தமிழ் ராக்கர்ஸ் @ விமர்சனம்

ஏ வி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் அருணா குகன் மற்றும் அபர்ணா குகன் ஷ்யாம் தயாரிக்க, அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் , அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், வினோதினி, மாரி முத்து, தருண் குமார் நடிப்பில்

மனோஜ் குமார் கலைவாணன் கதையில், அறிவழகன், மனோஜ் குமார் கலைவாணன், ராஜேஷ் மஞ்சு நாத், முருகப்பன் மெய்யப்பன், சுப்ரியா கொப்பா, ஆகியோரின் திரைக்கதை வசனத்தில்,மன்னர் மன்னன் என்பவரின் தகவல் ஆராய்ச்சியில் 

அறிவழகன் இயக்கி சோனி லிவ் வில் காணக் கிடைக்கும் வலைதளத் தொடர் தமிழ் ராக்கர்ஸ். 

மக்களின் அதீத எதிர்பார்ப்புக்கும் வசூல் வெற்றிக்கும் வாய்ப்புள்ள படங்களை முன் கூட்டியே திருடி இணைய தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் சினிமாத் துறைக்கு பெரும் வில்லனாக விளங்கிய தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம் ஏற்படுத்திய பாதிப்புகளை  சொல்லும்  படம். அதாவது…பிரபல நடிகர் அஜய் நடித்த மாய லோகம் படம் இப்படி திருட்டுத்தனமாக வெளியானதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

முன்னாள் பிரபல இயக்குனர்  ஒருவரின் மகனும் அந்த இயக்குனரால்  உருவாக்கப் பட்டு இன்று பிரபல நடிகராக விளங்குபவருமான  அதிரடி ஸ்டார் ஆதித்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படமான கருடா  தீபாவளிக்கு வெளிவர இருக்கும் நிலையில், 

அதை ஒரு நாள் முன்பாகவே இணையத்தில் வெளியிட்டுக் காட்டுவேன் என்று சவால் விடுகிறது தமிழ் ராக்கர்ஸ். அப்படி நடந்து விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படுவதுடன் நடிகரின் மார்க்கெட்டும் பாதிக்கப்படும் . இயக்குனரின் கனவும் கருகலாம் படத்தை இரு நூறு கோடி பட்ஜெட்டில் படத்தை எடுத்து விட்டு முன்னூறு கோடிக்கு எடுத்ததாக பொய் சொல்கிறார் தயாரிப்பாளர் (அழகம்பெருமாள்). தன் மகன் ஆதித்யா மீது பாசம் கொண்ட ரசிகர்களை ஏமாற்றுகிறார் இயக்குனர் அப்பா 

தயாரிப்பளருக்கு பணம் கொடுத்தது ஒரு இரக்கமில்லாத  அதிரடி பைனான்சியர் . 

இவர்களின் அழுத்தத்தால் படத்தை இணையத்தில் வெளியிடாமல் தடுக்கும் பொறுப்பு ஒரு காவல் அதிகாரிக்கு (அருண் விஜய்) வருகிறது .  சினிமா மீது ஆர்வம் கொண்ட அவரது மனைவி (ஐஸ்வர்யா மேனன்) காவல் அதிகாரியின் எதிரிகளால் கொல்லப்பட்டவர் . 

அதிகாரியின் டீமில் இணையும் பெண்  சைபர் கிரைம் அதிகாரி ( வாணி போஜனின்) அப்பா , தமிழ் ராக்கர்சால் பாதிக்கப்பட்டு உடல் நல குன்றிய ஒரு படத் தயாரிப்பாளர் ( எம் எஸ் பாஸ்கர்). இது தவிர இன்னொரு பெண் அதிகாரி ( வினோதினி) மற்றொரு ஆண் அதிகாரியும் டீமில் இருக்கிறார்கள் . இவர்கள் சேர்ந்து என்ன செய்தார்கள்? என்ன நடந்தது? என்பதே தமிழ் ராக்கர்ஸ் . அறிவழகனின் மேக்கிங் வழக்கம் போல நன்றாக இருக்கிறது. அருண் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா மேனன் கொஞ்ச நேரமே என்றாலும் இனிமை . வாணி போஜனுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் சிறப்பு. வினோதினி  சிறப்பாக நடித்துள்ளார் மற்றவர்களும் ஒகே . 

ஒரே காட்சி என்றாலும் நடிப்பில் எல்லோரையும் தூக்கி சாப்பிடுகிறார் எம் எஸ் பாஸ்கர் . விஷய ரீதியாகப் பார்த்தாலும் தமிழ் ராக்கர்ஸ் எப்பேர்பட்ட குற்றவாளிகள் என்று உணரவைக்கும் ஒரே காட்சி , இந்த அஞ்சு மணி நேர தொடரில் அது மட்டும்தான். 

ராஜ சேகரின் ஒளிப்பதிவு, சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு, விகாசின்  பின்னணி இசை யாவும் தரம். சண்டைக் காட்சிகள் தெறிப்பு. தான் விரும்பும் ஹீரோ மீது வெள்ளந்தி ரசிகர்கள் வைத்திருக்கும் பக்தியை பாசத்தை சிறப்பாகச் சொல்கிறார்கள். ஆங்காங்கே நகைச்சுவை உண்டு . 

இப்படி எல்லா விசயத்திலும் பார்த்துப் பார்த்து செய்தவர்கள் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விசயத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள். சொல்லப் போனால் பெரிய்ய்ய்ய ஓட்டையே விட்டிருக்கிறார்கள்.  
திருட்டு விசிடி விற்று தனக்கு நஷ்டம் ஏற்படுத்துபவனை பாதிக்கப்பட்டவன் கோபத்தில் அடித்து உதைக்கத்தான் செய்வான். 

அதனால் அடி பட்டவன் பாதிக்கப்பட்டான். கண்ணீர் விட்டான். ரத்தம் சிந்தினான். பழி வாங்க தமிழ் ராக்கர்சை உருவாக்கினான் என்று அயோக்கியனுக்கு ஹீரோயிசம் எதற்கு ?

தவிர படத்தில் சினிமாக்காரர்களாக காட்டப்படும் தயாரிப்பாளர், பைனான்சியர்,  ஹீரோ, ஹீரோவின் அப்பாவான முன்னாள் இயக்குனர், படத்தில் பணிபுரிபவர்கள்  … இப்படி எல்லோருமே பொய்யர்களாக, அயோக்கியர்களாக , மன சாட்சி அற்றவர்களாக, இரக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் . மிக முக்கியமாக சுயநலத்துக்காக சினிமாவையே அழிக்கும் துரோகிகளாக  இருக்கிறார்கள் .  இதை எல்லாம் பார்க்கும்போது  தமிழ் ராக்கர்ஸ் மேல் என்ன தப்பு என்றுதானே  வெகுஜன ரசிகன் நினைப்பான்?இப்படி தமிழ் ராக்கர்சை ஹீரோவாகவும் சினிமாக்காரர்களையே சினிமாவுக்கு  வில்லனாகவும் ( ஓரளவுக்கு உண்மைதான்  என்றாலும்) காட்டும் தொடரில் கதாபாத்திரங்கள் பலரும்  தமிழ் ராக்கர்சுக்கு எதிராக வசனம் மட்டும்  நரம்பு புடைக்க மூக்கு விடைக்க பேசுவது கொடுமை. 

வெப் சீரிஸ் என்பதால் கொஞ்சம் விளக்கமாக அழுத்தமாக இருக்கலாம்தான். தப்பில்லை. ஆனால் ஏகப்பட்ட கூறியது கூறல்கள் வேறு சோதிக்கிறது. 

தவிர ஒரு தயாரிப்பாளருக்கும் இணையதள தொழில்நுட்ப நபருக்கும் இடையிலான ஒரு பர்சனல் பகைதான் தமிழ் ராக்கர்ஸ் உருவாக காரணம் என்று  கதை சொல்வது  எந்த வகையில்   படத்துக்கு பலம் சேர்க்கும்? அதுவும் நான்கரை மணி நேரத்துக்கு மேல் பார்த்த பிறகு வரும் அந்த கிளைமாக்ஸ் .. ஸ்ஸ்ஸ்சப்பா…. முடியல ! 

அல்லது  சொல்ல வந்த விசயமும் கிளைமாக்சும் இதுதான்   என்றால் அதற்கு பிறகு துரோகிகளை போலீஸ் அதிகாரி வச்சு வெளுக்கிற மாதிரியான ஒரு சீக்வன்ஸ் வேண்டாமா?இந்த தமிழ் ராக்கர்சுக்கான திரைக்கதையை  எப்படி  அமைத்து இருக்கலாம்?

சினிமாவை நேசித்து ரசித்து நல்ல படம் எடுக்க சினிமாவுக்கு வந்து இங்கே உள்ள அத்தனை பிரச்னைகளுக்கு இடையிலும் படத்தை எடுத்து முடித்து,  படம் ஓடாவிட்டால் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்ட ஒரு தயாரிப்பாளரின் இயக்குனரின், நாயகனின் படத்துக்கு தமிழ் ராக்கர்ஸ் குறி வைக்கிறது . 

தொழில் நுட்ப விவரத்தில் அதிகம் தேர்ச்சி இல்லாத காவல்துறை அதன் உச்சம் தொட்ட தமிழ் ராக்கர்ஸ் குழுவினரை தொழில் நுட்ப ரீதியாகவும் ஆக்ஷன் (காட்சிகள்) ரீதியாகவும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை சொல்லும் அதே வேளையில், தமிழ் ராக்கர்சால் பாதிக்கப்பட்ட படங்கள் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் , நடிகர்கள் என்று  பல அதிர்ச்சியான  கண்ணீர்க் கதைகளை சொல்ல வேண்டாமா?  எம் எஸ் பாஸ்கர் காட்சி போல இன்னும் சில காட்சிகள்  இருந்திருக்க வேண்டும் அல்லவா?  

சொல்லப் போனால் ஒவ்வொரு எபிசோட் முடிவில் அல்லது துவக்கத்தில் தமிழ் ராக்கர்சால்  பாதிக்கப்பட்ட நிஜ தயாரிப்பாளர்களையே கூட பேச வைத்திருக்கலாம். 

தவற விட்டு விட்டார்கள். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *