சும்மா சொல்லக் கூடாது ; கொசோவா நாட்டைச் சேர்ந்த — அல்பேனிய மொழியிலான (அன்னை தெரசாவின் தாய்மொழி ) – அசத்தலான படம் . அட்டகாசமான டைரக்ஷன் .
2000 ஆம் ஆண்டு நடந்த போரில் கொசோவாவில் உள்ள பைக்கன் என்ற — கிராமியக் கலாசாரமும் சமூக அந்தஸ்து உணர்வும் மாறாத — ஓர் ஊருக்குள் நுழைகிறது அந்நிய ராணுவம் . ஆண்கள் பலரும் போருக்குப் போய்விட்ட நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த நான்கு பெண்களை கடத்திக் கொண்டு போய் ஒரு மரத்தடியில் வைத்துக் கற்பழித்துவிட்டுப் போய் விடுகிறது .
போர் முடிந்து எல்லோரும் சகஜநிலைக்கு வந்த நிலையில் , ஒரு இன்டர்நேஷனல் பத்திரிகைப் பெண்மணியிடம் பேசும் அந்த ஊர்ப் பெண்மணி ஒருவர் விசயத்தை சொல்கிறார். அது செய்தியாகவும் வந்து விட , அந்த ஊர் ஆண்களுக்கு, ‘கற்பழிக்கப்பட்ட நால்வரில் தனது மனைவியும் ஒருத்தியோ என்ற சந்தேகம் எழுகிறது .
விஷயம் தெரிந்த ஒரு நபருக்கு , தன் மனைவி கற்பழிக்கப்பட்ட விஷயம் ஊர் முழுக்க தெரிந்து விடுமோ என்ற பயமும் இருக்கிறது .
அந்த ஊர்த் தலைவர் , அவரது மனைவி, மகள், மகளைக் காதலிக்கும் ஓர் இளைஞன், சொகோல் என்ற ஒரு நபர், அவனது மனைவி , ஒரு மதுபான விடுதி உரிமையாளர் , எப்போதும் அங்கே குடித்துக் கொண்டிருக்கும் அவரது நண்பர் ….
இந்தக் கதாபாத்திரங்களுக்கு இடையில் பள்ளிக்கூட டீச்சரம்மா, அவரது மகன் ….இவையே முக்கியக் கதபாத்திரங்கள்.
டீச்சரம்மாவின் கணவன் போர் சமயத்தில் காணமல் போய்விட்டவன் .
டீச்சரம்மாவுக்கு ஊரில் நிரம்ப மரியாதை .
ஆனால் பத்திரிக்கையாளரிடம் பேசி விசயத்தை வெளியே சொன்னது டீச்சர்தான் என்று தெரிந்த பிறகு அது மாறுகிறது . ஊரே அவரை எதிர்க்கிறது . “கற்பழிக்கப்பட்டது அவள் மட்டும்தான் . ஆனால் அந்த அவமானத்தை நியாயப்படுத்தவே மற்ற மூன்று பெண்களும் உண்டு என்று அவள் சொல்கிறாள்” என்று தொடர்ந்து வற்புறுத்துகிறார் ஊர்த் தலைவர் .
டீச்சரின் பள்ளி வேலை பறிக்கப்படுகிறது . ஊரே ஒதுக்கி வைக்கிறது .
பரபரப்பான மனிதனான சொகோல் டீச்சரை சந்தித்து ” என் மனைவியும் கற்பழிக்கப்பட்டாளா?” என்று சொல்லச் சொல்லிக் கெஞ்சுகிறான் . இல்லை என்று டீச்சர் சொல்கிறாள்.
சொகோல் அதை தன் மனைவியிடம் “இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன்”என்று சொல்லி சந்தோஷப்பட, மறுநாள் அவன் மனைவி தூக்கில் தொங்குகிறாள் .
ஊர்த் தலைவருக்கு , தன் மகள் காதலிக்கும் இளைஞனை பிடிக்கவில்லை . ஆனால் அவள் மகள் தைரியமாக தந்தையை எதிர்க்கிறாள். தந்தை மீது அவளுக்கு மரியாதை இல்லை .போருக்குப் பிறகு எப்போதும் ஏதாவது பொருளை சுத்தம் செய்து கொண்டு இருப்பதையே வழக்கமாகக் கொண்டு இருக்கும் அவரது மனைவியும் ‘உன்னை விட அவன் மேல்’என்ற ரீதியில் கணவனை எதிர்க்கிறாள் .
இந்த நிலையில் தான் கற்பழிக்கப்பட்டதாக ஊரறிய …. ம்ஹும்! உலகறிய ஒத்துக் கொண்ட டீச்சருடைய கணவன் ஊருக்கு வருகிறான் …..
இதுதான் படத்தின் கதை .
இந்தப் படத்தில் இருந்து நமது பள்ளிக் கல்வித்துறை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு .
நமது பள்ளிகளில் சரியாக கரும்பலகையை மறைக்கும்படி நாற்காலியும் மேசையும் போட்டுக் கொண்டு ஆசிரியர்கள் உட்கார்ந்து கொ’ல்’வார்கள் . கரும்பலகை மறைக்கப்படும் நிலையில் மாணவன் ஒழுங்கான எழுதாவிட்டால் அவனை அடிப்பார்கள் .
ஆனால் இந்தப் படத்தில் வரும் பள்ளிக் கூடத்தில் கரும்பலகையை கொஞ்சம் கூட மறைக்காமல், ஒரு ஓரததில் தள்ளி மேசை நாற்காலி போட்டு உட்கார்ந்து, பாடம் நடத்துகிறார்கள்
ஊர்த் தலைவரின் மகளின் காதலன் அவளைப் பார்க்க கடைக்குள் வந்து விடுவான் . சட்டென்று தலைவர் எதிர்ப்பட, பதறி நின்று கடைக்கு பொருள் வாங்க வந்தவன் போல சிகரெட் வாங்கிக் கொள்வான். ஊர்த் தலைவருக்கு அவன் உண்மையிலேயே சிகரெட் வாங்கத்தான் வந்தானா என்று தெரிய வேண்டும் ?
எப்படிக் கண்டு பிடிப்பது ?
தான் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டு அவனிடம் லைட்டர் கேட்பார் . ஆனால் அவனிடம் லைட்டர் இருக்காது (கடையில் லைட்டர் தரும் பழக்கம் அங்கு இல்லை )
சரி என்று இவரே அவனது சிகரெட்டைப் பற்ற வைக்க , முதல் புகை இழுத்த உடன் அவன் இருமுவான் .
இதன் மூலமே அவன் ‘சிகரெட் புகைக்கும் பழக்கம் இல்லாதவன்; கடைக்கு வந்தது சிகரெட் வாங்க இல்லை; மகளைப் பார்க்கவே’ என்பதைக் கண்டு பிடித்து அவன் தலையில் தட்டி”இனிமே இங்கே வந்தே கொன்னுடுவேன்” என்று மிரட்டி அனுப்புவார் .
ஒரு நிலையில் மகள் அவனுடன் வாழ முடிகு செய்ய , இப்போது அவன் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அழகாகப் புகைக்க, அவர் சிகரெட் பற்ற வைத்து புகைக்கும்போது மகளின் தைரியத்தில் அதிர்ந்து இருமுவார் .
ஒரு காட்சியில் கடைக்கு வெளியே இருந்து அவன் ஊர்த் தலைவரின் மகளை ‘நோக்க’….அதைப் பார்த்த அவர் ,அவனிடம் போய் ” இந்த கிராமத்துல மொத்தம் 13 தெரு இருக்கு . அதுல 12 தெருவுல நீ எங்க வேண்ணா போலாம் ஆனா இந்த தெருவுல உன்ன இனிமே பார்த்தேன் .. தொலைச்சுருவேன்” என்பார் .
இந்த நகைச்சுவைகள் மட்டுமல்ல ..
படத்தில் நெகிழ்வான , படபடப்பான , மனம் கனக்கச் செய்கிற சிறப்பான , அர்த்தமுள்ள காட்சிகள் நிறைய .
சூப்பர் லொக்கேஷன், காதலிக்கத் தூண்டும் எக்ஸ்போஷர் என்று கண்ணுக்கு அவ்வளவு சுகம் .
அட்டகாசமான டைரக்ஷன் மற்றும் ஸ்கிரிப்ட் . காட்சி அமைப்பு, நடிப்பவர்களின் பொசிஷன் , ஷாட்களின் சரியான நீளம் , பொருத்தமான சைலன்ஸ் நொடிகள் , காட்சியின் உணர்வுக்கு பொருத்தமான ஃபிரேமிங்ஸ் , இரவு பகல், மழை வெயில் ஆகியவற்றை பயன்படுத்திய விதம்… ஒரு ஃபிரேமில் இயங்கும் நடிக நடிகையருக்கு இடையே உள்ள அர்த்தமுள்ள இடைவெளி ….
எல்லாமே சேர்ந்து இயக்குனர் Isa Qosja ,மற்றும் திரைக்கதையாளர் Zymber Kelmendi ஆகியோர் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது .
சொகொலின் மனைவி மரணத்துக்கு டீச்சரின் மகன் அனுதாபம் தெரிவிக்கும் காட்சி ஒரு உதாரணம் .
படத்தை முற்றாகப் புள்ளி வைத்து முடிக்காமல், கதையை நம்மோடு சேர்த்து அனுப்பி வைத்த விதமும் அபாரம்
படத்தின் முன்னோட்டம்