WALL WATCHER பிலிம்ஸ் தயாரிப்பில் புஷ்கர் மற்றும் காயத்ரியின் எழுத்து மற்றும் ஆக்கத் தலைமையில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரியா ரெட்டி, ஆர். பார்த்திபன் நடிப்பில் பிரம்மா , அனுசரண் இயக்கத்தில் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கும் வெப் சீரீஸ் சுழல் – THE VORTEX.
மாசானக் கொள்ளைத் திருவிழா ஊரின் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஒரு பகுதியில் இருக்கும் ஒரு பெரிய தொழிற்சாலை. அங்கே தொழிற்சங்க நிர்வாகி, (ஆர் . பார்த்திபன்) , பெண் இன்ஸ்பெக்டர் ( ஷ்ரியா ரெட்டி) சப் இன்ஸ்பெக்டர் (கதிர்) தொழிற்சங்கத் தலைவரின் – குடும்பத்தைப் பிரிந்து வாழும் பெரிய மகள் ( ஐஸ்வர்யா ராஜேஷ்) என்று முக்கியக் கதாபாத்திரங்கள் .
தலைவரைப் பிரிந்து வாழும் மனைவி, அதனால் அப்பாவுடன் இருக்கும் சிறிய மகள் , தலைவரின் தம்பி, அந்தத் தம்பியின் மனைவி இன்ஸ்பெக்டரின் மகன், தொழிற்சாலையில் முக்கியப் பதவியில் இருக்கும் , இன்ஸ்பெக்டரின் கணவர் , இப்படி அடுத்தக்கட்டக் கதாபாத்திரங்கள் … தலைவரின் சிறிய மகளுக்கும் இன்பெக்டரின் மகனுக்கும் காதல், தலைவரின் தம்பி மனைவிக்கும் டுட்டோரியல் நடத்தும் நபருக்குமான கள்ளக்காதல், தலைவரின் மூத்த மகளுக்கும் சப் இன்பெக்டருக்குமான நட்பு , அதே சப் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு நர்சுக்குமான காதல் இப்படி சில கதைப் போக்குகள் .
இவற்றுக்கு இணையாக மசானக் கொள்ளைத் திருவிழா , எல்லா தரப்பு மக்களிடமும் உள்ள கடவுள் நம்பிக்கை , ஐதீகம் என்று சில கதை நகர்வுகள் ..
இவற்றையும் இன்னும் பல விசயங்களையும் வைத்து பரபரப்பான விறுவிறுப்பான மாத்தி யோசி பாணியிலான திருப்பங்கள் கொண்ட திரில்லரை புஷ்கர் காயத்ரி எழுதி இருக்க,
முதல் நான்கு எபிசோட்களை பிரம்மாவும் அடுத்த நான்கு எபிசோட்களை அனுசரணும் அட்டகாசமாக இயக்கி இருக்கிறார்கள். அருமையான படமாக்கல் . மாசானக் கொள்ளைக் காட்சிகளை தீவிரமாக அழுத்தமாக அழகாக வண்ணமயமாக பிரம்மாதமான ஷாட்கள் மற்றும் ஃபிரேம்களோடு படமாக்கி பிரம்மிக்க வைத்து இருக்கிறார் பிரம்மா . தனது எபிசோட்களில் அதை அப்படியே தொடர்கிறார் அனுசரண்
முகேஸ்வரனின் ஒளிப்பதிவு , ரிசார்ட் கெவினின் படத் தொகுப்பு இரண்டும் மிக அருமை .
மாசனக் கொள்ளைக் காட்சிகளில் உச்சம் தொடுகிறது கலை இயக்கம்.
இந்த அத்தனை உழைப்பையும் தனது அற்புதமான பின்னணி இசையால் தரக்கூட்டல் செய்து சதிராடி இருக்கிறார் சாம் சி எஸ் .
மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் கதிர். ஒவ்வொரு ஷாட்டிலும் திமிறி எழுகிறார் ஷ்ரியா ரெட்டி. பார்த்திபன் பண்பட்ட நடிப்பு. ஐஸ்வர்யாவும் அப்படியே . குமாரவேல் , ஹரீஷ் உத்தமன், லதா ராவ் , சந்தான பாரதி எல்லோரும் சிறப்பு செய்திருக்கிறார்கள்.சுமார் முக்கால் மணி நேர அளவிலான எட்டு எபிசோடுகள் . அதில் நான்காவது எபி சோடு மட்டும் கொஞ்சம் ஸ்லோ ஆகி , (காரணம் கதைப் போக்கு) மீண்டும் வேகம் எடுக்கிறது.
சுவாரசியம் என்று எண்ணி வரும் ஒரு சில திருப்பங்கள் பொருத்தமற்றவை. அல்லது முந்தைய காட்சி அமைப்புகள் அந்த திருப்பங்களை ஏற்க வைப்பவையாக இல்லை .
ஒரே ஊரைச் சொந்த ஊராகக் கொண்டு வாழும் கதாபாத்திரங்களில் சிலர் கொங்குத் தமிழ் பேச சிலர் பேசவில்லை.
ஒரே காட்சியில் லதா ராவ் வழிய வழிய கொங்குத் தமிழ் பேச , பார்த்திபன் வம்படியாக மறுத்து யாரோ மாதிரி பேசுகிறார் . பார்த்திபன் அங்கே பஞ்சம் பிழைக்க வந்தாரோ என்று தோன்றுகிறது .
இப்படி ஓரிரு மீச்சிறு குறைகள் இருந்தாலும்சிறுமிகளிடம் பாலியல் அத்து மீறல் செய்யும் பலர், அவர்களுக்கு நன்கு தெரிந்த – அவர்களின் அன்புக்கு பாத்திரமான – சம்மந்தப்பட்டவர்களைப் பற்றி சட்டென்று தவறாக நினைக்கக் கூட முடியாத நபர்கள்தான் என்று சொன்ன வகையிலும்
புஷ்கர் காயத்ரியின் எழுத்தில் , போரடிக்காமல் பரபரப்பு விறுவிறுப்போடு ஆறு மணி நேரத்தை போகிற போக்கில் விழுங்கும் அசால்ட்டிலும்
பிரம்மா– அனு சரண் ஆகியோரின் சிறப்பான இயக்கத்தாலும் சும்மா சுர் விர் என்று சுற்றிச் சுழல்கிறது சுழல்