மரியாதையான பிரம்மிப்பை ஏற்படுத்துகிறார் நடிகர் டெல்லி கணேஷ் !
‘இவ்வளவு காலம் சினிமாவில் நீடிக்கும் ஒரு மாபெரும் சீனியர் நடிகரால், மீடியாக்கள் முன்பு இவ்வளவு யதார்த்தமாக எளிமையாக உண்மையாக தரையில் கால் பாவிப் பேச முடியுமா?’ என்ற பிரம்மிப்பான மரியாதை !
அப்படி ஒரு உரையாடல் அது .
எதற்கு அந்த சந்திப்பு ?
ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நாடகங்கள் நடத்தியவர் நடிகர் டெல்லி கணேஷ். இப்போது அதே பெயரில் ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து,
தனது மகன் மஹாவை ஹீரோவாக ஆக்கி, என்னுள் ஆயிரம் என்ற படத்தைத் தயாரித்து முடித்து விட்டார்
கதாநாயகியாக நடித்து இருக்கும் மரீனா மைக்கேல் மலையாளத்தில் சில படங்களில் நடித்து இருப்பவர் . தமிழில் இது அவருக்கு முதல் படம் .
கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கும் கிருஷ்ணகுமார் இயக்குனர் ஏ.எல் . விஜய்யின் உதவியாளர் . ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளர் அதிசயராஜ் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார்.
ஓர் இளைஞன் மற்றும் இளம்பெண்ணின் காதல் . அந்த இளைஞனுக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்படும் உடல் தொடர்பு என ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ பாணியில் பயணித்து ,
கிரைம் , சஸ்பென்ஸ் என்று படத்தின் கதை போகும் என்பது…… பாடல்கள், முன்னோட்டம், மற்றும் படத்தின் புகைப்படங்களில் இருந்து தெரிகிறது .
படத்தைப் பற்றி பத்தீர்க்கையாளர்களிடம் உட்கார்ந்து அவ்வளவு சாவகாசமாக பேசினர் டெல்லிகணேஷ் .
” முப்பத்தஞ்சு வருசமா நடிச்சுட்டு இருக்கேன் . என் மகன் மஹாவை படிக்க வச்சு பெரிய ஆளாக்க ஆசைப்பட்டேன் . என்ஜினீயரிங் படிக்க வச்சேன் . வெளிநாட்டுக்கு போய் மேல் படிப்பும் படிச்சார் .
ஒரு நாள் எனக்கு அங்க இருந்து போன் பண்ணி ‘ எனக்கு பட்டமளிப்பு விழா இருக்கு . நீங்க பாக்க அமெரிக்கா வரணும்’ னு சொன்னார் . சந்தோஷமா இருந்தது . ‘
சரிப்பா படிச்சு முடிச்சதும் அங்கேயே வேலை தேடிக்குவியா? இல்ல நம்ம ஊருல வந்து வேலை தேடிக்குவியா?’ன்னு கேட்டேன் .
அவரு படிப்புக்கு ஏத்த வேலை எங்க கிடைக்கும்னு எனக்கு எப்படித் தெரியும்? நான் என்ன இஞ்சினியரா ?
என் கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ” நான் சென்னை வந்து நடிகனா ஆகப் போறேன் ” என்பதுதான் . எனக்கு ஷாக் . மறுபடியும் பேசினேன் . அவரு ரொம்ப உறுதியா இருந்தாரு .
ஆனா பட்டமளிப்பு விழாவுக்கு நான் வரணும்னு சொன்னார் .
‘நீ நடிகன்னு முடிவு பண்ணின பிறகு அதை எதுக்கு செலவு பண்ணிக்கிட்டு நான் வந்து பாக்கணும். நீ கிளம்பி வா. நடிகனா நீ ஆகற வேலையை பார்ப்போம்’னு சொல்லி வர வைச்சேன் .
ஒரு நாள் டைரக்டர் ஏ எல் விஜய்யோட ஷூட்டிங் ஸ்பாட்ல என் பையனின் ஆசை பத்தி சும்மா பேசிக்கிட்டிருந்தேன் .
அங்க உதவி இயக்குனரா வேலை பார்த்துட்டு இருந்த கிருஷ்ணகுமார் காதுல அது விழுந்து இருக்கு .
அவர் புத்திசாலி ! நேரே என்னை வந்து பார்க்காம என் மகனை பார்த்து கதை சொல்லிட்டார் . காரணம் நான் தியேட்டருக்குப் போய் படம் பார்த்து பதினஞ்சு வருஷம் ஆச்சு .
நான் என் படத்தையே தியேட்டர்ல போய்ப் பார்த்தது இல்ல .
நான் ஒரு கதை கேட்டு சூப்பரா இருக்குன்னு என் மகன் கிட்ட சொல்வேன் . அவன் பதறிப் போய் அப்பா இதான் காதல்ன்ற பேர்ல படமா வந்துருச்சே’ன்னு சொன்னான் . இன்னொன்னு கேட்டு சொன்னேன் .
இதுவும் வந்துருச்சுப்பான்னு ஒரு படத்து பேரைச் சொன்னான் . பயந்துட்டேன் . கதை விசயத்தை அவன் கிட்டேயே விட்டுட்டேன்
அதனால அவன்கிட்ட கிருஷ்ணகுமார் சொன்ன கதையை நல்லா அலசிப் பார்த்துட்டு’ நல்லா இருக்குப்பா’ன்னு சொன்னான் . அப்புறம்தான் நானும் கேட்டேன் . எனக்கும் பிடிச்சது .
ஆரம்பிச்சுட்டேன் .
படத்தில் நடிக்கிற பலர் , ‘படம் தயாரிக்கிறது நான்’னு சொன்ன உடனே சம்பளத்தை குறைச்சுகிட்டு எனக்காக வேலை செஞ்சு கொடுத்தாங்க . அவங்களுக்கு நன்றி .
ஆரம்பத்துல ஒரு நாள் என் பையன் நடிப்பை பார்க்கப் போனேன் . நல்ல நடிச்சான் . திருப்தியா வந்துட்டேன் . அப்புறம் ரெண்டு மூணு நாள் ஷூட்டிங் ஸ்பாட் போனதோட சரி .
அதுக்கப்புறம் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கல . படம் பார்த்தேன் . நல்லா வந்துருக்கு .
படத்தை முடிச்ச அப்புறம் ரிலீஸ் பண்ண பணம் பத்தல . என்ன செய்யறதுன்னு யோசிச்சு ஒரு வீட்டை விற்க முடிவு பண்ணினேன் . வெளிய போனா நமக்கு வராது .
அதனால் என் மகளோட கணவர் கிட்டேயே விற்கப் போனேன்
அவர் பணத்தைக் கொடுத்துட்டு ‘வீட்டை எல்லாம் அப்புறமா என் பேருக்கு மாத்திக்கலாம் .முதல்ல படத்தை ரிலீஸ் பண்ணுங்க’ன்னு சொல்லிட்டார் . பணம் நான் வாங்கிட்டு வந்துட்டேன் .
ஆனா வீட்டுப் பத்திரம் என் வீட்ல என்கிட்டதான் இன்னும் இருக்கு .
இப்போ படம் நல்லா வந்திருக்கறத பார்த்த என் மாப்பிள்ளை ‘படம் நல்ல ஓடினா அடுத்த படத்துக்கும் பணம் நானே தர்றேன் போங்க’ன்னு சொல்லிட்டார் .
சொந்தக் காசில் படம் எடுத்தேன் . இப்போ நானே ரிலீஸ் பண்றேன் .
அதுக்கும் கைல காசு இருக்கு . அதனால கவலை இல்லாமல் இருக்கேன் .
நான் பணம் போட்டதோட சரி. என் மகன்தான் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு பாக்கிறான். அவன் ஆர்வமா உழைக்கிறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு .
இந்தப் படம் என் மகனை ஒரு நல்ல ஹீரோவாக்க வழி பண்ணிக் கொடுத்தா போதும் . எனக்கு பெருசா லாபம் வரணும்னு அவசியம் இல்ல .
ஆனால் படம் பிரம்மாதமா வந்திருக்கு . அதனால நல்ல ஓடவும் வாய்ப்பு இருக்கு
நான் தயாரிக்கும் முதல் படத்துலயே ஒரு ஹீரோ , ஒரு டைரக்டர், ஒரு கேமராமேனை அறிமுகப்படுத்தறேன் . அதுதான் எனக்கு ரொம்ப சந்தோசம் “
– என்று பேசி முடித்த போது , அவர் மீதான மரியாதை இன்னும் அதிகமானது
மஹா பேசும்போது “அதிக புது முகங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களால் சினிமாவுக்கு அறிமுகமானவர் என் தந்தை .
அவர் தயாரிக்கும் படத்தில் நிறைய புதுமுகங்கள் இருப்பது பொருத்தமான ஒன்றுதானே. இந்த என்னுள் ஆயிரம் படத்தை டைரக்டர் பிரம்மாதமா எடுத்து இருக்கார். எல்லாரும் நல்லா பண்ணி இருக்கோம்.
படம் நல்லா வந்திருக்கு . நிச்சயமா எல்லோரையும் கவரும் படமா வரும் ” என்கிறார் .
ஏப்ரல் 1 ஆம் தேதி வெளிவருகிறது என்னுள் ஆயிரம் .
வாழ்த்துகள் கணேஷ் சார் , மஹா தம்பி !