தமிழில் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படும் இந்நாவல் முதலில் 1991ல் ‘கணையாழி’யில் தொடராக வந்து, பின்னர் 1993ல் நூல் வடிவம் பெற்று, 1985லும், 1998லும் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது
அசோக மித்திரன் எழுதிய அந்த அற்புதமான நாவலை அதே பெயரில் படமாக்குகிறார் இயக்குனர் வசந்த் . (பொதுவாக நாவலை சினிமாவாக்குவதே பெரிய விஷயம். மீறி ஆக்கினாலும் நாவலின் தலைப்பை மாற்றி வேறு பெயர் வைத்தால்தான் பலருக்குத் தூக்கமே வரும் . காரணம் இலக்கியவாதிக்கு பெயர் போய் விடக் கூடாது என்பதுதான் ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் நாவலை அதே பெயரில் படமாக்குவதற்கே இயக்குனர் வசந்துக்கு ஒரு ‘பெருந்தன்மை விருது’ கொடுக்கலாம்)
சென்னையின் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்னை பெரிதாகும் போது எல்லாம் ஏற்படும் அவலங்கள் , சிக்கல்கள், குழப்பங்கள் , திடீரென்று சில அற்பங்கள் எல்லாம் முக்கியப் பிரமுகர்கள் ஆகும் கோராமை , சாலைகள் கற்பழிக்கப்படும் கொடுமை , கழிவு நீரும் தீர்த்தமாகும் கையறு நிலை, இவற்றை புறக் களமாகக் கொண்டு அமைந்த இந்தக் கதை….
அகக் களமாக ஜமுனா என்ற பெண்ணின் வாழ்க்கையைப் பேசுகிறது . சினிமா ஆசையால் ஒரு மோசமான மனிதனிடம் சிக்கி தன்னை இழந்து, , அவன் மூலம் பலராலும் அழுக்காக்கப்பட்டு அதன் பிறகும் அவனோடு வாழும் சூழல், அதனால் ஏற்படும் இழப்புகள், பிரியும் உறவுகள், இணையும் நட்புகள் , பிரிந்தும் பிரியாமலும் தவிக்கும் உயிர்ப்புகள் .. என்று இந்த நாவல் ஒரு அதி முக்கியமான அனுபவம் .
வசந்த்தின் கைவண்ணத்தில் இந்த நாவல் இன்னும் புடம் போடப்படும் என்பதில் ஐயமே இல்லை .
இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு கிளாப் அடித்துத் துவங்கி வைத்த இந்தப் படத்தின் துவக்க விழா ஒரு திரைப்படத் துவக்க விழாவாக மட்டும் இல்லாமல், இலக்கிய விழாவாகவே இருந்தது .
காரணம் ஒன்று….மேடையில் வீற்றிருந்த அசோக மித்திரன் !
காரணம் இரண்டு … தொகுப்பாளினி என்ற பெயரில், ‘டமில்’ மட்டுமே தெரிந்த யாராவது மைக்கை பிடித்து “ஹீரோவா காஸ்ட் ஆயிருக்காங்க…. ஹீரோயினா காஸ்ட் ஆயிருக்காங்க… வில்லனா காஸ்ட் ஆயிருக்காங்க… ” என்று மூக்கைப் பொத்திக் கொள்ளச் செய்யும் கொடுமையெல்லாம் இல்லாமல்…
அற்புதமான தமிழ் மற்றும் அழகிய ஆங்கிலத்தில் ஆழச் சுனையின் சுவை நீர் போன்ற தொகுப்புரை வழங்கிய தமிழச்சி தங்க பாண்டியன்!
பொதுவாக யாருடைய போட்டோவையும் தனது அலுவலகத்தில் வைத்துக் கொள்ள விரும்பாத வசந்த் , தனது குருநாதரான இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் போட்டோவை மட்டும் தனது அலுவலகத்தில் வைக்க விரும்பி , பாலச்சந்தரை புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டதொரு ‘இறந்த’ கால சந்தர்ப்பத்தில் ….
தானே தனது சிஷ்யனுக்கு பரிசளித்த ஒரு போட்டோவின் வடிவில் விழாவுக்கு ‘வந்திருந்த’ கே.பாலச்சந்தரின் முன்னிலையில், நடன நிகழ்ச்சியோடு துவங்கிய விழாவில், அடுத்து படம் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரையும் பற்றிய படத்துண்டுகள் திரையிடப்பட்டன .
தனது சாதனைகளைப் பற்றி தமிழச்சி தங்க பாண்டியன் கூறிய சிறப்பான விளக்கங்களை எல்லாம் ,’ இதெல்லாம் வேற யாரைப் பத்தியோ ‘ என்பது போல சலனமின்றி கேட்டுக் கொண்டிருந்த அசோகமித்திரன் தனது பேச்சில்
குல்ஷன் குரோவர் பேசும்போது
” இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா மட்டுமே என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் நான் அந்த எல்லையைக் கடந்து போனேன் . ஹாலிவுட் வரை போனேன் . அதன் பிறகுதான் அமிதாப் பச்சன், ஷாருக் கான் , அனுபம் கேர் உள்ளிட்ட பலரும் போனார்கள் . இப்போது இந்தப் படத்தின் மூலம் தமிழ்ப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. மகிழ்ச்சி ” என்றார் .
“கன்னடத்தில் பதினெட்டு வயது பெண் முதல் அறுபது வயதுப் பாட்டி வரை பலவேறு தோற்றங்களில் ஒரே படத்தில் சிறப்பாக நடித்தவர் ” என்ற அறிமுகத்துக்கு பிறகு மைக் பிடித்த கதாநாயகி நாயகி சாந்தினி ஷாஷா
” ஒருவர் எத்தனை மொழியில் நடித்து இருந்தாலும் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை என்றால் அவரது கேரியர் முழுமை பெறாது என்பது என்னுடைய கருத்து. எனவே இதுவரை நான் பல படங்களில் நடித்து உள்ளேன் என்பதை எல்லாம் மறந்து விட்டு , ஒரு புது நடிகையாக என்னை இந்த தண்ணீர் படத்துக்கு கொடுக்கிறேன் ” என்று மனப்பூர்வமாக பேசினார் .
இயல்பாக பேசிய சுதா ரகுநாதன்” இதுவரை பாடகியாகவே இருந்துட்டேன் . இப்போ அடுத்த கட்டத்துக்கு போறேன் . வசந்த் சார் மேல நம்பிக்கை இருக்கு . அவரோட வழிகாட்டுதல்படி சிறப்பான இசையைக் கொடுப்பேன் ” என்றார் .
நெகிழ்வும் மகிழ்வுமாக பேசிய பாரதிராஜா
” நான் நேசிக்கும் கலைஞன் வசந்த். வசந்தோட படங்களில் ஒரு நேர்த்தி இருக்கும். பாடல் காட்சிகளை எடுப்பதில் என் மேலேயே எனக்கொரு பெருமிதம் உண்டு. அடுத்து அந்த விசயத்தில் வசந்தை பார்த்து நான் வியந்திருக்கிறேன் .குறிப்பா ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் அந்த ”பூவே…பூவே… பூவே..” பாட்டை என்ன அழகா எடுக்கப்பட்டு இருக்கும்! பொதுவாக இப்போ எல்லாம் நான் எந்த விழாவுக்கும் போவது இல்லை . பாலச்சந்தர் போயாச்சு… பாலு மகேந்திரா போயாச்சு … இனி என்ன இருக்கு ? ஆனா இந்த விழாவுக்கு வசந்த்துக்காக வந்தேன். கண்டிப்பா படம் பிரம்மாதமா வரும் . அதில் சந்தேகம் இல்லை ” என்றார் .
வசந்த் பேசும்போது
“நான் அசோகமித்திரனை காதலிக்கிறேன். அவரது படைப்புகள் அந்த அளவுக்கு என்னை ஈர்த்துள்ளன. அவரது எல்லாக் கதைகளையுமே படமாக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு . அதில் முதன்மையா எனக்குப் பட்டது இந்த தண்ணீர் நாவல்தான் ” என்றார் .
அடடா… ! ஒரு நல்ல நாவல் படமாவதுதான் எத்தனை சந்தோஷம் தருகிறது !