ஸ்டுடியோ 9 சார்பில், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தயாரிக்க ,விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் , அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில்
காசி விஸ்வநாதனின் படத் தொகுப்பில் (படத் தொடுப்பில் என்று சொல்லலாமா ?) சீனு ராமசாமி இயக்கி இருக்கும் படம் தர்மதுரை .
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலா உள்ளிட்ட பலரும் படத்தை வாழ்த்தி இருந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக் குழு .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் “சீனு ராமசாமி இந்தக் கதையை சொன்ன உடனேயே இதை எந்தக் குறைவும் இல்லாமல் படமாக்க முடிவு செய்தேன்.
படத்துக்கு தர்மதுரை என்ற பெயர் முடிவானதும் ரஜினி நடித்த தர்மதுரை படத் தயாரிப்பாளர்களிடம் முறைப்படி அனுமதி பெற்றோம் .
சீனு ராமசாமி படத்தை மிக சிறப்பாக எடுத்துக் கொடுத்துள்ளதோடு சொன்னதை விட கம்மியான நாட்களில் படத்தை முடித்துக் கொடுத்தார் .
விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் ஒரு மைல் கல் படமாக இருக்கும்” என்றார்
“ இதே விஜய் சேதுபதி , இதே சீனு ராமசாமி இதே நான் மூவரும் தென்மேற்குப் பருவக்காற்று படத்தை எடுத்த போது படப்பிடிப்பில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் .
ஆனால் நாங்கள் இந்த தர்மதுரை படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது எங்களுக்கு கிடைத்த வரவேற்பு மறக்க முடியாதது “ என்றார் .
“ காக்கா முட்டை படத்தில் எப்படி எனக்கு நல்ல பெயர் கிடைத்ததோ அப்படி இந்தப் படத்திலும் கிடைக்கும்” என்றார் .
படத் தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் பேசும்போது “ சீனு ராமசாமியின் படங்களின் கதை படிப்பது எனபது சுவையான விஷயம். இந்தப் படத்திலும் எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது .
நல்ல கதை . நல்ல முறையில் படமாக்கப்பட்டு உள்ளது . படம் நன்றாக வந்துள்ளது “ என்றார் .
சீனுராமசாமி பேசும்போது “இந்தக் கதையை சொன்ன உடனே தயாரிப்பாளர் சுரேஷ் முழு ஆர்வமாக இறங்கினார் .
விஜய் சேதுபதியைத் தவிர இன்னொருவரை இந்தக் கதாபாத்திரத்தில் யோசித்துப் பார்க்க முடியவில்லை
வழக்கமான எனது படங்களில் உள்ள வாழ்வியல் இந்தப் படத்திலும் இருக்கும் . இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி பெரிய நிலைக்குப் போவார் .” என்றார் .
விஜய் சேதுபதி பேசும்போது “ என்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி சாரின் படம் இது . அவர்தான் தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் என்னை நாயகனாக அறிமுகப்படுத்தினார் .
இந்தப் படத்தின் பெயர் தர்மதுரை . என் வாழ்வில் நான் கண்ட தர்மதுரையே சீனு ராமசாமி சார்தான்
இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் மிக சிறப்பாக தயாரித்து உள்ளார் . சீனு ராமசாமி சாரின் திறமை பற்றி நான் சொல்லத் தேவை இல்லை .
இந்தப் படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமான விஷயம் “ என்றார்
படத்தின் டிரைலர் யதார்த்தமும் அழகியலும் கலந்து ஜொலித்தது. பாடல்கள் சிறப்பாக இருந்தன.
“படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு மிக சிறப்பாக வந்துள்ளது .
ஐஸ்வர்யா ராஜேஷ் இறந்து போகும் காட்சியில் விஜய் சேதுபதியின் அழுகை நடிப்பு நாயகன் படத்தில கமலின் அழுகையை போல மிக வித்தியாசமும் சிறப்புமாக வந்துள்ளது “ என்கிறது பட யூனிட்
வாழ்த்துகள் !