ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் இருவரும் தயாரிக்க, விஜய், ராஷ்மிகா மந்தனா , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கி இருக்கும் படம்.
சக்தி வாய்ந்த தொழில் எதிரியைக் (பிரகாஷ் ராஜ்) கொண்ட பெரும் தொழிலதிபர் ஒருவரின்(சரத்குமார்) மூன்று மகன்களில் முதல் இரண்டு மகன்கள் ( ஸ்ரீகாந்த், ஷாம்) அப்பாவுடன் தொழிலில் இருப்பவர்கள் . மூன்றாவது மகன் (விஜய்) சுயமான தொழில் முனைவோராக முயல்பவர் . இதனால் அப்பாவுக்கும் மூன்றாவது மகனுக்கும் சண்டை வந்து அவனை வீட்டை விட்டே அனுப்புகிறார் அப்பா.
ஒரு நிலையில் அப்பாவுக்கு கணையப் புற்று நோய் இருப்பதும் இனி எட்டு மாதம் தான் உயிரோடு இருப்பார் என்பது அவரது குடும்ப நண்பரான டாக்டருக்கு (பிரபு தெரிகிறது)
இதற்கிடையே தவறான உறவுகள் மற்றும் செயல்பாடுகள் காரணமாக முதல் இரண்டு மகன்களும் தொழில் எதிரியின் கைப்பாவையாக மாற, , தொழில் அதிப அப்பா சாவதற்குள் அவரது தொழில் சாம்ராஜ்யம் நொறுங்கும் நிலை .
மருத்துவர் மூன்றாவது மகனிடம் விஷயத்தை சொல்ல அவர் வந்து என்ன செய்கிறார் என்பதே வாரிசு .
கார்த்திக் பழனியின் சிறப்பான ஒளிப்பதிவின் உதவியோடு , இயக்குனர் வம்சி பைடிபள்ளி மிகச் சிறப்பாக காட்சிகளை அமைத்து இயக்கி இருக்கிறார் .
ஆனால் சொங்கிப் போன சூரிய வம்சம் என்பது போல, மிகச் சாதாரணமான ஆயிரம் முறை அடித்துத் துவைக்கப்பட்டு பிய்ந்து நைந்து போன திரைக்கதையும் போதாமை நிறைந்த வசனங்களும் படத்தை பின்னோக்கி இழுக்கின்றன . இத்தனைக்கும் நாலு பேர்…. வம்சி, ஹரி , அஹிஷோர் சாலமன் , நம்ம ஊர் கவிஞர் விவேகா என்று நாலு பேர்… சேர்ந்து கதை திரைக்கதை எழுதி இருக்கிறார்கள் .
ஒருத்தர் உட்கார்ந்து உருப்படியாக எழுதி இருந்தால் நன்றாக வந்திருக்குமோ என்னவோ .
விஜய் படத்துக்கான ஒப்பனிங் பாடலா இது என்று கேட்கிற அளவுக்கு ஒரு பாடல் கொடுத்திருக்கிறார் தமன். பேரதிர்ச்சி. . ரஞ்சிதமே ரஞ்சிதமே மட்டும் தெறிக்க விடுகிறது . ராயல சீமா மிளகா மாதிரி அப்படி ஒரு அசத்தும் சிவப்பு. அந்தப் பாடலில்.அந்த ஒரு பாட்டில்தான் ராஷ்மிகா மந்தனாவும் ரசிக்கும்படி இருக்கிறார் . மற்ற காட்சிகளில் எல்லாம் மந்தமாக இருக்கிறார் .
எல்லாவாற்றையும் வியர்வையும் ரத்தமுமாக தூக்கிச் சுமக்கிறார் விஜய் .
அட்டகாசமான தோற்றம், தெறிக்க விடும் நடனம் . தனக்கே உரிய குசும்புக் காமெடி , அட்டகாசமான வசன உச்சரிப்புத் தொனி , அமர்த்தலான முக பாவனைகள் என்று விஜய் … விஸ்வரூபம் .
விஜய் மட்டும் இல்லாவிட்டால் இந்தப் படம் பற்றி யோசிக்கவே முடியாது .
பிரகாஷ் ராஜ் நடிப்பில் வழக்கம் போல மிரட்டுகிறார். யோகி பாபு சிரிக்க வைக்கிறார் . மற்றவர்கள் எல்லாம் வந்து வந்து வசனம் பேசிவிட்டுப் போகிறார்கள்.
வீட்டுக்குப் போகணும் ஆத்தா வையும் என்று நாம் கதறினாலும் படத்தை முடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் .
அற்புதமான திரை நாயகன் விஜய் கதைத் தேர்வில் …. அல்ல அல்ல .. திரைக்கதைத் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் .
மொத்தத்தில் வாரிசு…… விஜயாலயன் . .