எஸ் எஸ் எஸ் மூவீஸ் சார்பில் ஏ எஸ் டி சலீம் மற்றும் பி.ரவிகுமார் தயாரிக்க , ரக்ஷன் – கேதி என்ற புது ஜோடி அறிமுகமாக , முத்துநகரம் படத்தை இயக்கிய திருப்பதி அடுத்து இயக்கி இருக்கும் படம் திருட்டு ரயில் .
பொதுவாக திருட்டு ரயில் என்பது ரயிலில் டிக்கட் வாங்காமல் பயணம் செய்வதை குறிக்கும் . ஆனால் இந்தப் படத்தில் ஒரு ரயிலையே புது தண்டவாளம் போட்டு…. திருடிக் கொண்டு போய் விடுகிறார்களாம் .
தூத்துக் குடியில் இருந்து ஒரு பிரச்னை மற்றும் அதனால் ஏற்படும் ஆபத்து காரணமாக சென்னைக்கு வரும் சில இளைஞர்களுக்கு அதை விட பெரிய ஆபத்தை தருகிறது சென்னை . அப்புறம் என்ன ஆச்சு என்பதே படத்தின் கதை . இதில்தான் ஒரு நிலையில் திருட்டு ரயில் சமாச்சாரம் வருகிறது .
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவிக்குமார் , முத்து நகரம் படத்தில் இயக்குனர் திருப்பதியிடம் கடைசி உதவி இயக்குனராக பணி புரிந்தவர் . அடுத்த கதையை தயார் செய்து இருவரும் சேர்ந்து செயல்பட , தயாரிப்பிலும் இறங்கினார் ரவிக்குமார் .
பணம் போதாது என்ற நிலையில் தயாரிப்பாளராக படத்தில் இணைந்து இருக்கிறார் எஸ் எஸ் எஸ் மூவீஸ் ஏ எஸ் டி சலீம் .
படத்தின் நாயகன் ரக்ஷன் ….!
இவர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவதி அம்மையாரின் தம்பி மகன் . அதாவது உதயநிதி ஸ்டாலினுக்கு தாய் மாமன் மகன் .
விளைவு ?
நிகழ்ச்சிக்கு வந்து படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் வெளியிட்டார் துர்காவதி அம்மையார் .
” நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் எல்லார் பார்வையும் என் மீது படும் . ரக்ஷனுக்கு முக்கியத்துவம் குறையும் . இன்று எல்லா கேமராக்களும் ரக்ஷன் மீதே படட்டும் . நான் அப்புறம் வந்து ரக்ஷனை வாழ்த்திக் கொள்கிறேன் ” என்று தாய் மாமனிடம் சொல்லி விட்டாராம் உதயநிதி .
முத்துநகரம் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்த ஜெய் பிரகாஷ் இசையில் பாடல்களை எழுதி இருக்கிறார், மூன்று தலைமுறை கண்ட பழம்பெரும் பாடலாசிரியர் காமகோடியன். பாடல்கள் நன்றாக இருந்தன .
விஜய் வல்சன் ஒளிப்பதிவில் மாரிஷ் படத்தொகுப்பில் முன்னோட்டமும் பரபரப்பாக இருந்தது .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் ரக்ஷன் உள்ளிட்ட படக் குழுவினரை வாழ்த்திப் பேச….
பாடல்களையும் முன்னோட்டத்தையும் பெற்றுக் கொண்ட , தமிழ்நாடு டிஜிட்டல் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் பேசும்போது “திருட்டு ரயிலுக்கு படத்தில் கொடுக்கும் விளக்கம் வித்தியாசமாக உள்ளது . திருட்டுத்தனமாக ரயிலில் வருபவர்கள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல . அதில் பல, வேறு வழியில்லாத ஏழைகளும் உண்டு
ஆரம்பத்தில் சென்னை என்பது மீனவர்கள் மற்றும் வன்னிய மக்களின் நிலமாக மட்டும் இருந்தது (உண்மையை சொல்லப் போனால் ஒரு காலத்தில் ஆந்திரத்து ராயல சீமா வரை இருந்தவர்கள் வன்னிய மக்களே . அதற்கும் வடக்கே வாழ்ந்த வடுகர்கள் அதாவது தெலுங்கர்கள் மெல்ல மெல்ல தெற்கு நோக்கி நகர்ந்து இப்போது தென் தமிழகம் வரை பரவி விட்டார்கள் )
மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்த மக்களால் சென்னை நிரம்பியது . அப்படி வந்தவர்களில் வழியில்லாத காரணத்தால் திருட்டு ரயிலில் சென்னையை அடைந்து உழைத்து கொடி கட்டி வாழ்ந்த பலர் உண்டு . அப்படி இந்த திருட்டு ரயில் படமும் வெற்றிக் கொடி கட்டட்டும் ” என்றார் .
கட்டட்டும் !