ஒப்பன் தியேட்டர்ஸ் மற்றும் மின் மேக்ஸ் மூவீஸ் சார்பில் தமிழினி மற்றும் மணிகண்டன் இருவரும் தயாரிக்க,
கே.பாக்யராஜ், கவுண்டமணி , தியாகராஜன், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ், ஊர்வசி, ராம்கி , மனோஜ் பாரதிராஜா, ப்ரித்வி பாண்டியராஜன்,
நமோ நாராயணன் , வெங்கட் என்று ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமே நடிக்க ,
கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த செந்தில் குமார் இயக்கி இருக்கும் படம் வாய்மை
பாரதிராஜாவின் வாரிசு மனோஜ் , பாரதிராஜாவின் கலை வாரிசான பாக்கியராஜின் வாரிசு சாந்தனு , பாக்கியராஜின் கலை வாரிசான பாண்டியராஜனின் வாரிசு பிருத்வி ஆகியோர் நடித்து இருக்கும் படம் இது
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்
படத்தின் முன்னோட்டமும் ,
இந்தியா எப்படி வெள்ளைக்காரனிடம் அடிமைப்பட்டது என்பதை விளக்கும் வகையில் சுமார் ஏழு நிமிடத்துக்கு கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட பாடல் ஒன்றும்
திரையிடப்பட்டன
சம்மந்தப்பட்ட பாடலில் ஜான்சி ராணி போர் , ஜாலியன் வாலாபாக் படுகொலை , பகத் சிங் — சுகதேவ் — , ராஜ குரு தூக்கு, வீரபாண்டியக் கட்ட பொம்மன் தூக்கு ,
காந்தியை தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து தள்ளி விட்டது , தண்டி யாத்திரை , நேருவின் போராட்டம் இப்படி பல விஷயங்கள் கிராபிக்ஸ் காட்சிகளாக இடம் பெற்று இருந்தன .
ஒரு முக்கியமான தூக்குத் தண்டனையைத் தடை செய்ய பல்வேறு அறிஞர்கள் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து பேசி முடிவு எடுப்பதுதான் படத்தின் கதை என்பது புரிந்தது .
இந்தியாவில் இது வரை எந்த பெண்ணுக்கும் தூக்குத் தண்டனை வழங்கப் படாத நிலையில் அந்தக் கதாபாத்திரம் ஒரு பெண் கதாபாத்திரம் என்பதும் முன்னோட்டம் மூலம் புரிந்தது .
கவுண்டமணி பேசும் “நான் என்ன நம்பறத விட நீங்க என்னை அதிகமா நம்பறது அதிகமா இருக்கு ” என்ற வசனம் கல கல.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர செந்தில் குமார்
” வீட்டு விஷயம், நாட்டு விஷயம் ,பிணக்கு , பகை எதுவாக இருந்தாலும் பேசினா தீர்ந்துடும் என்பதுதான் இந்தப் படம் சொல்ல வரும் விஷயம்.
ஒரு தூக்குத் தண்டனையை நிறுத்துவது பற்றி பேசும் படம் இது ” என்றார்
பூர்ணிமா பாக்கியராஜ்
“இந்த படத்தில் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளேன் . ஆனால் என்னிடம் கதையையே இயக்குனர் சொல்ல வில்லை .
ஆனால் இப்போது பார்க்கும்போது படம் நன்றாக வந்துள்ளது தெரிகிறது” என்றார் .
சாந்தனு பேசும்போது ” எனக்கு மட்டும் முழு கதையும் தெரியும் . ஒரு தூக்குத் தணடனையை நிறுத்த பல்வேறு துறை நபர்கள் ஒன்று கூடி பேசுகிறார்கள் என்ற விஷயம் சிறப்பாக இருந்தது.
அதனால்தான் ஒத்துக் கொண்டு நடிக்கவே ஆரம்பித்தோம்
கே பாக்யராஜ் பேசும்போது ” நான் இன்னும் படத்த பார்க்கல . ஆனா நல்ல வந்திருக்குன்னு இப்போ தெரியுது . ரொம்ப கஷ்டப்பட்டு போராடி எடுத்து இருக்காங்க . படம் நின்னு போயிடும்னே பல தடவை நினைச்சோம் .
ஆனா நல்ல படியா முடிஞ்சு வந்துருச்சி . வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் .
வெங்கட் பேசும்போது ” நான் இந்தப் படத்தை முழுக்க பார்த்துட்டேன்.
படம் கண்டிப்பா வெற்றி பெறும்’ என்றார்
பொய்மையும் வாய்மையும் இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்றார் வள்ளுவர் .
ஒரு அப்பாவியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒரு உண்மைக்குப் பதில் பொய்யை சொல்லி சாதிப்பதுதான் படத்தின் கதையாக இருக்குமோ ?