ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியதோடு , உத்தம புத்திரன், படகோட்டி, களத்தூர் கண்ணம்மா போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களையும் இயக்கியவர் டி. பிரகாஷ் ராவ் .
டி எல் வி பிரசாத்தும் தெலுங்கிலும் இந்தியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் .
இப்போது வைக்கிங் மீடியா ஆண்டு எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி என்பவர் தயாரிக்க, சச்சின், ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில்,
டி. பிரகாஷ் ராவின் பேரனும் டி எல் வி பிரசாத்தின் மகனுமான டி.சத்யா என்பவர் எழுதி இயக்கும் படம் யார் இவன்.
வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது இந்தப் படம் .
வெண்ணிலா கபடிக் குழு உட்பட மூன்று படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த இந்த டி.சத்யா , தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கும் படம் யார் இவன் ?
தமிழில் இது இவருக்கு முதல் படம்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் சிறு முன்னோட்டங்களை திரையிட்டனர் . கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை தனி அறையில் கை விலங்கு போட்டு வைத்து ,
காவல் துறை விசாரணை அதிகாரி கிஷோர் விசாரணை செய்வது போல அமைந்த முன்னோட்டத்தில் கொலை , ஆக்ஷன் , காதல் எல்லாம் வருகிறது
“படத்தின் கதை மிக வித்தியாசமாக இன்டரஸ்டிங் ஆக இருந்தது . நாயகன் மிக்கப் பெரிய பிசினஸ்மேன் .
அவர் இந்தப் படத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டு ஈடுபாடோடு நடித்தது ஆச்சர்யமாக் இருந்தது ” என்றார் நடிகர் சதீஷ்.
“நான் கஷ்டப்பட்டு நடித்தது ஆச்சர்யமாக இருந்தது என்றார் சதீஷ். நான் எட்டு வயதிலேயே நடிக்க ஆரம்பித்தவன் .
எனது பணம் , வசதி , மற்ற தொழில்கள் எல்லாம் என் அப்பா எனக்குத் தந்தது . ஆனால் சினிமாதான் நான் விரும்பி ஈடுபடும் என் சொந்தத் தொழில் ” என்றார் நாயகன் சச்சின்
படம் பற்றிக் கூறும் இயக்குனர் சத்யா ” இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் படம் .
கபடி விளையாட்டின் பின்னணியில் படத்தை உருவாக்கி இருக்கிறோம் . ஹீரோ ஒரு கபடி வீரன் . கபடியை ரசிக்கும் கோடீஸ்வரப் பெண் ஒருத்தி அவனை நேசித்து ,மணந்து கொள்கிறார் .
ஒரு நிலையில் அந்தப் பெண் கொல்லப் படுகிறாள். கொலைப் பழி ஹீரோ மீது விழுகிறது .
ஹீரோயின் அப்பாவான கோடீஸ்வரர் குற்றவாளியை தண்டிப்பதில் தீவிரமாக இருக்கிறார் . ஹீரோ என்ன செய்தான் என்பதுதான் கதை . ஹீரோயின் அப்பாவாக பிரபு சார் நடிக்கிறார்.
வித்தியாசமான காட்சிகள் . வித்தியாசமான சூழல்கள் ரசிகர்களைக் கவரும் .” என்றார்.
கபடி என்பது பாரம்பரியம் மிக்க விளையாட்டு . ஆனால் படத்தின் முன்னோட்டத்தில் கபடியும் கிரைமும் ஒண்ணு,
– என்ற வசனம் வருதே ?” என்ற கேள்விக்கு இயக்குனரால் பொருத்தமான பதில் சொல்ல முடியவில்லை .
படம் வரட்டும். பார்ப்போம்