தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் @ விமர்சனம்

tamil 6
ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வழங்க, வி எல் எஸ் ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரிக்க, நகுல் , அட்டகத்தி தினேஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்க , செந்தில் குமாரின் வசனத்தில் ,கதை திரைக்கதை எழுதி அறிமுக இயக்குனர்  ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கும் படம் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் . தொலைபேசிச் சேவைகளில் தமக்குரிய மொழியைத் தெரிந்தெடுக்க,  தமிழ் நாட்டில் தமிழுக்கு கொடுக்கப்படும் எண்   1.  அதைக் குறிப்பிடுவதே இந்தப் படத்தின் பெயர் .

படம்,  ரசிகர்களை தியேட்டரை நோக்கி  அழுத்துமா? பார்க்கலாம்.

தனியார் நிறுவனத்தில் பணி  புரிந்தபடி தற்கொலை தடுப்பு சேவை மையத்தில் தன்னார்வத் தொண்டாளராக இருக்கும் சிமி (பிந்து மாதவி) மீது , அடுக்கு மாடிக் குடியிருப்பு விற்பனை முகவராக பணியாற்றும் முகிலுக்கு (அட்டகத்தி தினேஷ்) காதல் வருகிறது.

படிப்பறிவு இல்லாத போதும் பிறவி மேதமை , அனுபவ அறிவு , உழைப்பு இவற்றால்  அங்கீகரிக்கப்படாத விஞ்ஞானி மற்றும் தொழில் நுட்ப வல்லுனனாக விளங்கும் வசந்த் மீது (நகுல்),  பொறியியல் மின்னணுவியல் தகவல் தொடர்பு இளங்கலைப் பட்டப் படிப்பு படிக்கும் மக்கு மாணவியான ஹரிணிக்கு (ஐஸ்வர்யா தத்தா) காதல் வருகிறது.

கல்லூரி புராஜக்ட் ரிப்போர்ட்டுக்கு வசந்த்தின் உதவியை நாடும் ஹரிணியின் காதலை  வசந்த் ஏற்பது,  முற்றிலும் புதிய களத்தில் நகைச்சுவை மட்டும் ரொமண்டிக் விஷயங்களுடன் இயல்பாக சொல்லப்படுகிறது.

சிமி மீது கண்ட உடன் காதல் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளும் விரக்தியில் உள்ள நபர் என்று சிமியால் பிழையாகக் கருதப்பட்டு,  அதன் மூலம் பழக்கமாகும் முகிலின் காதலை,  சிமி ஏற்பது பல நகைச்சுவை மற்றும் நெகிழ்வான காட்சிகளுக்குப்  பிறகு நிகழ்கிறது .

முகில் சம்மந்தப்பட்ட ஒரு  கட்டுமான நிறுவனத்தில்,  சுமார் எண்பத்தைந்து டன் எடை உள்ள  வாஸ்து கல் ஒன்றை , கட்டிடத்தின் உச்சிக்கு ஏற்றும் முயற்சியில் இருக்கும் ஊழியர்கள்  , அலுவலகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுடன் செல்போனில் அவ்வப்போது ஆலோசனை பெற்று, அதன்படி அந்தக் கல்லை   ஏற்றிக் கொண்டு இருக்கிறார்கள் .

அப்போது முகிலைத் தேடி அங்கு வரும் சிமி எதிர்பாராத விதமாக ஒரு பள்ளத்தில் விழ, அவள் மீது கனமான பொருட்கள் விழுந்து அழுத்த,  அவளால் எழ முடியாத நிலை . அவள் விழுந்து கிடக்கும் இடத்துக்கு நேர் மேலேதான் அந்த எண்பத்தைந்து டன் கற் பாறை மெல்ல மெல்ல மேலே ஏறிக் கொண்டு இருக்கிறது .

 

tamil 4
தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டில் செல் போன் செட் பண்ணி,  அதற்கு இன்னொரு போனில் இருந்து கால் செய்து,  மூன்றாவது ரிங் அடிக்கும்போது வெடிக்கச்  செய்து…. இந்த முறையில்  ஆந்திராவில் பல குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி விட்டு,  அடுத்து சென்னைக்கு வந்து அதே வேலையில் ஈடுபடுகிறான்.
கால் டாக்சி ஓட்டும் ராஜாவின் (எதிர் நீச்சல் சதீஷ் ) காரில் அதை வைத்து விட்டு , கும்பல் நிறைந்த பகுதியில் அது போகும்போது அதை வெடிக்க வைக்க முடிவு செய்து,  அந்த கால் டாக்சியை பின் தொடர்கிறான் அந்தத் தீவிரவாதி  . சூரியனின் ஏற்படும் அதீத வெப்ப அலையால் ஏற்படும் மின் காந்தப் புயல் பூமியின் காற்று மண்டலத்தை இந்த சமயத்தில்  தாக்குகிறது . அது சென்னையில் விளைவுகளை ஏற்படுத்துகிறது . இந்த மின்காந்த புயல் செல்போனின் அலைக்கற்றைகளை பாதித்து செயல் இழக்க செய்பவை .

அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் வாஸ்து பாறையை மேலே ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு, அது எந்த நேரமும் பிய்த்துக் கொண்டு விழும் என்ற நிலையில்,  மேற்கொண்டு என்ன செய்வது என்று கேட்க,  பொறியாளர்கள் உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொள்ளும் நொடி….

பாறைக்கு கீழே சிக்கி இருக்கும் சிமி தனது செல்போன்  மூலம் காதலன் முகிலுக்கு தகவல் அனுப்புவதற்காக  பட்டனை அழுத்திய நொடி ….

காரை வெடிக்க வைக்க முயலும் தீவிரவாதி  வெடிகுண்டில் பொருத்தப்பட்ட போனுக்கு கால் செய்து இரண்டு ரிங் அடித்து முடித்த நிலையில் இன்னும் ஒரு ரிங் அடித்தால் பாம் வெடித்து விடும் என்ற நொடியில் …

மின்காந்தப் புயலின் விளைவால் சென்னையில் உள்ள அனைத்து செல்போன்களும் செயல் இழக்கின்றன .

இந்த நிலையில் வசந்த தனது விஞ்ஞான அறிவால்  டி வி சிக்னல்களை லேண்ட் லைன் போன் மூலம் செல்போன் டவருக்கு அனுப்பி செல்போன்களுக்கு உயிர் கொடுக்க முயல, ஏர் டாக் என்ற செல்போன் நிறுவன அதிகாரிகளும் அந்த முயற்சியில் பார்வையாளர்களாக இருக்க, அவன் ஜெயித்து விடுவான் என்ற நிலை .

அப்படி அவன் வெற்றி பெற்றால், அதுவும்  சீக்கிரம் வெற்றி பெற்றால் ,  வாஸ்து கல் பிய்ந்து விழுவதற்குள்  முகிலுக்கு விஷயம் தெரிந்து , கம்பிக்குள் கால் சிக்கி குழிக்குள் அசைய முடியாமல் கிடக்கும் சிமி பிழைக்கலாம் . ஆனால்  கால் டாக்சி பாம் வெடித்து பல உயிர்களை பலி வாங்கும்.

தனது முயற்சியில் வசந்த் தோற்றால்,  சிமியின் மேல் கல் விழுந்து அவள் நசுங்கி சாவது உறுதி . அதே நேரம் மின்காந்தப் புயல் கடந்த பிறகு செல்போன்கள் இயங்க , அப்போதும்  பாம் வெடிப்பது  உறுதி .

— என்ன நடந்தது என்பதே இந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் .

tamil 5

செல்போன் சிக்னல்கள் இயங்காத நிலையில்  தரை வழி தொலை பேசிகளின் உதவியால் டிவி  சிக்னல்களை ஆன்டெனா மூலம் செல் போன்  டவர்களில் செலுத்தி அதன் மூலம் செல்போன்களுக்கு சிக்னல்களை வர வைத்து செல் போன்களை இயங்க வைக்கும் ஆராய்ச்சி பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிந்தது .
அந்த முயற்சியின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதையை எழுதியதாக கூறும் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா , இப்போது அந்த முயற்சி அமெரிக்காவில் வெற்றி அடைந்திருக்கிறது என்றும் கூறுகிறார் .

நகுல், தினேஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா , அறிவியல் அறிவு நிறைந்த இல்லத்தரசி அம்மா ஊர்வசி, செல் போன் திருடனாக வரும் அஜய் இவர்களுக்கு முற்றிலும் புதிய களத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் , கதாபாத்திரப் பணிகள் கொடுத்திருக்கும் விதத்தில் பெரிதாக ஸ்கோர் செய்கிறார்  இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.

ஜொள்ளு விடும் முகிலை தற்கொலை எண்ணத்துக்கு கவுன்சிலிங் பெற வந்தவன் என்று என்னும் சிமி அவன் மீது அன்பு பாராட்ட , அவன் சொர்க்கத்தில் மிதக்க, உண்மை தெரிந்த நிலையில் காதலிக்க முடியாது என்று கூறும் சிமியிடம் “என்னை கண்ணா பின்னான்னு அசிங்கமா திட்டுங்க . அப்பவாவது உங்க மேல உள்ள காதல் போகுதான்னு பார்ப்போம் ” என்று முகில் கூற , திட்டவே தெரியாத சிமி அதற்காக பயிற்சி எடுத்துக் கொள்வது என்று,  அந்த ஏரியா வெகு அட்டகாசம் .

உண்மையிலே திட்ட வேண்டிய சூழ்நிலை வருவது சிலீர் திருப்பம் என்றால் , சிமியின் சிறுவயது பிளாஷ்பேக் காட்சிகள், பொருள் பொதிந்த கனமான குறுங் கவிதை . சிமியின் கதாபாத்திரப் பணிக்கு அவ்வளவு அழகாக பொருந்துகிறது அந்த பிளாஷ்பேக் . சபாஷ் .

ஜி டி நாயுடு என்ற போன நூற்றாண்டு தமிழ்நாட்டு அதிசய  மனிதரை நினைவு படுத்தும் நகுலின் கேரக்டர்,  தமிழ் சினிமாவுக்கு ரொம்பப் புதுசு . காதல், முத்தம்.  கட்டியணைப்பு எல்லாவற்றிலும் வெப்ப நிலை, ஈரப்பதம் , காற்றின் அளவு பார்க்கும் அவனது குனாதோசயத்துக்கும்,  அவனை காதலிக்கும் ஹரிணிக்குமான காட்சிகளும்  அவனை பார்த்து அவளது தோழிகள் பயந்து ஓடுவதும் ஏக கலாட்டா .

இளம் பெண்களின் அதீத ஆண் நட்பு வட்டம் பற்றிய கிண்டல், தமிழர்களின் ஒற்றுமை இன்மை பற்றிய சுருக் ஊசி, , கல்லூரிகள் உருவாக்கும் ஆட்டு மந்தை மாணவக் கூட்டங்கள் பற்றிய விரக்தி, , எளிய மனிதர்களின் ஞானம் பற்றிய பெருமிதம், , அந்தக் கால அஞ்சாவது வகுப்பின் மகிமை பற்றிய இறுமாப்பு  , அழுத்தப்பட்ட வர்க்கங்களின் நிலைமை பற்றிய பார்வை என்று….. பல ஏரியாக்களுக்குள் சும்மா புகுந்து விளையாடி , கவனத்தில் கொள்ள வேண்டிய இயக்குனராக உயர்ந்து நிற்கிறார் ராம் பிரகாஷ் ராயப்பா .

tamil 3

சதீஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் மற்றும் ஊர்வசி மற்றும்  ஹரிணியின் தோழிகள் சம்மந்தப்பட்ட காட்சிகளில் பட்டாசு வெடிக்கிறது செந்தில்குமாரின் வசனங்கள்.

நகுல் தினேஷ் இருவரும் நடிப்பில் சம அளவு முக்கியத்துவம் பெறுகிறார்கள் . போதைக் கண்களுடன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்கிறார் பிந்து மாதவி. ஒரு புதுமாதிரியான நடை உடை பாவனைகள் மற்றும் எக்ஸ்பிரஷன்களுடன் பிரெஷ்ஷான நடிப்பை வழங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா . வாழ்த்துகள் !

tamil 7

படத்தின் மிகப்பெரிய பலம் எஸ் எஸ் தமனின் பாடல்களும் பின்னணி இசையும் . எல்லா பாடல்களும் இனிமையாக அணுகி முணுமுணுக்க வைக்கிறது .

‘சட்டுன்னு என்ன…’ பாட்டில் இசைக்கருவிப் பயன்பாடு அருமை . ‘ரோபோ ரோமியோ.. ‘ பாடல்  மெட்டால் உற்சாகத் துள்ளல் போட வைக்கிறது  பின்னணி இசை மிரட்டோ மிரட்டோ என்று மிரட்டுகிறது. பாடலின் மெட்டை  ஒரு அளவுக்கு மேல் பின்னணி இசையாக ஊற்றி மூடுவதை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும் தமன் .

இன்னொரு மாபெரும் பலம் தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவு. ஹெலிகாம் ஷாட்களில் பின்னி எடுக்கும் மனிதர்,  படம் பார்க்கும் நமக்கே வெர்டிகோ பீதியை ஏற்படுத்தி விடுகிறார் . கிராபிக்ஸ் வேலைகள் தனியாக தெரியாத அளவு கில்லாடித்தனமான ஒளிப்பதிவு. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு தொய்வடைய  விடாமல் பார்த்துக் கொள்கிறது

tamil 8

வன ராஜ் போட்டிருக்கும் செல்போன் டவர் செட் அட்டகாசம் . சுந்தரி திவ்யாவின் உடை அலங்காரமும் சிறப்பு .

என்ன ஒன்று .. செல்போன் டெக்னாலஜி தொடர்பான செமினார் ஒன்றில் இருக்கிறோமோ என்று என்னும் அளவுக்கு டெக்னிக்கல் வார்த்தைகளையும் விஷயங்களையும் படபடவென்று சொல்லிக் கொண்டே போகிறார்கள். இன்னும் கொஞ்சம் நிறுத்தி நிதானித்து எளிமையாக சொல்லி இருக்கலாம். ஒட்டு மொத்தமாகவே இன்னும் கொஞ்சம் திரைக்கதை மற்றும் படமாக்கத்தில் ‘அழுத்தி’ சொல்லி இருக்கலாமோ என்ற எண்ணமும்  வருகிறது 

ஆனாலும் சிமிக்கு என்ன ஆகும்? கால் டாக்சி எங்கே வெடிக்கும் என்ற பதட்டத்தை தக்க வைக்கிற அதே நேரம்….  எல்லா இடங்களிலும் சகட்டு மேனிக்கு நகைச்சுவை வெடியையும் வெடிக்க வைத்த விதத்தில் இந்தக் குறைகளை தாண்டிப் பாய்ந்து விடுகிறது படம்

tamil 9

மொத்தத்தில் …..

தமிழுக்கு தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் …. நம்பி அழுத்தலாம் .

மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————-

ராம் பிரகாஷ் ராயப்பா,எஸ் எஸ் தமன், தீபக் குமார் பாடி, நகுல், தினேஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா,  வனராஜ், சாபு ஜோசப், சுந்தரி திவ்யா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →