நீளம், அகலம், உயரம், பள்ளம் , குள்ளம், குண்டு , ஒல்லி போன்ற பரிமாணத் தோற்ற மாறுபாடுகளை, கிராபிக்ஸ் உதவி இல்லாமல் சாதரணமாக படம் பிடிப்பதன் மூலமே, வெறும் கண்களால் பார்க்கும்போதே உணரவைக்கும் கலையே இல்யூஷன் எனப்படுகிற – இல்லாத ஒன்றை இருப்பது போல உணர வைக்கிற- மாயத் தோற்றக் கலை ஆகும் .
இதில் அமேஸ் இல்யூஷன் ரூம் என்பது இந்த வகையில் புகழ் பெற்ற ஒரு கலை . ஒரே கேமராவை பயன்படுத்த வேண்டும் . நீள அகல விகிதாச்சாரம் முறைப்படி இருக்க வேண்டும் என்று இதில் ஏகப்பட்ட கண்டிஷன்கள் உண்டு .இதில் பத்துக்கு எட்டு அறையில் இந்த கலையை நிகழ்த்திக் காட்டியதே உலக சாதனையாக இதுவரை இருந்து வந்துள்ளது .
ஆனால் இதை விட ஒன்றல்ல இரண்டல்ல .. ஐம்ம்மம்பது மடங்கு பெரிதாக…. நான்காயிரம் கன சதுர அடி பரப்பளவில் .. அதுவும் ஒரு நடன நிகழ்ச்சியை … அதுவும் ஒரே ஷாட்டில் நிகழ்த்திக் காட்டி .. அமேஸ் இல்யூஷன் கலையையே….. ச்சும்மா , அதிர வைத்திருக்கிறது , நடன இயக்குனர் கலா மாஸ்டரின் தலைமையிலான மானாட மயிலாட சீசன் – 10 குழு .
எஸ் பாஸ் ! உலகமே வாயைப் பிளக்கும் இந்த சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் கம்பீரமாக இடம் பிடித்துள்ளது, கலா மாஸ்டரின் தலைமையிலான மானாட மயிலாட சீசன் – 10 குழு .
பிரம்மிப்புக்குரிய பெருமையோடு தனது குழுவோடு பத்திரிகையாளர்களை சந்தித்தார் கலா.
“செய்ய முடியுமா என்ற பயம் இருந்தது. என்றாலும் தைரியமாக இறங்கினோம். கின்னஸ் ரிகார்டு குழுவினர் அவர்கள் சொல்கிற ஆட்களை வைத்து செய்யச் சொன்னார்கள் . ஆனால் நான் மானாட மயிலாட குழுவுடன்தான் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். நிகழ்ச்சிக்கு முதல் நாள் சரியாக வராமல் போய் விடுமோ என்ற பயத்தில் அழுதே விட்டேன் . ஆனால் ஆர்ட் டைரக்டர் , ஒளிப்பதிவாளர் ,மற்றும் எனது டான்ஸ் டீம் மெம்பர்கள் , நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான சஞ்சய் மற்றும் கீரத்தி ஆகியோரின் உதவியுடன் செய்தோம்
இல்யூஷன் ரூமில் நின்று சும்மா பார்த்தாலே தலை சுற்றும் . எங்கே பள்ளம் இருக்கும் எங்கே மேடு இருக்கும் என்பது மூளையைக் குழப்பும். நடப்பதே ஆபத்து . அப்படி ஒரு ரிஸ்க்கான நிகழ்ச்சியை ஒரே ஒரு கேமராவை பயன்படுத்தி ஒரே ஷாட்டில் தொடர்ந்து நாற்பது நிமிடங்கள் செய்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியும் . அதுவும் எங்கள் ரூம் நான்காயிரம் கன சதுர அடி பரப்பளவு கொண்டது. நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களில் யார் ஒருவர் ஒரு சிறு தவறு செய்தாலும் கின்னஸ் புக்கில் இடம் பெற முடியாது .
ஒரு தடவைதான் செய்ய வேண்டும் . இன்னொரு முறை செய்கிறேன் என்றால் மேற்பார்வையிட வந்திருக்கும் கின்னஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடையே செய்தோம் . வென்றோம் . கின்னஸ் குழுவே ஆடிப் போனது . கடைசியில் அவர்கள் எல்லோரும் குழநதைகள் போல மாறி அறைக்குள் ஆக்ஷன் செய்து புகைபடம் எல்லாம் எடுத்துக் கொண்டு போனார்கள்.
இதில் கலைஞர் தொலைக்காட்சியின் உதவி மகத்தானது . கின்னஸ் குழுவை வரவைப்பது உள்ளிட்ட எல்லா செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.
நீங்கள் இதை தொலைக்காட்சியில் பார்க்கும்போது வியந்து போவீர்கள். உதாரணமாக அரங்குக்குள் தொகுப்பாளர்கள் சஞ்சய், கீரத்தி நுழையும்போதே, கீரத்தி குட்டையாக இருந்து உயரமாக மாறுவார் , சஞ்சய் உயரமாக இருந்து குட்டையாக மாறுவார் . எந்த கிராபிக்சும் கேமரா ட்ரிக்கும் இல்லாமல் இது நடக்கும் . நிகழ்ச்சியை மறக்காம பாருங்க ” என்றார் கலா, பெருமிதமும் சிலிர்ப்புமாக .
கலாவின் உடன் பிறந்த சகோதரிகளும் சக நடன இயக்குனர்களுமான கிரிஜா , பிருந்தா இருவரும் நெகிழ்ச்சியோடு ” இந்த விருது எங்கள் பெற்றோருக்கும் குருவான ரகு மாஸ்டருக்கும் காணிக்கை ” என்ற போது அதை கலா ஆமோதித்தார் .
அம்புலி , ஆ, மற்றும் வெளிவர இருக்கும் ஜம்புலிங்கம் 3D ஆகிய படங்களின் ஹீரோவான கோகுல் ” நான் சினிமாவுக்கு போய் விட்டாலும் இன்னும் கலா மாஸ்டருடன் இருக்கக் காரணம் அவரது நடனக் கலை திறமைதான் . இன்னும் எவ்வளவோ அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது ” என்றார் .
இந்தக் கலையை பயன்படுத்தி யாராவது சினிமாவில் ஒரு பாடல் காட்சி அமைத்தால் வெள்ளித் திரையில் பிச்சுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
கலா அண்ட் டீம் கின்னஸ் விருது பெற்ற இந்த நடன நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக் கிழமை இரவு 7:30 மணிக்கு கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது .
பார்க்கத் தவறாதீர்கள் இந்த அற்புத அனுபவத்தை !