படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சத்யராஜ் அழைக்கப்படக் காரணம் அந்த வசனத்தை பிரபலமாக்கியவர் அவர்தான் என்பதால்! எடிட்டர் மோகனும் அவரது மகன் நடிகர் ஜெயம் ரவியும் வரக் காரணம் இயக்குனர் ராகேஷ் இவர்களிடம் பணியாற்றியவர் என்பதால்!! கே.பாலச்சந்தரும் டி.ராஜேந்தரும் வரக் காரணம் இருவரும் திருப்போரூர் அக்கம்மாள் கோவிந்தன் என்ற — துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் வியாபாரம் செய்கிற — தயாரிப்பாளர் வென் கோவிந்தாவுக்கு நண்பர் என்பதால் !!
உடம்பு இளைத்து இளமை மிகுந்து கவிஞனில் இருந்து கதாநாயகன் ஆகி இருந்தார் பா.விஜய் . அதற்கேற்ப பாடல் வெளியீட்டு விழா துவங்கி முடியும் வரை உட்காராமல் இருந்தார் .
படம் திருட்டி விசிடி பற்றிய படம் என்பதால் பெரும்பாலோனோர் பேச்சும் அதை ஒட்டியே இருந்தது
“அன்புக்கு பேர் போன நியூசிலாந்து மக்கள் ஒரு குறிப்பிட்ட மிருகத்தை கண்டால் மட்டும் உடனே அடித்துக் கொள்வார்கள் . காரணம் அந்த மிருகம் நியூசிலாந்தின் மரங்களின் வளர்ச்சியை அழிக்க பக்கத்து நாட்டால் உருவாக்கி அனுப்பப்பட்டு நாடு முழுக்க பெருகி விட்டது. அது இருந்தால் நாடே அழியும் என்பதால் அதை தயவு தாட்சண்யம் பார்க்காமல் அடித்துக் கொல்வது அங்கே வழக்கம். அதுபோல நாம் பொதுவில் அன்புள்ளவர்களாக இருந்தாலும் திருட்டு விசிடி விற்பவனை உதைக்கணும் ” என்றார் ரவி மரியா .அடுத்துப் பேசிய எடிட்டர் மோகன் , ஜெயம் ரவி உட்பட எல்லோரின் பேச்சிலும் அது பற்றிய கருத்துக்கள் இருந்தன .
ஆனால் ஆழமும்ஆவேசமுமாய் முழங்கி பிரச்னையை பிரித்து மேய்ந்தவர் .. வேறு யார் ? டி.ராஜேந்தர்தான் .
“திருட்டி விசிடி விற்கிறது தப்பு . உண்மைதான் . ஆனா மக்கள் ஏன் தியேட்டருக்கு வரல? நீ வச்சிருக்கற டிக்கட் விலை அப்படி! அளவுக்கு மீறி சம்பாதிக்கணும்னு தயாரிப்பாளருக்கு ஆச…. அநியாயமா பெரிய சம்பளம் வாங்கணும்னு ஹீரோக்களுக்கு ஆச…. அப்புறம் எப்படி அவன் படம் பாக்க வருவான் ? நல்ல வசதியான தியேட்டருக்கு ஒரு டிக்கட் விலை வைய்யி … சுமாரான தியேட்டருக்கு கம்மியா டிக்கட் விலை வைய்யி….ரெண்டு மூணு வெரைட்டியில டிக்கட் விலை வைய்யி… எந்தப் படமா இருந்தாலும் முதல் ஒரு வரிசை மட்டும் பத்து ரூபான்னு வச்சிட்டு .. மத்த படி எல்லா வரிசைக்கும் ஒரே டிக்கட் வைக்கிறியே .. இது நியாயமா? அப்புறம் எப்படி ரசிகன் படம் பாக்க தியேட்டருக்கு வருவான் ?
இன்னொரு பக்கம் வரேன் … கள்ள நோட்டு அடிச்சா யாருமே புகார் தராட்டியும் அரசாங்கம் கண்டு புடிச்சு கைது செய்யுது இல்ல . அப்போ கள்ள சிடி விக்கிறவனை மட்டும் ஏன் தானா கைது பண்றது இல்ல ? சரி … இந்த விஷயம் பத்தி முதல்வர் கிட்ட எடுத்துச் சொல்லி திருட்டு விசிடியை ஒழிக்கணும்னு பேச ஏன் தயாரிப்பாளர்களுக்கு தெம்பு இல்ல . அதை செய்ய முடியறவன் பதவியில இரு.. முடியாதவன் ஒதுங்கிக்க… செய்யறவனுக்கு இடம் விட்டா அவன் செய்வான் இல்ல ? இதெல்லாம் செய்யாம திருட்டு விசிடிய ஒழிக்கணும்னு பேசறது வெறும் ஜம்பம் ” என்பது உட்பட ….டி ஆர் பேசிய பேச்சுதான் இந்தப் படத்துக்கான உண்மையான விளம்பரம் !
தகடு தகடு என்ற வசனம் வந்த விதம் பற்றிப் பேசிய சத்யராஜ் ” அது ஏ.எல்.நாராயணன் எழுதின வசனம். அதை படமாக்கும்போது முதன் முதலில் அதை ரசிச்சு பாராட்டினதே உலகநாயகன் கமல்ஹாசன்தான் ” என்று கூறிவிட்டு…
தானும் திருட்டு விசிடி விவகாரத்துக்கு வந்தார்.
” எல்லாரும் திருட்டு விசிடி பத்தி பேசிட்டு இருக்கும்போது இவங்க அதை வச்சு படமே எடுத்து இருக்காங்க.
அதனால இந்தப் படத்தை சினிமா உலகமே தூக்கிப் பிடிக்கணும்.
படம் ரிலீஸ் டைம்ல எல்லா பெரிய நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் எல்லாம் இந்தப் படத்தைப் பார்த்து கருத்து சொல்லி படத்தோட விளம்பரத்துக்கு உதவணும் .
இது ஒட்டுமொத்த சினிமாக்காரங்களோட கடமை ” என்றது சூப்பர்… சூப்பர்!
மென்மையான குரலில் மேன்மையாக பேசிய கே.பாலச்சந்தர் ” இங்கே பேசின டி.ராஜேந்தர் என்னை அவரோட மானசீக குருன்னு சொன்னார் .
அவரு என்ன சாதாரண ஆளா ?
அவரோட ரயில் பயணங்களில் படத்தை பார்த்துட்டு ‘ என்னடா இது இப்படி ஒரு யோசனை நமக்கு வராமப் போயிடுச்சே…
நமக்கு போட்டியா ஒரு ஆளு வந்துட்டாரே’ன்னு எனக்கு உதறலே எடுத்துருச்சு .
அவரும் குருதான் ” என்றபோது..
கண் கலங்கி விட்டார் டி.ராஜேந்தர் .
நெகிழ்ச்சி … நெகிழ்ச்சி !