நடிக்க,
‘காடு’ படத்தில் நடித்த சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடிக்க
‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘சேது பூமி’ . வளமான பூமியா ? இல்லை வறண்ட பூமியா பார்க்கலாம்.
முதுகுளத்தூர் பகுதியில் உள்ள செல்வாக்கான குடும்பம் காசிலிங்க பாண்டியத் தேவரின் (கே எஸ் ஜி வெங்கடேஷ் ) குடும்பம் . மத வேறுபாடு இல்லாமல் பழகுவதோடு,
ஊரின் முக்கியப் இஸ்லாமியப் பெரியவரை ( ஜூனியர் பாலையா) நெருங்கிய நண்பராகவும் கொண்டிருக்கிறார் காசிலிங்க பாண்டியன்.
காசிலிங்கத்தின் மகன் படித்த இளைஞன் ( நாயகன் தமன் ) . அவனுக்கு ஐ டி துறையில் சீனா சென்று பணியாற்ற வாய்ப்புக் கிடைக்கிறது . ஆனால் அவனது அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை .
அதே ஊரில் உள்ள இன்னொரு தேவர் மகனுக்கும் காசிலிங்க பாண்டியனுக்கும் ஆகாது . அந்த நபரின் விசுவாசம் மிக்க அடிமை சாமி (இயக்குனர் கேந்திரன் முனியசாமி) என்ற பயங்கர கோபக்கார முரடன் .
தனது முதலாளியை யாராவது எதிர்த்துப் பேசினாலே அடித்து உதைப்பவன் அவன் .
பக்கத்து ஊரைச் சேர்ந்த தாயில்லாத இளம்பெண் ஒருத்தி (சம்ஸ்கிருதி ), தனது அப்பா மீது அதீத பாசம் வைத்து இருக்கிறாள் . அந்த பெண்ணை நாயகன் காதலிக்கிறான் . அவளது தாய்மாமன்தான் சாமி .
தனது முதலாளி விசுவாசம் காரணமாக காசிலிங்க பாண்டியனுடனும் நாயகனுடனும் மோதும் சாமி , ஒரு நிலையில் மனம் மாறி அக்காள் மகளின் காதலுக்கு ஆதரவு தருகிறான் .
இந்த நிலையில் சாமி கொல்லப்படுகிறான் . இதை வைத்து கல்யாணம் தடைப்படும் நிலையும் காசிலிங்க பாண்டியனும் அவரது எதிர் குரூப்பும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட ,
அதைத் தடுக்க விரும்பும் நாயகன் , சீனாவுக்குப் போகும் எண்ணத்தை விட்டு விட்டு , சாமியைக் கொன்றது யார் என்று கண்டு பிடிக்க முயல, அடுத்து என்ன நடந்தது என்பதே சேது பூமி .
ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கும் கிராமிய மண்வாசனைப் படம் . மத ஒற்றுமை , அப்பா மீது மகளுக்கு இருக்கும் பாசம் , ஊர் மரியாதை , உறவுகள், தாய்மாமன் உறவின் மேன்மை…
போன்ற விஷயங்கள் படத்தில் இருக்கின்றன . சில காட்சிகள் நெகிழவும் வைக்கின்றன.
முத்துராமலிங்கத்தின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருக்கிறது . படத்தின் முதல் பலம் இதுவே
பாரதி– மோனிஷ் இரட்டையர்கள் இசையில் ”ஏன்டி சண்டாளி…” பாடல் மனசுக்குள் மலர் சிம்மாசனம் போட்டு உட்காருகிறது.
நீயாச்சு நானாச்சு என்ற பாடலில் தமன் , சம்ஸ்கிருதி இருவரும் உற்சாகமாக கலர்ஃபுல்லாக ஆடிப் பாடுகிறார்கள்.
”என் தாய் போல…” என்ற பாடல் தாயையும் தாய்மாமனையும் இழந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் மன வலியைச் சொல்கிறது .
தமன் தோற்றம் நடிப்பு மற்றும் உடல் மொழிகளால் தேவர் வீட்டுப் பையன் கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார் . பாராட்டுக்கள் .
கொஞ்சம் பதட்டம் , கொஞ்சம் பக்குவமின்மை தெரிந்தாலும் நாயகி சம்ஸ்கிருதி இயல்பான அழகாலும் பெரிதாகக் குறை சொல்ல முடியாத நடிப்பாலும் மனம் கவர்கிறார் .
கத்துவதே காமெடி என்று எண்ணி கடுப்பைக் கிளப்பி , ரொம்பவும் படுத்தி எடுக்கிறார் சிங்கம் புலி
பச்சைப் பாம்பை வைத்து காதல் வரும் காட்சி அருமை . ஆனால் அதை இன்னும் அட்டகாசமாகப் படமாக்கி இருக்க வேண்டாமா ?
விஸ்தீரணமாக ஆரம்பிக்கும் திரைக்கதை போகப் போக ஒரு குறுகிய ஏரியாவில் போய் சிக்கிக் கொள்கிறது . அதனால் கிளைமாக்ஸ் எடுபடவில்லை.
படத்தில் எல்லா நல்ல விசயமும் இருக்கிறது . ஆனால் எதுவுமே அழுத்தமாக இல்லை . தனித்தன்மை இல்லை . புதிதாக சிறப்பாக ஏதாவது சொல்ல வேண்டும் என்ற முனைப்பு எங்குமே இல்லை
இன்னும் நல்ல திரைக்கதை , இன்னும் நல்ல காட்சிகள் , இன்னும் நல்ல படமாக்கல் என்று…. எல்லா விதத்திலும் இன்னும் ஆழமும் கணமும் தேவைப்படும் படம் .