பெயர்தான் ரொம்ப சின்னது. ஆனால் படம் பற்றி யுவராஜ் தயாளன் சொல்லும் விஷயங்கள் எல்லாம் ரொம்ப பெரியது .
“பொதுவாக ஒரு நல்ல கூட்டத்தில் தப்பான ஒருவன் இருந்தால் அவனை கருப்பு ஆடு என்று சொல்வார்கள். அதே போல ஒரு மோசமான கூட்டத்தில் ஒரு நல்லவன் சிக்கிக் கொண்டால் அவனை எலி சிக்கிருச்சி என்பார்கள் . அந்த எலிதான் இந்த படத்தில் வடிவேலு சாரின் கேரக்டர் .
ஒரு தவறான கூட்டத்தில் புகுந்து ஒருவரை ஒருவருக்கு போட்டுக் கொடுத்து அவர்களை குழப்புவதற்காக செல்லும் வடிவேலு நினைத்தது போல, விஷயம் அவ்வளவு சுலபமாக இல்லை . நூறு பூனைக்கு நடுவில் ஒரு எலி மாட்டியது போல ஆகிறது நிலைமை. அப்புறம் என்ன நடந்தது என்பதை காமெடியாக சொல்வதே இந்தப் படம் .
இந்தக் கேரக்டருக்காக எலியின் உடல் மொழிகளை அப்படியே பின்பற்றி நடிக்கிறார் வடிவேலு . இருட்டறைக்குள் நீங்கள் திடீரென விளக்கை போட்டால் , அதுவரை சுற்றிக் கொண்டிருந்த எலி சட்டென்று அதிர்ந்து நிற்கும் . அப்புறம் நாம் நகரும்போதுதன் அதுவும் ஓடும் . படத்தில் வடிவேலுவின் நடவடிக்கைகள் அப்படியே இருக்கும் .
அதே போல வீட்டுக்குள் எலி அடிக்க வேண்டும் என்று கிளம்பினால், எலி அடிக்கப்பட்டாலும் சரி தப்பித்தாலும் சரி அதற்குள் வீடே கந்தர கோலம் ஆகிவிடும் . படத்தின் காட்சிகளிலும் அந்த தன்மை காமடியாக இருக்கும் .
படத்தை 1960களில் வந்த தமிழ் படங்களின் பாணியில் எடுத்துள்ளோம். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வந்த பாணியில் திரில் இசையை வித்யாசாகர் அமைக்கிறார் . அதே நேரம் பழைய தமிழ் சினிமாவை கிண்டல் செய்கிற படமும் இல்லை .
படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சதா நடிக்கிறார் . கொள்ளைக் கூட்டத்தில் நடனமாடும் பெண்ணாக அவர் வருகிறார் .
வடிவேலுவுடன் பல படங்களில் நயன்தாரா , தமன்னா , என்று பல நடிகைகளும் நடனம் ஆடி இருக்கிறார்கள் . எனவே இந்தப் படத்தில்,சதா ஜோடியாக நடிப்பது பெரிய விஷயம் இல்லை.
தவிர , வடிவேலு – சதா சம்மந்தப்பட்ட காட்சிகளில் ரொமான்ஸ் எல்லாம் பெரிதாக இருக்காது காமெடிதான் பிரதானமாக இருக்கும் ” என்கிறார் யுவராஜ் தயாளன்
படம் மே மாச ரிலீஸ் . !
வர்றாருய்யா… மறுபடியும் வடிவேலு வர்றாருய்யா….!.