SSS பிக்சர்ஸ் சார்பில் சிராஜ் மற்றும் நிலோஃபர் சிராஜ் தயாரிக்க, விமல், சாயாதேவி, சிராஜ் , சரவணன் ,ரமா, ஜெயபாலன்,விஜய் முருகன், சரவண சக்தி, நடிப்பில் போஸ் வெங்கட் இயக்கி இருக்கும் படம்.
கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைப் படிக்க விடக் கூடாது என்பதற்காக, தாங்கள் கட்டிய நாட்டார் தெய்வக் கோயிலையும் அதன் வழியான பக்தியையும் பயன்படுத்துகிறது நடுநிலை சாதிக் கூட்டம்
அதையும் மீறி அறை நூற்றாண்டுக்கும் முந்தைய அன்றைய உண்மையான திராவிடர் கழகத்தின் துணையோடு அங்கு ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவுகிறார்கள் சிலர்.
அதன் ஆசிரியராக சேரும் தாழ்த்தப்பட்ட நபர் ஒருவர் அந்தப் பள்ளியை மேலும் முன்னேற்ற போராட, அவர் மகனும் படித்து வளர்ந்து பள்ளியை வளர்க்கிறார் ( சரவணன் ). ஆனால் முன்னவர் மன நோயாளி ஆகிறார் .

அவரை ஊரே கிறுக்கு வாத்தியார் என்று அழிகிறது இப்போது பள்ளியை வளர்க்கும் ஆசிரியரின் மகனுக்கு (விமல்) , கிறுக்கு வாத்தியார் பேரன் என்பது அவமானமாகவே இருக்கிறது .
நாட்டார் தெய்வத் திருவிழாவின்போது சாமி ஆவேச ஊர்வலம் போகும் வழியில் பள்ளி இருப்பதாகச் சொல்லி அதை இடிக்க முயல்கின்றனர் நடுநிலை சாதியியானர்.
அதே ஊர் பள்ளிக்கு வாத்தியராக வரும் பேரன் நண்பர்களோடு ஜாலியாக இருக்கிறான் . சக டீச்சரை (ஜீவா கண்ணன்) காதலிக்கிறான் .
ஒரு நிலையில் தாத்தா போலவே அப்பாவும் விபத்தில் சிக்க, அவரது நடவடிக்கைகளால் ஊர் அவரையும் கிறுக்கு என்று அழைக்க, ஒரு நிலையில் பேரனுக்கும் இதே நிலை வர , அப்புறம் நடந்தது என்ன என்பதே சார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்கு கல்வி தர அரசே தயாராக இருந்தாலும் சாதி ஆணவ மற்றும் பணக்கார ஆட்கள் அதைத் தடுக்க பக்தியையும் எப்படி பயன்படுத்துவார்கள் என்பதை சொல்லும் அந்த மூலக் கதைதான் இந்தப் படத்தின் பெரும்பலம், ஒரே பலம் .
விமல் நடிப்பு பரவாயில்லை. தோற்றப் பொருத்தம் சிறப்பு.
தயாரிப்பாளர் சிராஜ் ஒரு யூகிக்க முடிந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார் . விஜய் முருகன் இயல்பாக தெறிப்பாக நடித்துள்ளார் .
பேரனான நாயகன் கதாபாத்திரத்தையும் பைத்தியமாக்க பால்ரஸ் வைத்து அடிக்கும் காட்சி வித்தியாசம் என்றாலும் பயமுறுத்தவும் செய்கிறது . யாரும் கத்துக்காம இருந்தா சரி.

ஊரில் உள்ள பள்ளிக் கூடத்துக்கு வேளைக்கு வரும் நாயகன் ஜாலியாக குத்துப்பாட்டுக்கு ஆடுகிறான் எனும்போதே மொத்தக் கதையும் புரிந்து விட்டது .எல்லோருக்கும் புரிந்து விடும் .
லாஜிக் இல்லாத காட்சிகள், தப்பான மேக்கப்பில் கதாநாயகி, ரமா மற்றும் பள்ளி சிறுவன் போன்றோரின் அதீத செயற்கை நடிப்பு, நடிகர்களின் நடிப்பின் மீது இயக்குனரின் கண்ட்ரோல் இல்லாமை, பலன் தராத இசை , ஒளிப்பதிவு, எடிட்டிங் , சுவாரஸ்யம் அற்ற திரைக்கதை, ஒரு கட்டுரையைக் கூட சுவாரஸ்யமாக எழுதும் வழக்கமுள்ள பத்திரிக்கையாளர் சுகுணா திவாகர் எழுதியும் உப்பு சப்பில்லாத வசனங்கள், அழுத்தமில்லாத காட்சிகள் , பக்குவமற்ற இயக்கம், இவை பலவீனம்
எனினும் சொல்ல வந்த கருத்துக்காகப் பார்க்கலாம் .