ஒரு தயாரிப்பாளரின் வேதனை வாக்குமூலம்

 

மனசாட்சியின் குரல்
மனசாட்சியின் குரல்

“சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள்  மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை”

— செலவாளிக் கூண்டில் ஏறி நின்று  இப்படிக் குமுறுகிறார்  பிரபல  தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில்  ‘சாமி இயக்கத்தில் ‘கங்காரு’ என்கிற படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் ஏப்ரல் 24ல் 150 திரையரங்குகளில் வெளியாகிறது .


அப்படி என்ன சினிமாவில் உங்களுக்கு கஷ்டம் என்று கேட்டால், குமுறல்களால் குண்டு மழை பொழிகிறார் சுரேஷ் காமாட்சி

”சினிமாவில் லைட்மேன் முதல் ஸ்டார்கள் வரை அனைவருக்கும்    சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்தான். இப்படி, அனைவருக்கும் ஊதியம் வழங்கும் தயாரிப்பாளர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம். 

தயாரிப்பாளர் படும் பாடுகளை,  அவர்கள் சந்திக்கிற சவால்களை சொல்லி மாளாது.

ஒரு படம் திட்டமிட்டுத் தொடங்குவது முதல் எடுத்து சென்சார் ஆகி வெளியிட்டு முடிப்பதற்குள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்  கொஞ்ச நஞ்சமல்ல.” என்றவர்,  ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினார்.

ஒரு படக்குழுவை உருவாக்கி முடிப்பதே பெரும் சவால்தான். முதலில் இயக்குநர் ஒரு பட்ஜெட் போடுவார். அந்த பட்ஜெட்டுக்குள் சொன்ன அந்த தேதிக்குள்  முடிப்பதாக ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க முடிவதில்லை. திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் எப்படியும் இழுத்துக்கொண்டு போய்விடும். நாட்கள் அதிகமானால் செலவும் உயரும். செலவு அதிகமானால் முதலீடும் கூடும் வாங்கிய கடனும் கூடும். வட்டியும் அதிகமாகும்.

சொன்னதேதியில் முடிக்க முடியவில்லையே என்று இயக்குநரைக் கேட்க முடியாது- அவர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. சம்பளப் பிரச்சினை என்றால் மட்டும் வருவார்கள். சம்பளத்தில் 5 லட்சம் குறைத்து கொடுத்தால் மட்டும் விடமாட்டார்கள்.

படப்பிடிப்பில் பிரச்சினை!

படப்பிடிப்பு தொடங்கினால் தினம் தினம் செலவுதான். அன்றன்றைக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும். .இப்படி 24 துறையினருக்கு சம்பளம் தர வேண்டும். 2, 3நாள் கூட பொறுக்க மாட்டார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஒரு லைட்மேன் நினைத்தால் கூட படப்பிடிப்பை நிறுத்த முடியும். ஒரு ஹேர் டிரஸ்ஸர் நினைத்தால் கூட படப்பிடிப்பை நிறுத்தமுடியும்.ஆனால் இவ்வளவு பேருக்கும் சம்பளம் தரும் தயாரிப்பாளர் நினைத்தால் எதுவுமே செய்ய முடியாது. 

அப்படி ஒரு அனுபவம் எனக்கும் நடந்தது. ஒரு லைட்மேன் என் படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார் . என்ன கொடுமை பாருங்கள். கொடைக்கானலில் மலையில் படப்பிடிப்பு நடக்கிறது. பணம் வந்து சேர முன்னேபின்னே ஆகலாம்.  2 நாள் கூட பொறுக்க முடியவில்லை. நிறுத்தி விட்டார்கள். திரையுலகிலேயே பாவப்பட்ட ஜென்மம் என்றால் அது தயாரிப்பாளர் வர்க்கம் மட்டும்தான்.

திரையுலகில் சங்கங்கள் என்பது உரிமைகளை பெற ஊதியப் பிரச்சினை தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்தான். ஆனால் அதன் பொறுப்பில் உள்ளவர்கள் பலர் அடாவடி செய்பவர்களாக –  மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி நெருக்கடி தந்து மிரட்டுகிறார்கள். நான் ஒட்டுமொத்தமாக சொல்லவில்லை. ஆனானப்பட்ட தயாரிப்பாளர்கள் கூட நான் சங்கங்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லையென்று சொல்லமுடியாது

பேட்டா தாமதமானால் யார் யாரோ  போனில் மிரட்டுகிறான். உன் படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்கிறான். முன்னே பின்னே பார்க்காத யார் யாரோ  படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்கிறான் . படப்பிடிப்பு நிறுத்தப் பட்டால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு என்று அவர்களுக்குத் தெரியுமா?

24 துறைக்கும்  சம்பளத்தை கொடுக்க முடியாமல் யாரும் ஏமாற்றிவிட முடியாது வாங்குவதற்கு எவ்வளவோ வழி முறைகள் உள்ளன.   ஆனால் தயாரிப்பாளர்களுக்கு என்ன உத்திரவாதம்? லைட் மேனுக்குக் கூட குறைந்த பட்ச உத்திரவாதம் உண்டு.

தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் எப்போது திரும்பி வரும் எப்படி வரும்? எந்த உத்திரவாதமுமில்லை.

சிரிக்கும் கண்ணில் தெறிக்கும் வலி
சிரிக்கும் கண்ணில் தெறிக்கும் வலி

ஒரு படம் எடுத்தால் அதுவும் என்னை மாதிரி சின்ன தயாரிப்பாளர் படம் எடுத்தால் அதை விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் செய்வது பெரிய போராட்டம்தான் .ஆளாளுக்கு ஒவ்வொன்றைக் கூறுவார்கள்.

இந்தச் சூழலில் ஒரு தயாரிப்பாளர் மிகவும் குழம்பிப் போவார். நாம் யாருக்காகப் படம் எடுக்க வேண்டும்? ரசிகர்களுக்காக எடுக்க வேண்டுமா? இயக்குநரின் தனிப்பட்ட ரசனைக்கு எடுக்க வேண்டுமா?விநியோகஸ்தர்களின் விருப்பங்களுக்கு ஏற்றபடி எடுக்க வேண்டுமா ? என்று.

.ஒன்றுமே புரியாது.பேசியபடி வியாபாரம் நடப்பதில்லை.  

சிறு படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை. இவர்களால்தான் பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது  சினிமாவில்   எங்களால்தான்  தொழில் நடக்கிறது, ஆனால் எங்களுக்குத்தான் மரியாதையே  இல்லை. 


திருட்டு விசிடி பிரச்சினை!

ஒரு படம் எடுத்து வெளிவந்து விட்டால் நோகாமல்  திருட்டு விசிடி   போட்டு கொள்ளையடிக்கிறார்கள். தடுக்க வழியில்லை.

சென்சார் பிரச்சினை!


ஒரு படத்துக்கு ‘யூ’ சான்தறிதழ் கிடைத்தால்தான் 30 சதவிகித வரிவிலக்கு கிடைக்கும். சென்சாரில் யார் யாரோ கேள்வி கேட்பார்கள். என்ன வெல்லாமோ குதர்க்கமாகக்கேட்பார்கள்

 ‘யூ’ சான்தறிதழ் வாங்குவதற்குள் போதும் போதும் என்று நாக்கு தள்ளி விடுகிறது. 
 
 இவ்வளவு சிரமப்பட்டு படமெடுத்து வெளியிட்டால் வெளிவரும் முன்பே எவன் எப்போது கேஸ் போடுவான் வழக்கு போடுவான் என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.” 
 
இப்போ சொல்லுங்க தயாரிப்பாளர்கள் பாவப்பட்ட ஜென்மங்களா இல்லையா என்று நம்மையே  கேட்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி.

இத்தனை புள்ளி விபரங்களை எடுத்து வைத்தபிறகு நம்மால் மறுக்க முடியவில்லை. பேசுகையில் சினிமா மீது அவர் கொண்டுள்ள காதல் அழுத்தமாக தெரிகிறது. 

  சரி

 கங்காரு பற்றி என்ன கூறுகிறார்?

”’கங்காரு’படம் நன்றாக வந்திருக்கிறது. பாடல்கள் ஏற்கெனவே வெற்றி பெற்று விட்டன. எந்தப் போட்டியுமின்றி ஏப்ரல் 24ல் வெளிவருகிறது.

படத்தின் மீது அதன் தரத்தின் மீது எனக்கு பெரிதும் நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

நம்பிக்கைகள் வெல்க !

​kangaroo movie releasing on april 24th.. 
Hero – Arjuna
Heroines – Varsha ashwathi, priyanka
Director- Samy
producer- suresh kamatchi
production House- V House production​
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →