ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா , மாஸ்டர் ரித்விக் நடிப்பில் ஜி எஸ் விக்னேஷ் எழுதி இயக்கி இருக்கும் படம் .
நுரையீரல் பிரச்னையால் ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து காற்று மூலம் மட்டுமே சுவாசிக்கும் சூழல் உள்ள சிறுவனின் (ரித்விக்) , தாவரவியல் ஆர்வலரான அம்மா( நயன்தாரா) , மகனின் மருத்துவ சிகிச்சைக்காக கோவையில் இருந்து கொச்சிக்கு ஆம்னி பஸ்ஸில் மகனோடு கிளம்புகிறார் .
இடையில் உள்ள ஊர்களில் இறங்க வேண்டியவர்கள் டிராபிக் ஜாம் காரணமாக கோவையிலேயே இறங்கிக் கொள்ள, அம்மா, மகன், ஒரு முன்னாள் எம் எல் ஏ, அவரது உதவியாளர், ஒரு காதல் ஜோடி, காதலியின் அப்பா , ஜெயிலில் பல்லாண்டு தண்டனை பெற்று விடுதலை ஆகி இருக்கும் ஒருவர், பல கோடி மதிப்புள்ள போதைப் பொருளை, கை மாற்ற எடுத்துக் கொண்டு போகும் ஓர் அயோக்கியத்தனமான இரக்கமற்ற போலீஸ்காரர் அப்புறம் டிரைவர் , கிளீனர் இவர்கள் மட்டும் தொடர்ந்து பயணிக்கின்றனர்.
வழியில் ஏற்பட்ட பெரிய நிலச் சரிவில் பஸ் மண்ணுக்குள் புதைய , பஸ்சுக்குள் ஆக்சிஜன் குறைய சிறுவனின் ஆக்சிஜன் சிலிண்டரை அபகரித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் போராட , வெளியே தாமதமாகத் தகவல் தெரிந்து மீட்புப் பணிகள் துவங்க …
என்ன நடந்தது என்பதே படம். தமிழுக்குப் புதிய கதை. புதிய சூழல் அது ஒன்றே படத்தின் பலம்
ஆனால் நயன்தாரா கதாநாயகி என்னும்போதே என்ன நடக்கும் என்று யூகிக்க முடிகிறது அல்லவா? அதுதான் படத்தின் முதல் சிக்கல்.
யூகிக்க முடிகிற கதைப் போக்கு , அது எல்லாம் அப்படியே வருவது அடுத்த பிரச்னை
வெளியே அவர்களை காப்பாற்ற எல்லோரும் போராட, பஸ்சுக்குள் அவர்கள் காதல் பிரச்னை ஆக்சிஜன் பிரச்னை என்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும்போது சனியனுங்க செத்துத் தொலையட்டும் என்றே தோன்றுகிறது . இந்த உணர்வில் சிறுவன் ரித்திக்கின் பரிதாபத்துக்குரிய கதாபாத்திரமும் அவனது நல்ல நடிப்பும் கூட ஆக்சிஜனுக்கு ஏங்கும் நிலைமை ஏற்படுகிறது.
கடைசியில் சிறுவன் எடுக்கும் முடிவும் wifi ஆக்டிவேட் ஆகும் காட்சியும் மட்டும் ஆறுதல்.
படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நயன்தாராவையும் பயன்படுத்தவில்லை. அவரது முக பாவனைகள் தனியாக துருத்திக் கொண்டு நிற்கிறது.
சொல்ல வேண்டிய கதை. சொல்லக் கூடாத திரைக்கதை.