பீப் (தமிழ் வார்த்தைதான்) பாடல் குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு சிம்பு அளித்த டெலிபோன் பேட்டி ஒலி- ஒளிபரப்பானது .
“பாடல் அனிருத் இசை அமைத்ததுதானா?” என்று பேட்டியாளர் கேட்டபோது “இல்லை அவருக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை” என்றார் சிம்பு . சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அது பற்றி பேட்டியாளர் கேட்க , ”அதான் அனிருத்துக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லன்னு சொல்லிட்டேன்ல? அப்புறம் ஏன் திரும்ப திரும்ப அதையே கேட்கறீங்க ?” என்று சற்றேறக்குறைய கோபப்பட்டார் சிம்பு .
”அப்படியானால் உங்க அப்பா காவல்துறைக்கு கொடுத்த புகாரில் இசையமைத்தது சிம்பு என்று குறிப்பிட்டுள்ளாரே .. அது எப்படி ?” என்று செய்தியாளர் கேட்டிருக்க வேண்டும் . ஆனால், பாவம் அவருக்கு அந்த விஷயம் தெரியாது போல ..! எனவே . கேட்கவில்லை .
இப்படியாக சிம்பு நேக்காக சொல்லும் பதில்களை எல்லாம் தாண்டி ஒரு நிலையில் “என்ன இருந்தாலும்…. டம்மி வார்த்தைப் பாடல்தான் என்றாலும்….வெளிவராத பாடல்தான் என்றாலும்…. அந்த கெட்ட வார்த்தையைப் போட்டுதான் அந்த வரியை டம்மிக்குக் கூட பயன்படுத்த வேண்டுமா ? ” என்று , பேட்டியாளர் ஒரு வழியாக கேட்டு விட்டார் . இந்தப் பேட்டியில் அவர் செய்த ஒரே ‘சாதனை’ இதுதான் )
அதற்கு சிம்பு சொன்ன பதில் என்ன தெரியுமா ? “ஏங்க.. அதுல என்ன தப்பு ? அதுவும் தமிழ் வார்த்தைதானே ? தமிழ்லதாங்க அதிகமான கெட்ட வார்த்தைகளே இருக்கு. ” என்பதுதான் . அதை பேட்டியாளர் சரியான பதிலாக ஏற்றுக் கொண்டு அடுத்த விசயத்துக்குப் போனார் , என்பதுதான் பூகம்ப அதிர்ச்சி .
“247 எழுத்துகள் உள்ள ஒரு மொழியில எல்லா விசயத்துக்கும் நிறைய வார்த்தைகள் இருக்கத்தான் செய்யும் . கெட்ட வார்த்தைகளே நிறைய உள்ள ஒரு மொழியில் நல்ல வார்த்தைகள் இன்னும் நிறைய இருக்குமே . அவற்றில் ஒன்றை வைத்து டம்மி பாடலை பாடி இருக்கலாமே ?” என்று அந்தப் பேட்டியாளர் கேட்டிருகக வேண்டும் . கேட்கலீங்க .
இது கூட பரவாயில்லை .
ஒரு நிலையில் சிம்பு துக்கம் தொண்டையை அடைக்க , “சின்ன வயசுல ஒரு பக்கம் எங்கம்மா பாடப் புத்தகத்தை படிக்க சொல்லி வற்புறுத்துவாங்க . . எங்கப்பா நடிக்கறதுக்கு வசனம் கொடுத்து மனப்பாடம் பண்ண சொல்லி வற்புறுத்துவாரு. ரெண்டையும் பண்ணி கஷ்டப் பட்டேன் தெரியுமா? ” என்று குரல் கம்ம பேச ஆரம்பித்து ,
அப்படியே லேசாக அழும் பாணியில் ” நான் முட்டி போட்டு டான்ஸ் ஆடி கஷ்டப்படுறேன் . டாக்டர் கிட்ட போனா ‘ இப்படி ஆடினா காலே போய்டும்’னு சொல்வாரு . அதையும் மீறி கஷ்டப்பட்டு ஆடினேன் . யாருக்காக? எல்லாம் இந்த மக்களுக்காக. தமிழ் மக்களுக்காக ” என்று உருகினார் .
செய்தியாளர் சோக அமைதியோடு அதை அங்கீகரித்தார் என்பதுதான் கொடுமை
சிம்பு ஒன்றும் ஆடி சம்பாதித்த காசில் பள்ளிக்கூடம் கட்டவில்லை . குளம் வெட்டவில்லை . ஆஸ்பத்திரி அமைக்கவில்லை. அவருக்குதானே வைத்துக் கொண்டார்.
“சிம்பு சார். வாழ்க்கையில் வெற்றி பெற்ற எல்லாருமே இப்படி கஷ்டங்கள் இழப்புகளோடுதான் உயர்ந்து இருக்கிறார்கள். நீங்க பட்ட கஷ்டங்களால் நீங்க புகழோடும் செல்வத்தோடும் இருக்கீங்க . செய்த தவறை நியாயப்படுத்த இதெல்லாம் சரியான வாதமா ?” என்று பேட்டியாளர் கேட்டிருக்க வேண்டும் . ஆனா கேட்கவே இல்லீங்களே …
இது மட்டுமல்ல .. அடுத்ததுதான் தலைப்புக்குரிய மற்றும் காமெடி மேட்டர் .
தனது பேச்சினிடையே சிம்பு முதல் முறை ” அட்றா அவள .. ஒதடா அவள… ‘ ன்னு எல்லாம் எழுதறாங்க . அவங்களை எல்லாம் யாரும் ஒண்ணும் சொல்லல” என்று லைட்டாக ‘பொயட்டு’ தனுஷை லேசாக ஒரு குத்து குத்தினார் .
அதைப்பற்றி பேட்டியாளர் எதுவும் பதில் சொல்லாத நிலையில் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அதை அழுத்தமாக வலியுறுத்தி ”அட்றா அவள .. ஒதடா அவள… வெட்றா அவள… தேவையே இல்ல’ன்னு எல்லாம் எழுதறாங்க. அதையெல்லாம் யாரும் கேட்கவே இல்ல… அதை விடவா இந்தப் பாட்டு மோசம் ?” என்று போட்டார் ஒரு போடு .!
அதாவது இந்த நிலையிலும் ‘டீடெயிலாக ‘தனுஷை சீண்டி அவரை போட்டுத் தாக்க தயங்கவில்லை.
பேட்டியாளர் — இத்தனைக்கும் அவர் ஒரு பெண் — உடனே சிம்புவிடம் என்ன கேட்ட்ருக்க வேண்டும்?
” அந்த பாடல் வரிகள் காரணமாக பொதுவெளியில் பெண்கள் சந்தித்த அவமானங்கள் பாலியல் கிண்டல்கள் ஏராளம்தான். மறுக்கவில்லைதான் . ஆனால் அதை வைத்து நீங்க ஒரு கேவலமான வார்த்தையை பயன்படுத்தி எழுதியது சரியா ? இந்த ரெண்டு பாட்டில் எது பெண்களுக்கு எதிரானது என்ற விவாதம்தான் உங்களுக்கு முக்கியமா சிம்பு சார் ? ” என்று கேட்டிருக்க வேண்டும் . ஆனால் கேட்கவில்லை என்பதுதான் கொடுமை .
ஒரு பத்திரிக்கையாளரின் பேட்டியை விமர்சனம் செய்வது நமது வேலையோ அடிப்படை நோக்கமோ இல்லை . அனால் இங்கே பேசவேண்டியதாகி விட்டது .
காரணம் ?
சிம்புவின் அந்த பேட்டியை ஒரு வெகுஜன மனிதன் கேட்டால் ” ஐயோ… பாவம் … சிம்பு . அவரை வேணும்னே எல்லாரும் கஷ்டப்படுத்தறாங்க போல ” என்ற உணர்வே ஏற்படும் . இது எப்பேர்ப்பட்ட பெரும் விபத்து !
பிரபல ஊடகங்களுக்கு ஒரு வார்த்தை .
இது போன்ற சென்சிடிவ் விசயங்களில் பேட்டி எடுப்பவர் எந்த அளவுக்கு அதற்குத் தகுதியானவர் என்று பார்த்து அந்தப் பொறுப்பைக் கொடுங்கள் . மீறி, தவறாக வந்து விட்டால் அதை ஒலி ஒளிபரப்பாதீர்கள்.
சிம்புவுக்கு ஒரு வார்த்தை …. உங்களுக்கு சரியாகப் பேசத் தெரியவில்லை . அல்லது நியாயமாகப் பேச வரவில்லை . இன்னும் இன்னும் ” நான் தப்பு செய்யல . நான் யாருக்கும் பயப்படல . நான் எங்கேயும் ஓடமாட்டேன் ”என்பது …. இதெல்லாம் இன்னும் கூட இந்த விசயத்தில் நடுநிலையாக யோசிப்போருக்குக் கூட உங்கள் மேல் இன்னும் இன்னும் எரிச்சலையே ஏற்படுத்துகிறது . எனவே கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள்