ராஜா என்பவர் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் , சவுந்தர் ராஜா நடிப்பில் ஆதிராஜன் இயக்கி இருக்கும் படம்.
உயர் சாதிப் பெண்ணை காதலித்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனின் கையை உயர் சாதிப் பணக்காரர் (ஆடுகளம் நரேன்) வெட்டுகிறார் . அதே ஊரில் அதே தாழ்த்தப்பட்ட சாதியில் சிறப்பான கபடி வீரராக இருந்தவரின் மகன் (ராஜா) அவன் தாயால் ( சரண்யா) கபடி விளையாட்டு சொல்லிக் கொடுக்கப்பட்டு சிறந்த கபடி வீரனாக வளர்ந்து கொண்டு இருக்கிறான் .
பட்டணத்தில் படித்து விட்டு கபடி பற்றி டாக்குமெண்டரி எடுக்க பிறந்து ஊருக்கு வரும் – அந்த பணக்காரரின் – மகளுக்கும் ( மாளாவிகா) கபடி வீரனுக்கும் காதல் . கபடி வீரனாக இருக்கும் தாய்மாமனுக்கும் (சவுந்தர் ராஜா ) அவளின் அப்பாவுக்கும் இது பிடிக்காமல் போக, அவர்கள் நாயகனைக் கொல்ல முயல நடந்தது என்ன என்பதே படம்.
பொதுவாக ரத்தத்தில் வித்தியாசம் எதுவும் இல்லை என்பதை வைத்து சாதிக் கொடுமையைச் சாடுவார்கள். இதில் அதற்குப் பதிலாக வேறொரு சமாச்சாரம் . பத்து நாள் பட்டினியில் இருந்தவனுக்கு ஊசிப் போன உப்புமாவே உன்னதமாய் ருசிக்கும் என்பது போல , தொடர்ந்து சோதிக்கும் காட்சிகளைக் கடந்து நொந்து நைந்து போன வேளையில் அட என்று பாராட்ட வைக்கிறது அந்த கிளைமாக்ஸ் .
மற்றபடி ரூம் போட்டு யோசித்தாலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை .