பே வியூ புராஜக்ட் சார்பில் போனி கபூர் தயாரிக்க, அஜித் , மஞ்சு வாரியர் , சமுத்திரக்கனி நடிப்பில் அ. வினோத் இயக்கி இருக்கும் படம்.
பிரபல வங்கியில் கொள்ளையடிக்க ஒரு குரூப் நுழைகிறது . கொள்ளை அடிக்கும்போதுதான் நம்மை விட வலுவான இன்னொரு நபரும் (அஜித்) கொள்ளையடிக்க அங்கே இருப்பது தெரிகிறது . அவர் யார்? ஏன் கொள்ளை அடிக்க வந்தார் ? அவரை விட கொள்ளைக்காரர்கள் யார் ?என்பதே துணிவு .
ஒரு தனியார் வங்கியின் இயக்குனர் மக்கள் பணத்தை அநியாயமாகக் கொள்ளை அடிப்பதோடு , மற்ற அயோக்கிய அதிகார வர்க்க , பணக்கார நபர்களோடு அதை எப்படி பகிர்ந்து கொள்கிறார் என்பதை நாயகன் உணர்த்தும் வகையில் வந்திருக்கும் படம் .
முழுக்க முழுக்க அஜீத் நிரம்பி வழியும் படம். வெள்ளை தாடி , கண்ணாடி, சில்வர் வண்ண உடை , கம்பீர அடித்தளக் குரல், கண்கள் இடுங்கிய அந்த உள்ளார்ந்த சிரிப்பு இவற்றோடு , மேலும் நமட்டுச் சிரிப்பு , துப்பாக்கியோடு கெத்து நடனம் என்று படத்தை அசத்தலாக ஆக்கிரமிக்கிறார் அஜித் .
மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் வினோத் . முதல் அரை மணி நேரம் அதகளம் . பணத்தை கொட்டி எரித்தால் கூட இவ்வளவு செலவு ஆகாதோ என்ற அளவுக்கு படம் முழுக்க எதாவது வெடித்துக் கொண்டும் , எரிந்து கொண்டும் , உடைந்து கொண்டும் , சிதறிக் கொண்டும், பிளந்து கொண்டும் , நொறுங்கிக் கொண்டும் இருக்கின்றன
பர்பி டால் கையில் மிட்டாய் துப்பாக்கி கொடுத்த கதையாக எக்ஸ்பிரஷன் கொடுத்தாலும் ஆக்ஷனில் உற்சாகமாக நடித்துள்ளார் மஞ்சு வாரியார் .
இது தமிழ்நாடு மிஸ்டர் ரவீந்தர் என்று சமுத்திரக்கனி பேசும் அரசியல் வசனத்துக்காக அவருக்கும் முக்கியமாக வினோத்துக்கும் அழுத்தமான கை குலுக்கல்கள்.
ஊழல் பத்திரிகையாளராக பட்டிமன்றப் பேச்சாளர் கல்யாண சுந்தரமும் ஊழல் போலீஸ் அதிகாரியாக பக்ஷும் சிரிக்க வைக்கிறார்கள் .
வங்கிகள் மக்களை ஏமாற்றுவது என்பதில் உள்ள விஷயங்கள் ஒரு கடல் போல . அதில் ஒரு சொம்பு மட்டும் மொண்டு காட்டுகிறார் வினோத் . சாதாரண கான்ஸ்டபிளை விட்டு பண முதலைகளை வெளுக்க வைப்பது ஒரு காட்சிக்கு ஓகே . ஆனால் இன்னும் விஷயத்தாலும் வசனத்தாலும் வெளுக்க வைப்பதற்கு பதில் லத்தியை காட்டி விட்டுப் போகிறார் வினோத் .
இன்னும் சிறப்பான திரைக்கதை இருந்திருக்க வேண்டும்