பி வி பி நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜுனா – கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காத நிலையில் ஸ்ருதி அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி ஹீரோவின் ‘புதிய’ படத்திற்கு சென்றுவிட்டார் என்று ஒரு வதந்தி பரப்பப்படுகிறது .
ஆனால் அது உண்மையில்லை என்கிறார் , சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடித்து வரும் ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் .
“பி வி பி நிறுவனம் படத்தில் நடிக்காத சுருதிஹாசன் அதற்கு பதிலாக எந்த புதிய படத்திலும் ஒப்பந்தமாகி நடிக்கவில்லை . அப்படி பேசுவது முற்றிலும் தவறு .
தற்போது ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய்யுடன் ‘புலி’ படத்திலும், இந்தியில் அக்ஷய்குமாருடன் ‘கப்பர்’ படத்திலும், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘ஸ்ரீமந்துரு’ படத்திலும் என மூன்று மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். இந்த மூன்றுமே அவர் பி வி பி படத்துக்கு என்று ஆரம்பத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்னரே ஒத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் தொடர்ச்சிதான்.
இதில் எதுவுமே அவர் இப்போது புதிதாக ஒத்துக் கொண்ட படங்கள் அல்ல . பண ஆசையில் அவர் அப்படி புதிய படங்களைத் தேடி ஓடவும் இல்லை . அதற்காக அவர் பி வி பி நிறுவனப் படத்தில் இருந்து விலகவும் இல்லை.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் சுருதி ‘புலி’ படத்தை பொருத்தமட்டில் சொன்ன தேதியில் கரெக்டாக படப்பிடிப்புக்கு வருவதோடு , அர்ப்பணிப்புணர்வோடு நடிப்பதை ஒட்டுமொத்த யூனிட்டே பாராட்டி வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் வாரிசு என்ற கர்வம் துளி கூட இல்லாமல், அவர் எளிமையோடு நடந்து கொள்வது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஏப்ரல்-1 முதல் ஏப்ரல்-15ம் தேதி வரை சுருதி எங்கள் புலி படத்தில்தான் நடிக்கவுள்ளார்.புலி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தலைமையில் 150 க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு மாதம் பணிபுரிந்து, தலக்கோணத்தில் காடும் – ஏரியும் சங்கமிக்கும் இடத்தில் இந்திய திரையுலகில் இதுவரை எந்தப் படத்திலும் பார்க்காத வகையில் ஒரு கிராமத்தை உருவாக்கி வருகிறார்கள்.
மேலே சொன்ன தேதியில் புலி படத்தின் படப்பிடிப்பில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை என்றால், மே மாதம் தலக் கோணத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என்பதால் படப்பிடிப்பை முடிக்காமல் மொத்த செட்டையும் பிரிக்க வேண்டியது வரும். காத்திருந்து பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
இதனால் எங்களுக்கு பெரும் இழப்பும் நஷ்டமும் ஏற்படும் என்று எங்கள் கஷ்டத்தை ஸ்ருதியிடம் தெரிவித்தோம். அதை புரிந்துகொண்டு இறுதிக் கட்டத்துக்கு வந்து விட்ட ஒரு படம் தன்னால் நின்றுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் புலி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
அவர் கண்டிப்பாக வேறு புதிய படத்தில் நடிக்க செல்லவில்லை . தயாரிப்பாளர்களாகிய எங்களது கஷ்டங்களை மனதில் கொண்டு பல தேதிகளை எங்களுக்காக விட்டு தந்த ஸ்ருதிஹாசனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”
– என்று விளக்கமளிக்கிறார்கள், புலி பட தயாரிப்பாளர்களான சிபு தமீன்ஸ், பி.டி.செல்வகுமார் இருவரும் .
வதந்தி வக்கணையாளர்கள் புரிந்து கொண்டால் சரி