Rain Of Arrows என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்து ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்க, க்ரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் வழங்க ஜெய் , அதுல்யா ரவி, அஞ்சலி நாயர் , வம்சி கிருஷ்ணா நடிப்பில் எஸ் கே வெற்றிச் செல்வன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம்.
அமெரிக்காவைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் தலைவன் ஒருவன் (சுரேஷ் சுப்ரமணியம்) இந்தியாவில் உள்ள ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவன் (வம்சி கிருஷ்ணா) மூலம் பெரும் கொள்ளைகளை நடத்துகிறான் .
அமைச்சர் ஒருவருக்கு (சுனில் ஷெட்டி) சொந்தமான நகைக் கடை ஒன்றில் உள்ள சுமார் இரு நூறு கோடி மதிப்புள்ள பத்து வைரங்களை கொளையடிக்க உருவான திட்டப்படி கொள்ளை நடக்கும் போது சமூக சேவை மனம் கொண்ட ஓர் இளம் பெண் ( அதுல்யா ரவி) — குழந்தையின் சிகிச்சைக்காக நகைகளை விற்க வந்த ஒரு பெண்ணை ( அஞ்சலி நாயர்) காப்பாற்றும் முயற்சியில் — கொல்லப்படுகிறாள் .

காதலியைக் கொன்றவர்களை பழிவாங்க காதலன் (ஜெய்) களம் இறங்குகிறான் .
லோக்கல் கொள்ளையன் கொள்ளை அடித்த வைரம் தொலைந்து போக, அதைக் கண்டு பிடிக்க அமைச்சர் களம் இறங்குகிறார். லோக்கல் கொள்ளையனை நம்பாமல் அமெரிக்க கொள்ளையன் தமிழகம் வருகிறான் .
எல்லோரும் துணிய , எண்ணிய எண்ணியாங்கு எய்தியவர் யார் என்பதே படம் .
ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது .
ஹாலிவுட் பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் தயாரிப்பாளர் கம் நடிகர் சுரேஷ் சுப்ரமணியத்தின் ஆர்வத்தையும் தயாரிப்பு மதிப்பையும் காட்டுகின்றன.

அவரும் அந்த வெள்ளைக்காரப் பெண்களும் நடித்து இருக்கும் காட்சிகள் அசத்தல் .
சிறப்பாக காட்சிகள் அமைத்து இயக்கி இருக்கிறார் வெற்றிச் செல்வன் . வசனங்கள் மிக சிறப்பு.
கொள்ளையர்கள் அணியும் மாஸ்க் மிரட்டுகிறது.
ஜெய் , அஞ்சலி நாயர் , வம்சி கிருஷ்ணா மூவரும் அசத்தி இருக்கிறார்கள்.
முருகனின் அட்டகாசமான சண்டைக் காட்சிகளில் ஜொலிக்கிறார் ஜெய் . அதுல்யா சிறப்பு.
சாம் சி எஸ் இசை, தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு, சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு மூன்றும் படத்துக்கு தரக் கூட்டல் செய்கின்றன .

நல்லவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு இணையாக ககெட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் படம் பேசுவதால் படத்தின் அடிப்படை நோக்கம் நீர்த்துப் போகிறது.
இன்னும் சிறப்பான கதை , திரைக்கதை குறைந்த பட்சம் இன்னும் நல்ல திரைக்கதை செய்து இருக்கலாம்.
மொத்தத்தில் எண்ணித் துணிக ….. பார்க்கத் துணிக !