
வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ், கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி சார்பில் வெற்றிமாறன் இருவரும் தயாரிக்க,
சமுத்திரக்கனி, அட்ட கத்தி தினேஷ், கயல் ஆனந்தி , கிஷோர், முருகதாஸ் ஆகியோர் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கி இருக்கும் படம் விசாரணை .
வெளிநாடுகளில் பல விருதுகளை வென்ற இந்தப் படம் , சந்திர குமார் என்பவர் தன் வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் இருந்து ஆந்திராவின் குண்டூருக்கு பெயிண்டிங் வேலை செய்யப் போய், பூங்காவில் படுத்து உறங்கி பகலில் வேலை செய்யும் நண்பர்கள் நால்வர் .
அதில் ஒருவனான பாண்டிக்கு (அட்ட கத்தி தினேஷ்) தமிழ் நாட்டுக்காரர் ஒருவர் (அல்வா வாசு) நடத்தும் மலிகைக் கடையில் வேலை .
அந்த வழியாக ஒரு காரில் போகும் ஒரு தெலுங்குப் பெண் (கயல் ஆனந்தி) பாண்டியை காதல் பார்வை பார்க்கிறாள்.
ஆனால் அவள் குண்டூர் பிருந்தாவன் காலணி என்ற பணக்கார ஏரியாவில் உள்ள ஒரு வசதியான தெலுங்கர் வீட்டின் வேலைக்காரிதான் .
அந்தப் பெண்ணை அந்த வீட்டு முதலாளி ரொம்ப கொடுமை செய்ய , அந்தப் பெண் பாண்டியிடம் உதவி கேட்கிறாள். . காதல் மயக்கத்தில் பாண்டியும் உதவி செய்வதாகச் சொல்கிறான் .
அடுத்த நாள் குண்டூர் போலீசார் மளிகைக் கடையில் இருந்த பாண்டியையும் பூங்காவில் தூங்கும் மற்ற நண்பர்களையும் ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போய் , நாயடி பேயடி என்று மரண அடி அடிக்கிறது.
தெலுங்குப் பெண்ணுக்கு உதவப் போய் , அதனால் வந்த பிரச்னை என்று எல்லோரும் நினைக்க, உண்மை அதுவல்ல என்பது அடுத்த ரெண்டு காட்சியிலேயே தெரிகிறது .
பிருந்தாவன் காலைனியில் உள்ள அதிகார பலமும் பண பலமும் உள்ள ஒருவர் வீட்டில், கோடி ரூபாய் வரை பணம் கொள்ளை போயிருக்க, குற்றவாளியை பிடிக்காமல் போலீசும் அதிகாரிகளும் திணறுகிறார்கள்.
அதே நேரத்தில் அரசியல் ரீதியாக வரும் பிரஷர் தாங்க முடியாமல், குற்றவாளியைப் பிடித்து பணத்தை மீட்டு விட்டதாகச் சொல்ல, பணத்தைக் கூட ரெடி பண்ணி விடுகிறார்கள் .
ஆனால் இப்போது குற்றவாளி என்று ஒத்துக் கொள்ளத்தான் ஆள் வேண்டும் . பணம் திருடிய கும்பலில் ஒருவன் தமிழ் பேசியதாக சொல்லப்பட்டதை அடுத்து ,
தமிழ்ப் பசங்களான பாண்டி உள்ளிட்ட நால்வரை பிடித்து அடித்து ஒத்துக் கொள்ளச் சொல்கிறது குண்டூர் போலீஸ் .
விதம் விதமான சித்திரவதைகளை அனுபவித்தும் பொய்க் குற்றச் சாட்டை ஒத்துக் கொள்ள மறுக்கிறான் பாண்டி.
ஆனால் ஒரு நிலையில் பசி பட்டினி, மிகக் கொடூரமான சித்திரவதைகள் காரணமாக செய்யாத திருட்டை செய்ததாக ஒத்துக் கொள்கிறார்கள் .
கொள்ளை நடந்த வீட்டுக்கு இவர்களைக் கொண்டு போய் ‘கொள்ளை அடித்ததை ‘ நடித்து எல்லாம் காட்டச் சொல்லி , பதிவு செய்து கொள்கிறது போலீஸ் .
கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு , இனி தப்பிக்கவே முடியாது என்று பாண்டி நினைக்கும் போது, ஒரு சம்பவம் நடக்கிறது.
தமிழ் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் முன்பு ஆட்சியில் இருந்த போது ஊழல் செய்து சம்பாதித்த பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை மெயின்டைன் செய்யும் ஆடிட்டர் ஒருவரை (கிஷோர்),
குண்டூர் போலீஸ் ஒரு வழக்கில் கைது செய்து கோர்ட்டுக்குக் கொண்டு வருகிறது .
இப்போது தமிழ் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரின் செல்வாக்கு வளர்ந்து வருவதால் (ஆஹாங்…!!!) அடுத்த மீண்டும் அவர்தான் முதல்வர் என்ற கருத்து வளர்ந்து வரும் நிலையில்,
ஆடிட்டரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராகப் பேச வைத்து , வளரும் செல்வாக்கை உடைக்க ஆளுங்கட்சி திட்டமிடுகிறது .
அதற்காக ஒரு போலீஸ் அதிகாரி (சமுத்திரக்கனி ) தலைமையில் ஒரு போலீஸ் டீமை அனுப்பி வைக்கிறார் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் .
குண்டூருக்கு வரும் அந்த போலீஸ் அதிகாரி கோர்ட்டில் எதிர்பாராத விதமாக பாண்டி மற்றும் நண்பர்கள் சொல்வதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நீதிபதியிடம் சொல்ல ,
பாண்டி மற்றும் நண்பர்களை கோர்ட் முழுதாக விடுதலை செய்து விடுகிறது .
அதே நேரம் , ஆடிட்டர் மீதான வழக்கில் அவரைக் குற்றவாளி என்று அறிவித்து ஜெயிலுக்கு அனுப்புகிறது கோர்ட்.
எனவே கோர்ட்டில் இருந்து ஆடிட்டரை ஜெயிலுக்குக் கொண்டு போகும் வழியில் அவரை கடத்த முடிவு செய்கிறது , தமிழக போலீஸ் டீம். அதற்கு பாண்டியின் உதவியைக் கேட்கிறார்,
பாண்டி மற்றும் நண்பர்களைக் காப்பாற்றிய தமிழ் போலீஸ் அதிகாரி .
செய்யாத குற்றத்தில் இருந்து காப்பற்றியதற்கு நன்றிக் கடனாக, ஆளைக் கடத்தும் குற்றம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாண்டி மற்றும் நண்பர்கள், அப்படியே செய்கிறார்கள் .
ஆடிட்டரைக் கடத்திக் கொண்டு எல்லோரும் தமிழகம் வருகிறார்கள் . வழியில் ஒரு நண்பன் இறங்கிக் கொள்ள , மற்ற மூன்று நண்பர்களும் சம்மந்தப்பட்ட தமிழ் அதிகாரியின் போலீஸ் ஸ்டேஷன் வருகிறார்கள்.
அங்கே ஆடிட்டரிடம் விசாரணை நடக்கிறது . ”சில நாட்கள் தங்கி , ஆயுத பூஜைக்காக போலீஸ் ஸ்டேஷனை சுத்தம் செய்து கொடுத்து விட்டு போங்க” என்று பாண்டி மற்றும் நண்பர்களிடம் போலீஸ் அதிகாரி சொல்ல ,
அப்படியே செய்ய ஆரம்பிக்கிறார்கள் பாண்டி உள்ளிட்ட நண்பர்கள் . அதற்குள் அரிசியல் வானிலை மாறுகிறது .
ஆடிட்டரை அடித்து உதைத்து பேச வைக்க ஆளுங்கட்சி சார்பாகச் செயல்படும் இந்த போலீஸ் அதிகாரி முயல ,
அவரை ஸ்டேஷனில் வைத்தே கொல்ல எதிர்க்கட்சி சார்பில் செயல்படும் இன்னொரு போலீஸ் அதிகாரி முயன்று, அதில் வெற்றியும் பெறுகிறார் .
கொல்லப்பட்ட ஆடிட்டரை அவரது வீட்டில் கட்டித் தூக்கி தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்கிறார்கள் .
இதை எல்லாம் பாண்டி மற்றும் நண்பர்கள் எதிர்பாராத விதமாக தெரிந்து கொள்ள, ‘ பசங்க விசயத்தை வெளியே சொன்னால் பிரசனை வரும்’ என்று எண்ணும் போலீஸ் குழு அவர்களையும் கொலை செய்ய முடிவு செய்கிறது
குற்றவாளிகள் பிடிபடாமல் இருக்கும் ஏ டி எம் கொள்ளைகள் வழக்கில், பாண்டி மற்றும் நண்பர்களை குற்றவாளியாக அறிவித்து , என்கவுண்டர் மூலம் போட்டுத் தள்ள முயல்கிறது போலீஸ் குழு .
பாண்டி குரூப்பை காப்பாற்றி அழைத்து வந்த அந்த போலீஸ் அதிகாரியையும் அதில் ஒருவராக இருக்கச் சொல்லி வற்புறுத்துகிறது. வேறு வழியில்லாத நிலையில் அவரும் சம்மதிக்க ,
அந்த போலி என்கவுண்டர் இரவில் என்ன நடந்தது என்பதுதான் விசாரணை .
ஆந்திர போலீஸ் ஸ்டேஷனில் பாண்டி மற்றும் நண்பர்களுக்கு நடக்கும் கொடுமைகளை விதிர்விதிர்க்கும்படி படமாக்கி இருக்கிறார் வெற்றி மாறன் . அடிப்பது போல நடிக்க வைத்தார்களா ?
இல்லை நடிக்க வைக்கிறேன் என்ற பெயரில் நிஜமாக அடித்து உடைத்தார்களா என்று சந்தேகப் படும் அளவுக்கு அவ்வளவு தத்ரூபம் .
நாமே ஒரு கொடிய போலீஸ் ஸ்டேஷனில் அப்பாவிக் கைதியாக மாட்டிக் கொண்ட உணர்வு .
சாப்பிடாமல் இருக்கும் கைதிகளை சாப்பிட வைக்க செய்யும் வஞ்சகத்தனம் .. அதுவும் அந்த பச்சைப் பனைமட்டையடிக் காட்சியின் குரூரம் குலை நடுங்க வைக்கிறது.
இந்தக் காட்சிகளில் தினேஷ் , முருகதாஸ் உள்ளிட்ட நடிகர்கள் கொடுத்திருக்கும் ஒத்துழைப்பு அபாரமானது . போற்றுதலுக்குரியது. கொண்டாடப்பட வேண்டியது.
தவிப்பான நடிப்பில் உணர்ந்து நடித்து அசத்துகிறார் சமுத்திரக்கனி .
பாண்டியிடம் தெலுங்குப் பெண் உதவி கேட்கும் காட்சி படமாக்கப்பட்ட விதம், அடடா ..! ஒரு ரம்மியக் கவிதை .
தூசி படிந்து கிடக்கும் ஆந்திர போலீஸ் ஸ்டேஷன்களில் சித்திரவதை அப்படி என்றால் , நவீனமான தமிழ் நாட்டு காவல் நிலையங்களில் போலீசாரின் குற்ற நடவடிக்கைகளில் உள்ள உச்சபட்ச அராஜகத்தை
இயல்பாகக் குறிப்பால் உணர்த்துகிறது வெற்றி மாறனின் இயக்கம் . சூப்பர்
ஆடிட்டர் கதாபாத்திரத்தை மிக கெத்தாகக் கட்டி விட்டு, சட்டென்று சரித்து நொறுக்கி தரை மட்டமாக்கிப் புழுதி கிளப்பும் விதத்தில் திரைக்கதையும் இயக்கமும் ஜொலிக்கிறது .
ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு சூழலை மிகவும் யதார்த்தப்படுத்துகிறது. கிரேட் . . .
மறைந்த கிஷோரின் படத் தொகுப்பு ஒரே நேரத்தில் மகிழவும் (என்ன ஒரு செய் நேர்த்தி !) நெகிழவும் (இப்படி ஒரு திறமைசாலியை இழந்து விட்டோமே) வைக்கிறது
அதிகார வர்க்கத்தின் அடிமைகளாக போலீஸ் துறை எந்த அளவுக்கு கேடு கெட்டுப் போயிருக்கிறது என்று திரைக்கதையில் சொல்லும் விதம் அபாரம்.
அதுவும் அப்பாவிகளை குற்றவாளிகளாக ஜோடித்து பலியிடுவதில் அனுபவம் வாய்ந்த ஒரு காவல்துறை அதிகாரி ,
இந்த அநியாயத்தை செய்கையில் சொதப்பலாக நடந்து கொள்ளும் ஜூனியர் அதிகாரிகளை பார்த்து ” இப்படியெல்லாம் ‘தொழில்’ தெரியாதவங்களை கட்டிக்கிட்டு மாரடிக்க வேண்டி இருக்கு’ என்று,
அடிக்கடி சலித்துக் கொள்ளும் பந்தா.. வயிறெரிய வைக்கிறது .
ஆனால் அதே நேரம் …
படம் சறுக்கிய ஏரியாக்களும் எக்கச் சக்கம் .( விருதெல்லாம் வாங்கி விட்டதால் கொண்டாட வேண்டும் என்று கட்டாயம் இல்லை . விருதுப் பக்கமே போகாத எத்தனயோ அற்புதப் படங்கள் நம்மிடம் உண்டு .)
சமுத்திரக்கனி நடித்து இருக்கும் போலீஸ் அதிகாரி கேரக்டருக்கும் அவர் படத்தில் தோன்றி இருக்கும் ஆரம்பக் காட்சிக்கும் என்ன சம்மந்தம் ? ஏன் அப்படி ஒரு காட்சி ?
அதனால் அந்த கேரக்டரைசேஷனுக்கும் படத்துக்கும் கதைக்கும் என்ன பலன் ? எதற்கு அந்த பம்மாத்து .
பாண்டி மற்றும் நண்பர்களை ஆந்திர போலீஸ் பிடித்துக் கொண்டு போன அடுத்த காட்சிகளிலேயே தெலுங்கும் பெண் மீதான காதலுக்கும் கைதுக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லி ஊத்தி மூடி விட்ட நிலையில் ,
அந்த காதல் டிராக் எதுக்கு ? அதிலும் அவள் காரில் போகிற பணக்கார பெண் என்று கிம்மிக்ஸ் காட்டுவது எல்லாம் , மிக யதார்த்தமான இந்தப் படத்துக்கு எதுக்கு ?
உண்மையில் லாக்கப் நாவலை இந்தப் படத்தின் முதல் பாதி வரைதான் பயன்படுத்துகிறார் வெற்றிமாறன் .
நாவலில் கடைசியில் ஆந்திர கோர்ட்டு நீதிபதியே ”குற்றம் பண்ணினேன்னு நீ ஒத்துக்கோ . ஏன்னா அந்த அளவுக்கு நீ தண்டனையை அனுபவிச்சுட்ட. ஒத்துகிட்டா உடனே உங்களை ரிலீஸ் செய்துடுவேன்”
— என்று சொல்வதும் அதுவரை செய்யாத குற்றத்தை ஒத்துக் கொள்ள மறுக்கும் நாயகன் கடைசியில் வேறு வழி இல்லாமல் கண்ணீரோடு ஒத்துக் கொண்டு ,
குற்றவாளியாக விடுதலையாகி வெளிவருவதும் ஓர் இனம் புரியாத வலியை ஏற்படுத்தும் .
பேசாமல் அதையே முழு படமாக எடுத்து இருக்கலாம் . தான் குற்றம் செய்யவில்லை என்ற உண்மைக்காக மானம், மரியாதை, ஆரோக்கியம் , சந்தோசம் ,
அந்த தெலுங்குப் பெண்ணின் காதல் எல்லாவற்றையும் இழந்தான். ஆனால் அத்தனையும் இழந்தும் கடைசியில் ஜட்ஜ் சொன்னபடி வேறு வழியின்றி குற்றவாளி என்று பெயர் வாங்கி வெளியே வந்தான் என்று சொல்லி,
குண்டூரில் இருந்து நடைப்பிணமாக பாண்டி தமிழ்நாட்டுக்கு பஸ் ஏறினான் என்று படத்தை முடித்து இருந்தால் படம் மிக சிறந்த படைப்பாக வந்திருக்கும் .
ஆனால் அதை செய்யாமல் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு ……… பாட்சா ‘தற்கொலை’ சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு படத்தின் இரண்டாம் பாகத்தை அமைத்துள்ளார் வெற்றிமாறன் .
தப்பில்லை . அது அவரது படைப்புரிமை . ஆனால் அதை மேலோட்டமாக சொன்ன விதம் வெகு ஜன மக்களுக்குப் புரியும்படியாக இல்லை .
சரி சொன்னதுதான் சொல்லியாச்சு . இது போன்ற அதிகார வர்க்கக் கொடுமைகளை தடை செய்ய முடியுமா ? அதற்கு என்ன வழி ? என்று ..
ஓர் ஐந்தாம் வகுப்பு மாணவனின் அரையாண்டுத் தேர்வு அஞ்சு மார்க் கட்டுரைக்கு இணையாகவாவது இந்தப் படம் ஏதாவது பேச வேண்டாமா ?
அட அதை விடுங்கள் .. இது போன்ற அநியாயத்தில் சிக்கிக் கொள்ளும் ஓர் அப்பாவி தப்பிக்க என்ன வழி இருக்கு என்று ஒரு கோடு கூட போட்டுக் காட்டாத நிலையில் படம் வெகுஜனத்தை எப்படிக் கவரும் ?
நடந்த இந்த உண்மை சம்பவத்தில் வழியிலேயே இறங்கிக் கொண்டு உயிர் பிழைத்த அந்த , பாண்டியின் நண்பர்தான் இந்த நாவலை எழுதிய சந்திரகுமார் என்று படத்தின் கடைசியில் காட்டி ,
அயல்நாட்டில் இந்த விசாரணை படம் விருது வழங்கும் விழாவில் அவரும் கலந்து கொண்டு கையாட்டினார் . சில வார்த்தைகள் பேசினார் என்று …
இறுதியில் இணைத்துக் காட்டுவதால் மட்டுமே மக்கள் தியேட்டருக்கு வந்து விடுவார்களா ?
அப்படியானால் என்ன செய்து இருக்க வேண்டும் ?
சம்மந்தப்பட்ட சந்திர குமாரை இங்கே நம்மூர் மீடியாக்கள் முன்பு உட்கார வைத்து பேச வைத்திருக்க வேண்டும். அவரைப் பட்டிய பற்றிய கட்டுரைகள் , பேட்டிகள் இவற்றை கொண்டு வந்து இருக்க வேண்டும்.
வெகு ஜன மக்களுக்கு அவரை அறிய வைத்து ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கி அப்புறம் படத்தை வெளியிட வேண்டும் .
காலை இழந்த பரத நாட்டிய மங்கை சுதா சந்திரனின் வாழ்க்கையை மயூரி என்ற பெயரில் படமாக எடுத்த போது அந்த பட நிறுவனத்தினர் இதைத்தான் செய்தாகள் . ஒரு பிரபல்யத்தை எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு,
அப்புறம் படத்தை ரிலீஸ் செய்தார்கள் . இல்லாவிட்டால் அந்த மயூரி படம் நான்கு நாட்கள் கூட ஓடி இருக்காது.
அதே போல சுதா சந்திரனின் நிஜ வாழ்வில் இல்லாத நிலையிலும் படத்தில் காதல் என்ற ஒன்றை சேர்த்து படத்தில் எக்ஸ்ட்ரா சுவாரசியம் கூட்டினார்கள்
அதுபோல கூத்தடிக்கத் தேவை இல்லை என்றாலும் , ஏதோ ஒரு பொருத்தமான விஷயம் , ஒரு முடிவு , மக்களுக்குத் தேவையான அவர்களை ஈர்க்கும் ஒரு கதைப்போக்கு
இந்த விசாரணை படத்துக்கும் தேவைப் படுகிறது . அது இல்லாத விசாரணை படம் , தலை இல்லாத முண்டமாக்வே காட்சி அளிக்கிறது .
எனவே,
விசாரணை ….. கண் துடைப்புக் கமிஷன் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————–
‘இயக்குனர்’ வெற்றி மாறன், தினேஷ் , முருகதாஸ் மற்றும் நண்பர்களாக நடித்தவர்கள், டி.ஈ கிஷோர், ராமலிங்கம்