லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன், ஜி கே எம் தமிழ்க் குமரன் தயாரிக்க, திரிஷா நடிப்பில் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி இருக்கும் படம் .
தனது தொழிலில் தரம் குறைந்து போனதை உணர்ந்த காரணத்தால் தான் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் (திரிஷா) . தனது தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள் மூலம் அண்ணியிடம் ராங்கி மிக்கவள் என்ற பெயர் வாங்கியவர் .
அண்ணன் அண்ணியின் டீன் ஏஜ் மகளின் ஆபாச வீடியோ ஒன்று அண்ணனுக்கு வர, நிலைகுலைந்த அண்ணன் தங்கையிடம் சொல்ல , விசாரிக்கும்போது , அது முக நூல் நட்பின் தொடர்ச்சி என்பதும் , அந்த முகநூல் விவரம் அண்ணன் மகளின் போட்டோ மற்றும் பெயரோடு அவளது தோழி துவங்கியது என்பதும் ஆபாச வீடியோவில் இருப்பது அந்த தோழிதான் என்பதும் புரிகிறது .
தோழிப் பெண்ணையும் பிரச்னையில் இருந்து மீட்க , அந்தப் பெண்ணிடம் முகநூல் உள் டப்பியில் பேசிய ஆண்களை ஆராயும் போது ,ஏகாதிபத்திய நாடொன்றால் வளங்களுக்காக சுரண்டப்படும் ஒரு இஸ்லாமிய நாட்டில் தன் நாட்டைக் காக்க துப்பாக்கி தூக்கிய ஓர் இளைஞனும் உள்டப்பியில் பேசுவது தெரிகிறது .
மிக நல்ல இளைஞனான அவன் முகநூல் கணக்கில் தவறாக பதிவிடப்பட்ட , நாயகியின் அண்ணன் மகளே பேசுவதாக எண்ணி காதலிக்கவும் துவங்கி விட்டது தெரிகிறது .
இந்த நிலையில் இதை மோப்பம் பிடித்த அந்த ஏகாதிபத்திய நாட்டின் படை இந்தியாவுக்கு சென்னைக்கு வந்து இந்திய அரசின் உதவியோடு பெண் பத்திரிகையாளரைப் பிடிக்கிறது .
போராளி இளைஞனும் பத்திரிகையாளரின் அண்ணன் மகளும் சந்திக்கும் சூழலில் அதை வைத்து அவனையும் அந்தப் போராளிக் குழுவையும் வேட்டையாட முடிவு செய்து பத்திரிகையாளரையும் அவரது அண்ணன் மகளையும் அந்தப் போராளிக் குழு உள்ள நாட்டுக்கு கொண்டு சொல்கிறது . நடந்தது என்ன என்பதே ராங்கி .
முக நூல் ஆண் பெண் நட்பால் விளையும் விபரீதங்கள் பற்றி பல கதைகள் வந்த நிலையில் இப்படி ஒரு வித்தியாச விபரீதம் பற்றிய கதையை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத, அதற்குத் திரைக்கதை வசனம் எழுதி மிக அட்டகாசமாகப் படமாக்கி இருக்கிறார் சரவணன் . ராங்கி என்ற பெயருக்கும் அதற்கேற்ற திரிஷாவின் கதாபாத்திரத்துக்கும் ஏற்ப சிறப்பான ரகளையான வசனங்களும் எழுதி இருக்கிறார். சிறப்பான இயக்கம் .
கேரக்டருக்கு பொருத்தமாக உடல் தோற்றம் மற்றும் நடிப்போடு சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்து நியாயம் செய்து இருக்கிறார் திரிஷா .
சி சத்யாவின் பின்னணி இசை படத்துக்கு மாபெரும் பலம் . அவ்வளவு சிறப்பான இசை .
சக்தி வேலின் ஒளிப்பதிவு உஸ்பெக்கிஸ்தானின் வெண்மஞ்சள் நிலப் பரப்பை கட்டிடங்களை அற்புதமாக பதியம் போட்டு இருக்கிறது
மிகுந்த பொருட்செலவில் தயாரிப்புத் தரத்தோடு படத்தை உருவாக்கி உள்ளது
நம்பகத்தன்மை ஏற்படும்படி சரவணன் மிக சிறப்பாகப் படமாக்கல் கொடுத்து இருந்தாலும் யதார்த்தக் குறைவான மற்றும் சில விசயங்களை பாதியிலேயே டீலில் விட்ட திரைக்கதை படத்தை பின்னுக்கு இழுக்கிறது .
சென்சார் குதறல் வேறு படத்தின் பல சிறப்பான பகுதிகளை காவு வாங்கி இருக்கிறது . லிபியாவை சிரியாவை அமெரிக்கா காவு வாங்கிய கதையை சொல்ல வந்த படைப்பாளியின் எழுத்துக் கரத்தை உடைத்திருக்கிறது சென்சார் போர்டு
எனினும் ”உன் நாட்டில் கனிம வளங்கள் இருக்கிறதா? நீ மானமும் நாட்டுப் பற்றும் உள்ளவனா ? எனில் நாளை நீயும் தீவிரவாதி என்று அழைக்கப்பட்டு அழிக்கப்படும் வாய்ப்பு உண்டு ” என்ற படம் சொல்லும் உண்மை உலகை நோக்கிய அக்கறைக் குரலாகவே ஒலிக்கிறது .
ராங்கி… உலக சினிமா