பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து, 17 ஆம் தேதி திரையைத் தொடுகிறது மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி. இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தது மணிரத்னம் , பி சி ஸ்ரீராம், ஏ ஆர் ரகுமான், வைரமுத்து, நாயகன் துல்கர் , சல்மான் அடங்கிய படக் குழு .
படத்தின் பாடல்கள் சிலவற்றின் சிறு சிறு பகுதிகளை திரையிட்டார்கள் . புத்தம் புது வெளி பாடலில் இது வரை நாம் எங்கும் காணாத ஒரு டோனில் கலக்கி இருந்தார் ஒளிப்பதிவு சாதனையாளர் பி சி ஸ்ரீராம் .
பொதுவாக பாடல் காட்சிகளில் மணிரத்னம் படத்துக்கே உரிய வழக்கமான இளமைக் குறும்பு தெறித்தது. அதே நேரம் கல்யாணமே வேண்டாம் என்று சேர்ந்து வாழும் ஒரு காதல் ஜோடியின் கதைதான் இந்தப் படம் என்பதும் முன்னோட்டத்திலேயே தெரிந்தது.
நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து ” இந்தப் படத்தில் ஒரு மாபெரும் கலாச்சார அதிர்சியையே மணிரத்னம் வைத்து இருக்கிறார் . கால மாற்றத்தை உணர்த்தும் படமாக இது இருக்கும் . இன்னும் ஐம்பது ஆண்டுகளில் திருமணம் என்ற நிறுவனமே இல்லாமல் போய்விடும் ” என்றார் வைரமுத்து .
பி சி ஸ்ரீராம் ரகுமான் இருவரும் வழக்கம் போல சில வார்த்தைகளோடு பேச்சை முடித்துக் கொள்ள,
மணிரத்னம் வந்து படத்தில் நடித்து இருக்கும் துல்கர் சல்மான் , கலாக்ஷேத்ராவின் முன்னாள் தலைவர் லீலா சாம்சன் ஆகியோரை அறிமுகபடுத்தி அவர்களைப் பற்றி பேசினார் .
படத்தை வாங்கி வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ” படத்துக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது . தமிழகம் எங்கும் சுமார் 350 திரைகளில் சிறப்பாக வெளியிடுகிறோம் ” என்றார்.
“கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை இந்தப் படம் சரி என்று சொல்கிறதா/” என்ற கேள்விக்கு பதில் சொன்ன மணிரத்னம் ” எல்லா விசயமும் எல்லாருக்கும் நியாயமாக இருக்காது . நீங்கள் முழுசாக படத்தைப் பார்த்தால்தான் யாருக்கு எது நியாயம் என்று தெரியும் . எனவே இன்னும் சில நாள் பொறுத்திருங்கள்” என்றார் .
எனவே, பொறுத்திருந்து … பார்ப்போம் !