அப்பா படத்தின் மூலம் சமூக அக்கறையால் ரசிகர்களைக் கவர்ந்த சமுத்திரக் கனி அடுத்து ‘தொண்டன் ‘ என்று வருகிறார்
வசுந்தரா தேவி பிலிம்ஸ் சார்பில் ஆர். மணிகண்டன் மற்றும் நாடோடிகள் திரைப்பட நிறுவனம் சார்பில் சமுத்திரக்கனி தயாரிக்க,
சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா, ஆராதனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு , ஞான சம்பந்தன், வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், , படவா கோபி, சவுந்திரராஜா ஆகியோர் நடிக்க,
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவில் சமுத்திரக் கனி எழுதி இயக்கி இருக்கும் படம் தொண்டன் படத்தின்,
பாடல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து படக் குழு . நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .
உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஓட்டுனராகவும் மருத்துவ உதவியாளராகவும் முறையே பணி புரியும் சமுத்திரக்கனி , விக்ராந்த் அவர்களின் ஜோடிகளாக முறையே சுனைனா, அர்த்தனா ,
அவர்களின் வாழ்க்கை, பாசம், பகை, விவசாயியின் நிலை என்று பல விசயங்களைக் கொண்ட பரபரப்பான தெறிப்பான தொகுப்பாக இருந்தது முன்னோட்டம் .
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் அமைந்த – சமுத்திரக் கனி – சுனைனா நடித்த பாடல் ஒன்று, விக்ராந்த – அர்த்தனா நடித்த ஒரு பாடல் என்று இரண்டு இனிமையான உயிரோட்டமுள்ள பாடல்கள் திரையிடப்பட்டன .
நிகழ்ச்சியில் பேசிய சுனைனா
“இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான ஒன்று . அர்த்தமுள்ள கதாபாத்திரம் . என் கதாபாத்திரத்துக்கு காட்சிகளில் நல்ல முக்கியத்துவம் இருக்கிறது . படம் மிக நன்றாக வந்திருக்கிறது ” என்றார் .
நடிகர் மூர்த்தி பேசும்போது
” நிறைய கதாபாத்திரங்கள் அவ்வளவு இயல்பான சமூகத்துக்கு தேவையான கதை . எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரியான படம் ” என்றார் .
கவிஞர் யுகபாரதி தன் பேச்சில்
” சமுத்திரக்கனிக்கு பாட்டு எழுதுவது சுலபமானது .ஏனென்றால் பாடலில் என்ன வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருக்கும் .
இந்தப் படத்தின் பாடல்களும் அப்படியே அமைந்தது . ஜஸ்டின் பிரபாகரன் இசை மிக சிறப்பாக வந்துள்ளது ” என்றார்
இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது
” சமுத்திரக் கனி சாருடன் இது முதல் படம் . ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது .
ஆனால் போகப் போக உற்சாகப்படுத்தி இயல்பாக பணியாற்ற வைத்தார் . யுக பாரதியின் வரிகள் சிறப்பாக அமைந்தன ” என்றார்
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் தன் பேச்சில்
” இந்தப் படத்தின் முதல் பாதியை ஒளிப்பதிவு செய்தவர் ரிச்சர்டு நாதன் . இரண்டாம் பாதி நான் ஒளிப்பதிவு செய்தேன் .
ஒரு , பாதிப் பாடல் தவிர மற்ற பாடல்களை நானே ஒளிப்பதிவு செய்தேன் .
எனது குருநாதர் இயக்குனர் பிரியதர்சன் வேகமாக அதே நேரம் தரமாக பணி புரிவார். சமுத்திரக்கனியும் அப்படித்தான். அதனால் என்னால் சமுத்திரக்கனியின் ஓட்டத்துக்கு ஓட முடிந்தது ” என்றார்
விக்ராந்த் பேசும்போது
” இந்தப் படத்தில் எனக்கு மிக முக்கியமான ஒரு கேரக்டர் கொடுத்துள்ளார் கனி அண்ணன் .
அது மட்டுமல்லாது இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றியபோது நிறைய கற்றுக் கொண்டேன் . அது எப்போதும் எனக்கு உதவும் ” என்றார்
முத்தாய்ப்பாகப் பேசிய சமுத்திரக் கனி
“தமிழகத்தின் ஒரு முக்கியமான ஊரில் ஒரு தலைக் காதல் .. அல்ல அல்ல காமம் காரணமாக …..
கிடைக்காத ஆத்திரத்தில் ஒரு வகுப்புக்குள் நுழைந்து நாற்காலியின் காலைப் பிடுங்கி ஒரு பெண்ணை அடித்துக் கொன்றான் ஒருவன் . மற்ற பெண்கள் எல்லோரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அந்த செய்தி என்னை மிகவும் பாதித்தது. ஒருவேளை அங்கிருந்த மற்ற பெண்கள் அவனை எதிர்த்து இருந்தால் அந்த பெண் இறந்து இருக்க மாட்டாள் . அதுதான் இந்தப் படத்தின் அடிப்படை நோக்கம் .
இந்தப் படம் வந்த பிறகு பெண்களை யாராவது தாக்க முயன்றால் மற்ற பெண்கள் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் .
அடுத்து உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுவோரின் வாழ்க்கை மற்றும் உணர்வுகள் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதோடு ஜல்லிக்கட்டு , விவாசாயிகள் பிரச்னை என்று பல சமூக விசயங்களை படம் பேசும் .
ஜல்லிக்கட்டுப் பிரச்னையின் போது, நான் அலங்கா நல்லூர் வாடி வாசலில் மழை வெயில் பாராமல் இரண்டு நாள் உட்கார்ந்து இருந்தேன் . அப்போது கேட்ட பல சம்பவங்கள் இந்தப் படத்தில் வருகிறது .
ஒரு நீண்ட ஒரே ஷாட் காட்சியில், தமிழ் நாட்டின் 87 வகை நாட்டு மாடுகளின் பெயர்களை சொல்கிறேன் . இந்தக் காட்சியில் நான் நடிக்க வெகுகாலம் பயிற்சி செய்து தயார் ஆனேன் .
விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் .எல்லாருமே மிக சிறப்பாக பங்களித்துள்ளனர் . படம் விரைவில் திரைக்கு வரும் ” என்றார் .