அஞ்சாதே, நாடோடிகள் உள்ளிட்ட படங்களுக்கும் தன் இசையால், இசை (அதாவது புகழ் ) சேர்த்தவர் இவர் . (கவனிக்க : ”ஈதலும் இசைபட வாழ்தலும் ” ….குறள் வரிகளை !)
அப்படி என்ன உதவி என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு…….. அட்டி என்ற படத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் .
E5 எண்டர்டெயின்மென்ட் இந்தியா (பி) லிமிடெட் மற்றும் இமேஜினரி மிஷன்ஸ் தயாரிக்க , அறிமுக இயக்குனர் விஜய பாஸ்கர் இயக்கி இருக்கும் படம் அட்டி .
அது என்ன அட்டி ?
அட்டி என்ற வார்த்தைக்கு சந்தேகம் என்று ஒரு பொருள் உண்டு . பேரறிஞர் அண்ணா இந்த வார்த்தையை ‘அட்டியில்லை’ என்ற வகையில் அடிக்கடி பயன்படுத்துவார் .
ஆனால் வட சென்னை மண் மொழியில் அட்டி என்ற வார்த்தைக்கு, பலர் ஒன்று கூடி உட்கார்ந்து பேசும் இடம் என்று பெயராம் .அந்த வட சென்னை சொலவடையே இங்கு இந்தப் படத்தின் பெயருக்குக் காரணம் ஆகி இருக்கிறது .
சென்னையின் மையப்பகுதிகளான காசி மேடு, ராயபுரம், ஐஸ்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும்
இளைஞர்களின் யதார்த்தமான வாழ்க்கையையும் அன்றாடம் அவரகள் சந்திக்கும் அனைத்து விஷயஙகளையும் சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் விவரிக்கும் கதைக்களமே “அட்டி”.
கதைப்படி கதாநாயகன் கானா பாடகர் மற்றும் தல அஜித் ரசிகர்.
வானவ ராயன் வல்லவராயன் உள்ளிட்ட சில படங்களின் நடித்து வரும் தொலைக்காட்சிப் புகழ் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக புதுமுகம் அஷ்மிதா நடிக்க,
இந்தப் படத்தில் ராம்கி ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார் .
இயக்குனர் சுராஜிடம் மாப்பிள்ளை , அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் இந்தப் படத்தை இயக்கும் விஜய பாஸ்கர் .
வேலையில்லாப் பட்டதாரி , சலீம் படங்களுக்கு படத்தொகுப்பு செய்த எம் வி ராஜேஷ்குமார்தான் இந்தப் படத்துக்கும் படத் தொகுப்பாளர் .
மேற்படி அட்டி படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் முன்னோட்டததையும் இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள்.
வடசென்னையைச் சேர்ந்த துடுக்கான இளைஞனின் கேரக்டரை மா கா பா ஆனந்த் மிக நன்றாக உணர்ந்து நடித்துள்ளார். மிக சுறுசுறுப்பாக ரசிக்கும்படி நடனம் ஆடி இருக்கிறார் .
கதாநாயகி அழகாக ஈர்க்கிறார் . விஜய பாஸ்கர் சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார்.
சுந்தசி பாபு ? சொல்லவா வேண்டும் ? மெட்டுகளிலும் இசையிலும் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.
( முன்னோட்டம் பார்க்க சொடுக்கவும் https://m.youtube.com/watch?v=Jb4fs1zpOXM )
திரையிடலைத் தொடர்ந்து பிரமுகர்கள் பேச ஆரம்பித்தபோதுதான் சுந்தர் சி பாபு செய்திருக்கும் மாபெரும் ஆதரவுதவி பற்றி தெரிய வந்தது.
”எத்தனையோ படங்களின் ஆடியோ லாஞ்ச விழாக்களை தொடுத்து வழங்கிய எனக்கு நான் கதானாயகனாக நடித்துள்ள படதடஹின் ஆடியோ விழாவில் பேசுவது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது ” என்று மாகாபா ஆனந்த் பேச,
அதன் பிறகு , புலி படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தன் பேச்சில் ” புலி படத்தை தயாரிக்கும்போது, எனக்கு திடீர் என ஒரு மூன்று கோடி ரூபாய் அவசரமாக தேவைப்பட்டது . என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தேன் .
அப்போது சுந்தர் சி பாபு அவர்களை சந்தித்தபோது யதார்த்தமாக விசயத்தை சொன்னேன் . அவர் மிக இயல்பாக , ‘என்னிடம் ஒரு இரண்டு கோடி ரூபாய் இருக்கிறது . தரட்டுமா? ‘ என்று கேட்டார்.
நான்கூட ஏதோ ஆறுதலுக்கு சொல்கிறார் என்று நினைத்தால் அடுத்த நாளே இரண்டு கோடி ரூபாயை எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கொடுத்தார் . அவ்வளவு சிறந்த மனிதர் அவர் ” என்று சொன்னபோது கூட , அதுகூடப் பெரிய விசயமாகப் படவில்லை .
ஆனால் சுந்தர் சி பாபு பேச ஆரம்பித்த போது …..!
” சில வருடங்களுக்கு முன்பு என் அம்மா இறந்து போனாங்க. நான் ரொம்பவும் உடைஞ்சு போயிட்டேன். எங்கம்மா உடம்பு முன்னாடி உட்கார்ந்து ‘நீ மறுபடியும் வரும் வரை நான் இசை அமைக்க மாட்டேன்’ என்று சொல்லிட்டுதான் அவங்களுக்கு இறுதிச் சடங்கு செய்தேன் .
அடுத்த ரெண்டு வருஷததில் ல் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது . அது எங்க அம்மாதான் .
மறுபடியும் இசை அமைக்க முடிவு பண்ணேன் .
நான் தீவிர முருக பக்தன் . நல்ல வாய்ப்புக்காக காத்து இருந்தேன் . அப்போ என்னை பார்க்க வந்தார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்த்திகேயன் . பெயர் பாருங்க… அதுவும் முருகன் பெயர் . கதை கேட்டேன் . பிடிச்சு இருந்தது.
நான் கார்த்திகேயன் கிட்ட ‘ எல்லாம் சரி . நான் ஏன் இந்தப் படத்தை பண்ணனும்?’னு கேட்டேன் . எனது முந்தைய படங்களின் இசை பற்றி பேசிட்டு, ‘நீங்கதான் இந்தப் படத்துக்கு இசை அமைக்கணும்’னு சொன்னார் , கார்த்திகேயன் . அதாவது முருகன்
அதை நான் முருகனின் வாக்காகவே நினைச்சு ஒத்துக்கிட்டேன் .
படம் ஆரம்பிச்சோம் . படம் நல்லா வந்தது ” என்று ….
SYNCHRONISM எனப்படும் ஒருங்கிணைவியக்கல் தத்துவப்படி , தான் வாழ்க்கை சம்பவங்கள் நடைபெறுவதைப் பற்றி அவர் பேசப் பேச நமக்கு வந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை .
(வாழ்வில் பல்வேறு கால கட்டங்களில் நடைபெறும் சம்பவங்கள், ஒருவித அர்த்தமுள்ள தொடர்போடு நடப்பதோடு அதை நம்மையே உணர வைத்து சிலிர்க்கவைக்கும் தன்மையே ஒருங்கிணைவியக்கல் தத்துவம் எனப்படும் .
ஆங்கிலத்தில் chronological arrangement of historical events and personages so as to indicate coincidence or coexistence; also : a table showing such concurrences)
தொடர்ந்து பேசிய சுந்தர் சி பாபு ” படத்துல என் பாட்டு நல்லா இருக்குன்னு அடுத்ததடுத்து படங்கள் வர ஆரம்பிச்சது . அதையெல்லாம் ஒத்துக்கிட்டு நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டு போய்ட்டா, அப்புறம் இந்தப் படத்துக்கு யார் இருப்பாங்க?
அதனால ‘இந்தப் படம் ரிலீஸ் ஆகும் வரை வேறு படத்தையும் ஒத்துக் கொள்வது இல்லை’ என்கிற முடிவுக்கு வந்தேன் .
படம் முடிஞ்சது பார்த்தேன் . இந்தப் படத்தை யாரோ வாங்கி வெளியிடப் போறாங்க . அதையே நாமே செய்யக் கூடாதுன்னு முடிவு பண்ணேன் . நானே படததின் தயாரிப்பாளர்கள்கிட்ட இருந்து வாங்கிட்டேன் . ” என்று சொல்ல , அரங்கமே கைதட்டிப் பாராட்டியது சுந்தர் சி பாபுவை .
ஆக இப்போது E5 எண்டர்டெயின்மென்ட் இந்தியா (பி) லிமிடெட் மற்றும் இமேஜினரி மிஷன்ஸ் தயாரிக்க பரிநிதா புரடக்ஷன்ஸ் வழங்கும் படமாக விரைவில் திரைக்கு வர இருக்கிறது அட்டி திரைப்படம் பரிநிதா சுந்தர் சி பாபுவின் மகள் பெயர்… இல்லை அவரது அம்மாவின் இந்த பிறவிப் பெயர் .
என்ன ஒரு கம்பீரமும் நெகிழ்வும் கலந்த நிகழ்வுகள் !
ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கிக் கொண்டு தொழில் நுட்பக் கலைஞராகப் பணியாற்றிய ஒருவர் ,
அந்தப் படத்துக்கு உதவுவதற்காக அந்தப் படத்தையே விலை கொடுத்து வாங்கி வெளியிடுவது என்பது இதுவரை தமிழ் சினிமாவில் நடக்காத நிகழ்வு
(பெரிய ஹீரோ பெரிய டைரக்டர் , மார்க்கெட்டில் உயரத்தில் உள்ள பிரமுகர்களின் படங்களை வணிக தந்திரத்தோடு, படத்தில் பணியாற்றியவரே வாங்கி வெளியிடும் நிகழ்வுகளையே இதுவரை நாம் பார்த்து இருக்கிறோம் .
ஆனால் ஒரு புது நிறுவனம் , அறிமுகக் கலைஞர்கள் சம்மந்தப்பட்ட படத்துக்கு இதை சுந்தர் சி பாபு செய்துள்ளதுதான் போற்றுதலுக்குரியது .)
இசையமைப்பாளராகப் பணியாற்றியவரே படத்தை வாங்கி இருக்கிறார் என்றால் அது நல்ல படமாகத்தான் இருக்கும் என்பதால் , இப்போது படத்துக்கும் ஒரு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது .
சபாஷ் சுந்தர் சி பாபு !
பொதுவான பெரிய மனிதர்கள் மற்றவர்களை எல்லாம் சிறிய மனிதர்களாகவே உணர வைப்பார்கள் . ஆனால் உண்மையான பெரிய மனிதர்கள்தான் தம்மை சுற்றியுள்ள எல்லோரையும் பெரிய மனிதர்கள் ஆக்குவார்கள் .
அந்த வகையில் சுந்தர் சி பாபு ஓர் உண்மையான பெரிய மனிதர் என்பதில் எந்த விதமான அட்டியும் இல்லை ( நான் அட்டி என்ற சொல்லை அறிஞர் அண்ணா பயன்படுத்திய விதத்தில் பயன்படுத்தி இருக்கிறேன் )
வாழ்த்துகள் சுந்த சி பாபு மற்றும் அட்டி படக் குழுவுக்கு !