
ஆண்ட்ரியா ஜெரிமியா, அஞ்சலி , வசந்த் ரவி, அழகம்பெருமாள் நடிக்க ,
கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற சிறந்த படங்களைத் தந்த ராம் இயக்கி இருக்கும் படம் தரமணி . இது தரமான மணியா ? பார்க்கலாம் .
பல்வேறு மொழிகள் , பல்வேறு மாநில மக்கள் , பல்வேறு நாட்டினரின் இருப்பால் , இன்று கான்கிரீட் காடாக மாற்றப்பட்டு விட்ட அன்றைய அற்புத விவசாய நிலமான சென்னை தரமணியில் நடக்கும் கதை .
காதலியால் (அஞ்சலி) ஏமாற்றப்பட்டு மனம் நொந்து தாடியும் சிகரெட்டுமாக காலம் கடத்தும் ஒரு மிகை உணர்ச்சிக் கொண்ட இளைஞனுக்கும் (வசந்த் ரவி) ,
கணவனின் ஓரினச் சேர்க்கை பழக்கத்தை மன்னித்து விடுதலை கொடுத்து, தான் கெட்டவள் என்ற அவச்சொல் சுமந்து,
ஆரம்பப் பள்ளி செல்லும் மகனோடு வாழும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கும் ( ஆண்ட்ரியா ஜெரிமியா) ஒரு மழை நாளில் நடு ரோட்டில் வரும் அறிமுகம் ஏற்படுகிறது . அறிமுகம் நட்பாகிறது .
அமெரிக்க செல்ல ஆசைப்பட்ட காதலிக்கு மூன்று லட்ச ரூபாய் திருடிக் கொடுத்ததையும் திருட்டைக் கொடுத்தவர் , திருட்டு கொடுத்த இடத்திலேயே செத்துக் கிடந்ததையும் அவன் சொல்கிறான் .
ஓரினச் சேர்கைக் கணவனை சமுதாயத்திற்கு முன் காட்டிக் கொடுக்காமல் தான் பழி சுமந்த கதையை அவள் சொல்கிறாள் .
ஒரு நிலையில் அவனும் அவளும் அவளது பிள்ளையும் ஒரே வீட்டில் வாழ ஆரம்பிக்கிறார்கள் . நட்பு உறவாகி ‘உறவாக’வும் ஆகிறது .
உறவுக்குப் பிறகு அவளது அலுவலக ஆண்களோடு அவள் பழகும் விதத்தை அவன் சந்தேகப் படுகிறான். மிருகத்தனமான அவன் நடத்தையை பொறுக்க முடியாமல் அவனைப் பிரிகிறாள் .
மேலும் மிருகமாகும் அவன் குடும்பப் பெண்கள் பலரை சபலப் படுத்தி வீழ்த்தி காசு பறிக்கும் செயலை செய்கிறான் .
அதனால் அவன் சில தண்டனைகளுக்கு ஆளாகிறான் . அது அவனுக்கு அவள் எவ்வளவு நல்லவள் என்பதை உணர்த்துகிறது.
மீண்டும் அவளைத் தேடி வரும் அவனை அவள் எப்படி எதிர்கொண்டாள் என்பதே இந்தப் படம் .
இப்படி ஒரு கதையில் ராம் சொல்லி இருக்கும் சமூக பிரச்னைகள்தான் அபாரம் !
இந்தியா இலங்கை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயித்தால் தமிழக மீனவன் இலங்கை ராணுவத்தால் கொல்லப் படுவதை சொல்லி புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்லும் இடத்திலேயே ராம் ஆஜர் .
கதையில் நடக்கும் — இயல்புக்கு அப்பாற்பட்ட சம்பவங்களைப் பற்றி கேள்வி வருவதை பார்வையாளனுக்கே கேள்வியாக வைக்கும் ராம் ,
அடுத்து ”தரமணி ஏரியில் இவ்வளவு பில்டிங் கட்டினது எப்படி என்ற கேள்வி வராத உங்களுக்கு மேலே உள்ள கேள்விகளை கேட்கும் உரிமை இல்லை” என்று,
பார்வையாளனையே விமர்சனம் செய்து அவனிடமே கைதட்டல் வாங்கும் இடத்தில் வியக்க வைக்கிறார் .
அதே போல தான் பணம் திருடிய நபரின் குடும்பத்தை நாயகன் போராடி கண்டு பிடித்து மூணு லட்ச ரூபாயை கொடுத்த அன்று மோடி ,
பழைய நோட்டுக்களை செல்லாததாக அறிவித்ததாக சொல்லும் இடத்தில் அரங்குகள் அதிர்ந்து திடீர் டீமானிடைசெஷனை செருப்பால் அடிக்கும் விதம் அருமை .
வெட்ட வெளி என்று எண்ணிப் பறந்து கண்ணாடியில் மோதி உயிரிழக்கும் புறா , மனித இனத்தையே குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுக வைக்கிறது . அருமை ராம் அருமை .
வசனங்களில் அர்த்தமும் மாற்று சிந்தனையும் பொருள் பொதிந்த நவீனமும் இருப்பது பிரம்மாதம்
இந்தப் படத்துக்கு என்று துள்ளல் எள்ளல் நெகிழ்வு கலந்து அட்டகாசமான இசையைக் கொடுத்துள்ளார் யுவன் சங்கர ராஜா .
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்துக்கு யானை பலம் தருகிறது .
மிகப்பிரம்மாதமாக நடித்துள்ளார் ஆண்ட்ரியா . வசந்த் ரவி கடுமையாக உழைத்துள்ளார் . அழகம்பெருமாள் இயல்பு . மற்ற எல்லோரும் கூட சிறப்பே .
வேலை , சூழல் , சம்பாத்தியம் , அமையும் புதிய கலாச்சாரம் , பாலியலில் கொடுக்கும் சுதந்திரம் மேலோட்டமாகப் பார்த்தால் பெண்ணுக்கும் இருப்பது போலவே தோணும்.
ஆனால் இன்னும் பெண்களுக்குத்தான் பிரச்னை என்று சொல்லும் விதம் அருமை .
ஆணின் சபலமே தவறு என்று அல்லவா சொல்ல வேண்டும் ? ஆணுக்கு சபலம் இருக்கும்போது பெண்ணின் சபலத்தை மன்னிக்கலாம் என்பது என்ன நியாயம் ராம் ?
இது எல்லோருக்கும் சபலத்துக்கு ஆளாகும் உரிமையை அல்லவா தருகிறது ? இது நல்லதா ?
விவரிக்கப்படும் கதாபாத்திரங்களின் குணாதிசயம் என்பது அந்தக் கதாபத்திரங்களையே குறிக்கும் . ஆனால் ஒரு போன் மூலம்,
எல்லா மொழி இன கலாச்சார பண்பாட்டைக் கொண்ட பெண்களையும் வீழ்த்த முடியும் என்று, முகமறியா பெண்களை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சித்தரிப்பதன் மூலம்,
ஒரு சமூகத்தையே — அது பல்வேறு கலாச்சாரங்கள் கலந்த இடம் என்றாலும் — கேவலப் படுத்துவது என்ன நியாயம் ?.
காமுகன் வலை விரித்த பெண்களில் ஒருத்தியாவது அவனை செருப்பால் அடித்து விரட்டினாள் என்று சொல்லி இருக்க வேண்டாமா ராம் ?
தரமணி .. புறம் புறநானூறு ; அகம் அசிங்கம் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————
வசனகர்த்தா ராம், யுவன் சங்கர் ராஜா, தேனீ ஈஸ்வர், ஆண்ட்ரியா ஜெரிமியா , வசந்த் ரவி