வீரபாண்டியக் கட்டபொம்மன் @ விமர்சனம்

katta 5

ஒரு கொள்ளைக்காரனாக இருந்து (ஆதாரம் ; தமிழ்வாணன் எழுதிய ‘கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்’ நூல் ) தன்னை நம்பி இருப்போருக்கு தலைவனாக ஆகி , ஒரு  நிலையில் வரி வசூல் என்ற பெயரில் தன்னிடமே பகற்கொள்ளை கொள்ளை அடிக்கப் பார்த்த ஆங்கிலேயன் மீது கோபப்பட்டு தைரியத்துடன் வரிகொடுக்க மறுத்த,

ஒரு பாளையக்காரனை (இந்திய அளவில் வெள்ளையனை முதன் முதன் முதலில் எதிர்த்தவர்கள் தீரன் சின்ன மலையும், வீரன் பூலித் தேவனும்தான். அதே போல இந்திய அளவில் வெள்ளைக்காரனை முதன்முதலில் எதிர்த்த அரசர்கள் என்றால் அது குறுநில மன்னர் சகோதரர்களான சிவகங்கைச் சீமையின் பெரிய மருது சின்ன மருது பாண்டியச்  சகோதரர்கள்தான் )……

katta 2

ராஜ ராஜ சோழன், ஜூலியஸ் சீசர் , அலெக்சாண்டர் அளவுக்கு உயர்த்திக் காட்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பை (‘கட்டபொம்மன் சிவாஜியாக நடித்த வீரபாண்டியக் கட்டபொம்மன் படம் பார்த்தேன்  ‘ என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியதை இங்கே நினைவில் கொள்க !) பார்த்து இன்னொரு முறை பிரம்மிப்பதும் …

சரித்திரத்தை வென்ற தமிழ் மாமன்னர்களின் பண்பு நலன்களை எல்லாம் கட்டபொம்மன் கதாபாத்திரத்துக்கு ஊட்டி அற்புதமாக திரைக்கதை அமைத்துக் கொடுத்த சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியாரின் பெருந்தன்மை மற்றும் திறமையை எண்ணி வியப்பதுவும்….

“கற்றுக் கொடுக்கும் இனம் தமிழினம்; நீர் கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம்” என்ற முழக்கத்தையும் “சாத்திரம் காட்டும கட்டுக்கதைகளில் கூட என் தமிழன் சரித்திரம் காட்டும் வீரச் செயல்கள் இல்லையடி வெள்ளையம்மா ” என்ற உண்மைப் பதிவையும் உலக சினிமாவை நோக்கிய தமிழ் சினிமாவின் கர்ஜனையாக ஒலிக்க விட்டு விட்டுப் போயிருக்கும் அமரர் சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களை எண்ணி சிலிர்ப்பதுவும்….

katta 8

வெள்ளையம்மாள் கதாபாத்திரத்துக்கு ஊழி நியாயம் செய்து உயிர் கொடுத்து உயிர் கொடுத்திருக்கும் நாட்டியப் பேரொளி கலையரசி பத்மினியின் நடன அழகையும் நடிப்பையும் பார்த்து மயங்குவதும் …

ஜெமினியின் வீர நடிப்பு, ஓ.ஏ.கே .தேவரின் உறுமிக் குரல் இவற்றை கேட்பதுவும் 

இசை மேதை ஜி.ராமனாதனின் இசை என்ற தேனை இன்னொரு முறை மொத்தமாகக் காதுகளில் நிரப்பிக் குதூகலிப்பதுவும்…

பிரம்மிக்க வைக்கும் அரங்குகள், உடை அலங்காரம் , ராஜஸ்தான் மாநில அரண்மனைகள், அந்தக் கால ராஜஸ்தான் போலீசாரின் வீரம் இப்படி பல இணையற்ற விஷயங்களை பார்த்து மகிழ்வதுவும் …

இவற்றை எல்லாம் ஒன்றிணைத்து உயர்த்திக் காட்டிய இயக்குனர் பி.ஆர்.பந்துலு ஐயாவின் கலை நுட்ப, தொழில் நுட்பத் திறமையை போற்றுவதும்…

katta 12

இந்த வாய்ப்புகள் எல்லாம் இன்றைய தலைமுறைக்கும் கிடைக்க வேண்டாமா ?

அதற்காக …

அன்றைய ஆஸ்காருக்கு இணையான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் விருதான கெய்ரோ தங்கப் பருந்து விருது பெற்று – இந்தியாவுக்கு வெளியே உச்சம் தொட்ட முதல் இந்தியப் படம் என்ற பெருமையை பெற்ற வீரபாண்டியக் கட்டபொம்மனை தொழில் நுட்ப மேம்பாடு செய்து திரைக்குக் கொண்டு வருகிறார் ஸ்ரீனிவாசலு .

பத்திரிக்கையாளர் காட்சியில் இந்தப் படத்தைப் பார்த்தது ஓர் அற்புத அனுபவம் . எந்தப் பத்திரிகையாளரும் தவற விட்டிருக்கக் கூடாத அனுபவம் .

சுமார் மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தை இன்றைய தலைமுறையும் ரசித்து வியந்து பார்த்ததுதான் அந்தப் படைப்பு மேதைகளின் பெருமை செல்லும் விஷயம் .

katta 1

அதாவது என்ற வார்த்தையை ஆயிரம் அர்த்தங்களுடன் சிவாஜி உச்சரிக்கும் போதும் , ஜாக்சன் துரையின் நாற்காலியை இழுத்துப் போட்டு கட்டபொம்மன் உட்காரும்போதும் , மஞ்சள் அரைத்துப் பணி  புரிந்தாயா என்று உச்சரிக்கும் விதத்திலேயே சிவாஜி வார்த்தைகளை அரைக்கும் கிண்டலுக்கும் , ”மன்னிப்புக் கேள்” என்று பானர்மேன் சொன்ன உடன் சிவாஜி துடிக்கும் துடிப்புக்கும் இன்றைக்கும் கைதட்டல் குறையாமல் ஒலிக்கிறது .

கிஸ்தி திரை வரி வட்டி வசனத்தை சிவாஜி பேசும்போது கூடவே பலரும் சொல்கிறார்கள் .

katta 11

”ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்டங்ங்ங்ங்ங்ங்ங்….”

– என்று வாளை உறைக்குள் அடித்துச் சொருகி விட்டு , “நீல வானிலே செந்நிறப் பிழம்பு …” என்று ஆரம்பித்து , “வெம்மணல் நிலமெலாம் செக்கர் வானம் போல்.. செம்பவழக் கறை போல்… செப்புத் தகடடித்து செப்பனிட்ட நிலை போல்… மாணிக்கக் கரைகட்டி மடை திறந்த நெருப்பாற்றை மத்தியிலே ஓட விட்ட அழகு போல்…” என்று பேசியபடி வரலட்சுமியை  கையில் பிடித்துக் கொண்டு  செந்தமிழை தலையில் சுமந்து  கொண்டு காதலும் வீரமுமாய் சிவாஜி கம்பீர நடை நடக்கும்போது,  அரங்கம் சிலையாகச் சமைந்து சிலிர்த்தபடி பார்க்கிறது .

katta 3

‘உனக்கு லாபமா ?” என்று பானர்மேன் கேட்க ‘உனக்கு நட்டமா ?” என்று கட்டபொம்மன் கேட்க , ”ஆற்காடு நவாபிடம் கேள்” என்று பானர் மேன் சோழ  பதிலுக்கு ‘அவனையே நான் கேட்கிறேன் என்று நீ அவனிடமே போய்ச் சொல்  ” என்று சிவாஜி கொக்கரிக்கும் அழகை இன்றும் கொண்டாடுகிறார்கள் .

“கண்டும் இந்த வண்டு விழி நாணுமோ ” என்ற வரியை பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடி இருக்கும் அழகை ரசிக்கிறார்கள் .

வி.கே. ராமசாமியின் எட்டப்ப நடிப்பு உற்சாகமாக ரசிகப்படுகிறது.

முத்துலட்சுமி
முத்துலட்சுமி

யாருமே எதிர்பாராத இன்னொரு அற்புதம் . டி.பி.முத்துலட்சுமி – ஏ,கருணாநிதி காமெடிக்கு வரிக்கு வரி கைதட்டல் விழுகிறது. அதிலும் முத்துலட்சுமி …!

என்னவோ போன மாசம் வசனம் எழுதி எடுக்கப்பட்டு முந்தா நாள் ரிலீஸ் ஆன படத்தின் ஆகச் சிறந்த கேரக்டரில் நடித்திருக்கும் ஆகச் சிறந்த நகைச்சுவை நடிகை போல டயலாக் டெலிவரியில் அசத்துகிறார் முத்துலட்சுமி  . இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவரது வசனம் பேசும் விதமும் நடிப்பும் பிரிட்ஜில் இருந்து எடுத்த ஆப்பிள் போல பிரஷ்ஷாக இருக்கும் என்பது தெரிகிறது . அவர் எல்லாம் எவ்வளவு பெரிய ஜீனியஸ் என்பதும் புரிகிறது .

சக்தி கிருஷ்ணசாமியின் வசனமும் இன்றைக்கும் பொருந்தும் அளவு அவ்வளவு நவீனமாக இருக்கிறது .

(உதாரணம்; நல்லவர்கள் நினைப்பதொன்றுதான் நடப்பதே இல்லை இந்தத் தமிழ்நாட்டிலே”) கட்ட பொம்மன் என்ற பாளையக்காரனின் கதை என்றாலும், 

அதற்கு முழுக்க முழுக்க உள்ளீடு வரை முழுமையான  தமிழ் உருவம் கொடுத்து இருக்கிறார் சக்தி கிருஷ்ணசாமி .

katta 13ஆரம்பக்காட்சியில் கொள்ளைக்காரனை போகிற போக்கில் கட்டபொம்மன் மன்னிக்கும் காட்சியில் பூடகமாக சில விசயங்களை புரிய வைக்கிறார்கள் ம.பொ.சி.யும் சக்தி கிருஷ்ண சாமியும் .

கைம்பெண் , விதவை போன்ற சொற்களுக்கு இணையாக — தாலி அறுத்தவள் என்ற பொருளில் அறுதாலி என்ற ஒரு நல்ல தமிழ்ச் சொல் (வினைத்தொகை புறத்துப் பிறந்த பண்புத் தொகை?) அப்போது புழக்கத்தில் இருந்திருப்பதையும் அறிய முடிகிறது

சக்தி கிருஷ்ணசாமி
சக்தி கிருஷ்ணசாமி

இன்றைய நிலையில் தமிழ் உணர்வுடன் இந்தப் படத்தைப் பார்த்தால் சிவாஜி நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் உண்மை வடிவமாக விடுதலைபுலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வாழ்ந்து இருப்பதை முழுமையாக உணர முடியும் .

படத்தை ரீமாஸ்டரிங் செய்து இருக்கிறார்கள் (ரீமாஸ்டரிங் செய்வதன் பலம் தெரிகிறது . அதன் பலவீனமும் சில மங்கலான காட்சிகளில் தெரிகிறது) 

5.1. ஒலித் திறம் கொடுத்து இருக்கிறார்கள் (சிவாஜியின் சிம்மக் குரலுக்கு முன்னாள்  மோனோ , ஸ்டீரியோ , 5.1 எல்லாம் மண்டியிட்டுத்தான் கிடக்கிறது . சிவாஜியின் குரலுக்கு அதனால் புதிதாக ஒரு மாற்றமும் தெரியவில்லை என்றாலும் ஜெமினி உள்ளிட்ட சிலரின் குரல்கள் இன்னும் சிறப்பாக ஒலிக்கிறது )

katta 7

வெள்ளையத் தேவன் சாயல்குடி சீனிக் காளையை அடக்கும் காட்சியில் ஒரிஜினல் படத்தில் நிஜமான சூழல் ஒலிகளை பயன்படுத்தி யதார்த்தமாக அமைத்து இருப்பார்கள். ஆனால் இந்த டிஜிட்டலில் இசை சேர்ப்பு செய்கிறேன் என்று சொதப்பி இருக்கிறார்கள் .

அதே நேரம் 35 எம் எம் படத்தை சினிமாஸ்கோப் ஆக மாற்றி இருக்கும் விதம் , ‘கிராப்’ செய்த விதம் அசத்தல் , எந்த ஃபிரேமிலும் தலை கழுத்து கட் ஆகாமல் பிரம்மாதப் படுத்தி  இருக்கிறார்கள்.

(படத்தில் மந்திரி தானாபதிப் பிள்ளையாக நடித்து இருக்கும் எம் ஆர் சந்தானம் இயக்குனர் சந்தான பாரதியின் தந்தை . கட்டபொம்மனின் நண்பர் டேவிட்சனாக நடித்து இருக்கும் கண்ணன்,  நூற்றுக்கணக்கான முறை சிவாஜி நடித்த போது சிவாஜி கணேசன் நடித்து மேடை ஏற்றிய கட்டபொம்மன் நாடகத்தின் இயக்குனர் )

பொதுவாக சண்டைக்காட்சிகளில் சிரத்தை எடுத்து நடிக்காதவர் என்று அறியப்படும் சிவாஜி , சிலம்பச் சண்டையையும் , குதிரை சவாரியையும் எவ்வளவு சிறப்பாக செய்து இருக்கிறார் என்பதையும் சினிமாஸ்கோப்பில் உணர முடிகிறது .

katta 4

வீரபாண்டியக் கட்டபொம்மன் … தமிழ் சினிமாவின் மணி முடி

மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————–
இந்தப் படத்தின் கலைஞர்களுக்கு சூடத் தகுதியான மகுடங்கள் எங்கேயும் இல்லை .

katta 6

பின் குறிப்பு :-

தமிழ் திரையுலக வசனகர்த்தாக்களின் தலை மகனான சக்தி கிருஷ்ண சாமியின் புதல்வர் பத்திரிக்கையாளர் காட்சிக்கு வந்திருந்தார் . அவரிடம் நான் “கட்டபொம்மன் , அவன் தம்பி ஊமைத்துரைக்கும் இருவருக்கும் நேரடி வாரிசுகள் இருந்ததாகப் பதிவேதும் இருப்பதாகத் தெரியவில்லையே . அப்படி இருக்க மீனா என்ற குழந்தைக் கதாபாத்திரம் எப்படி வந்தது ?” என்று கேட்டேன் .

அதற்கு அவர் ” கட்டபொம்மனுக்கு நேரடி வாரிசுகள் இல்லை . ஆனால் ஊமைத்துரைக்கு இருந்தது  என்றும் இல்லை என்றும் குழப்பமான தகவல்களே இருந்தன . என்ன செய்வது என்று யோசித்தார் அப்பா. ஒரு வாரிசுக் கதாபாத்திரம் முழுக்க முழுக்க கற்பனையாகவாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் பந்துலு விரும்பினார்.

ஆனால் அது ஆண் கதாபாத்திரமாக இருக்க வேண்டாம் என்று என் அப்பா நினைத்தார் . பெண் கதாபாத்திரம் வைக்கலாம் என்று முடிவானது .

katta 14

எனது தங்கை மைனாவதி மீது அப்பாவுக்கு ரொம்பப் பாசம் . மைனாவதி பெரிய வாயாடி. எனவே மைனாவதியின் பிரதிபலிப்பாக மீனா என்ற பெண் கதாபாத்திரத்தை அமைத்து வரலாற்றுக்கு கொஞ்சம் நெருக்கமாக அதை ஊமைத்துரையின் வாரிசாக வைத்து , பெரியப்பா மீது பாசம் கொண்ட பாத்திரமாக கதையின் நெகிழ்ச்சிக்கு சேர்த்துக் கொண்டார்கள் ” என்றார் , சக்தி கிருஷ்ணசாமியின் புதல்வர் .

வணங்குகிறோம் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Comments are closed.