ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ஐஸ்வர்யா தயாரிக்க, அஜித், ஸ்ருதிஹாசன், லக்ஷ்மி மேனன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் படம் வேதாளம்.
ரசிகர்களின் தோளில் எந்த அளவுக்கு ஏறும் இந்த வேதாளம் ? பார்க்கலாம் .
அண்ணன் தங்கை பாசத்தில் உருகிக் கொள்பவர்கள் கணேஷ் (அஜித்) மற்றும் தமிழ் (லக்ஷ்மி மேனன்) இருவரும் .
கல்கத்தாவுக்குப் போய் வசிக்கத் துவங்கி , தங்கையை பிரபலமான கல்லூரியில் சேர்த்து, டாக்சி டிரைவராக இயங்குகிறான் கணேஷ் .
ஸ்வேதா (ஸ்ருதிஹாசன்) என்ற வழக்கறிஞரின் அறிமுகம் கணேசுக்கு கிடைக்கிறது . அது மோதலில் முடிகிறது.
ஸ்வேதாவின் அண்ணன் அர்ஜுன் (அஷ்வின்) தமிழ் மீது காதல் கொள்கிறான். ஸ்வேதா கணேஷ் மீது காதலாகிறாள்
பார்ப்பதற்கு அமைதியாய் அடக்கமாய் கண்ணியமாய் அப்பாவியாய் தோன்றும் கணேஷ் – இந்தியாவில் இருந்து பெண்களைக் கடத்தி உலகளாவிய விபசாரத்துக்கு அனுப்பும் ஒரு இன்டர்நேஷனல் கும்பலை சேர்ந்த இரண்டு பேரை, – அடுத்தடுத்து அதிரடியாய்க் கொல்கிறான் .
இரண்டாவது கொலை ஸ்வேதாவுக்கு தெரிய வர , அவள் “ஒரு கொலைகாரனான உன்னுடைய தங்கையை எங்கள் வீட்டு மருமகளாக ஏற்க முடியாது “ என்று சொல்ல,
கணேஷ்… ஒரு திருப்பத்தோடு கூடிய ஃபிளாஷ்பேக்கை சொல்கிறான் . அதில் கணேஷ், தமிழ் இருவரின் சென்னை வாழ்க்கை சொல்லப்படுகிறது . கணேஷ் கொலை செய்வதன் காரணம் உணர்த்தப்படுகிறது. ஸ்வேதா அந்த நியாயத்தை ஏற்கிறாள் .
கணேஷால் கொல்லப்பட்ட இரண்டு நபர்களின் அண்ணன், தன் தம்பிகளை கொன்றவனை பழிவாங்க வெளிநாட்டில் இருந்து சகல பலத்தோடும் கல்கத்தா வந்து இறங்குகிறான்.
அவனை கணேஷ் எதிர்கொண்டது எப்படி ? தமிழ் கல்யாணம் என்ன ஆச்சு ? என்பதே வேதாளம் .
மிருகத்தனமும் ரத்த வெறியும் குற்றம் செய்பவர்களுக்கு மட்டும்தான் இருக்க வேண்டுமா ? பழிவாங்குபவனும் வேதாளம் போல இயங்கலாம் என்று சொல்ல வரும் படம் .
படத்தின் ஆகப் பெரும் பலம்….. அனைவரும் அறிந்தது போல அஜித்!
அவருடைய இமேஜை நன்றாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார் இயக்குனர் . கெட்டப் , செட்டப் , புன்னகை என்று கவர்கிறார் அஜித் .
சென்னை ரவுடியாக நடிக்கும்போது வித்தியாசம் காட்டி நடிக்கவும் முயற்சி செய்து இருக்கிறார் .
இடைவேளைக்கு முந்தைய காட்சியில் எடுக்கும் ஆக்ஷன் விஸ்வரூபத்தில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் அஜித்.
தங்கையாக லக்ஷ்மிமேனன் ஓகே என்று சொல்லும் அளவுக்கு நடித்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் கிளாமர் ‘செட் பிராப்பர்டி.’
அஜீத்தை அடுத்து பாராட்டுக்குரியவர் ஒளிப்பதிவாளர் வெற்றி . கோணங்கள் , ஒளி, நிறப் பயன்பாடு எல்லாம் சிறப்பு .
அனிருத் இசையில் ஆளுமா டோலுமா பாடல் (இன்னா அர்த்தம் மாமே ?) உட்பட சில பாடல்கள் கொடுத்த வகையில் அனிருத் படத்துக்கு உதவி இருக்கிறார் .
சூரி, மொட்டை ராஜேந்திரன் , ஸ்ருதிஹாசன் ஆகியோரை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம்.
இவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ கையில் கிடைக்கும்போது, கதை திரைக்கதையில் புதுமையாக சிறப்பாக முயன்று இருக்கலாம் .
கணேஷ் பழிவாங்கக் கிளம்புவதற்கான ‘சம்பவம்’ நடப்பதற்கு ஒரு வகையில் கணேஷும் காரணம் என்ற ரீதியில் காட்சிகள் அமைகின்றன. அதை தவிர்த்து இருக்கலாம் .
எனினும் பெண்கள் முன்னேற்றம் பற்றிய வசனங்கள், பாராட்டுக்குரியன .
ஒரு நிலையில் ‘ராசுக்குட்டி ஸ்டைல்’ ட்விஸ்ட் கொடுத்தாலும், ஒரு இடைவேளைக்குப் பிறகு பார்ப்பதாலும், சில நெகிழ்வான காட்சிகளாலும் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் அள்ளுகிறது.
கடல், கப்பல் , சர்வைலன்ஸ் கேமரா, மொபைல் டிராக்கிங் என்று பரபரக்கும் காட்சிகளிலும், வில்லன் கையில் கணேஷின் படத்தை தமிழே வரைந்து தரும் காட்சியிலும் திரைக்கதையாசிரியர் சிவா ‘உள்ளேன் அய்யா’ சொல்கிறார் .
ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்ட விதத்திலும் அஜித்தை சண்டைக்காட்சிகளில் பயன்படுத்திய விதத்திலும் இயக்குனர் சிவா மஸ்து காட்டுகிறார் .