சுரேஷ் ஜி என்பவர் தயாரித்து இயக்க, சார்லி, எம் எஸ் பாஸ்கர், ஜார்ஜ் மரியான், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், பரவை சுந்தரம்பாள் நடிப்பில் வந்திருக்கும் படம்.
வட்டிக்கு பணம் தருபவனிடம் ( எம் எஸ் பாஸ்கர்) வட்டிக்குக் கடன் வாங்கி சிரமப்படுகிற , கரும்பு வெட்டும் கூலி ஒருவர் ( சார்லி) . முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாம் மனைவியாக வரும் பெண்ணுக்கு (சூசன்) ஒரு கைக் குழந்தை . முதல் மனைவியின் பிள்ளைகளான ஒரு மகள் ( மோனிகா) ஒரு மகன் ( சக்தி ரித்விக்) இவர்களை அவளுக்குப் பிடிக்காது . குறிப்பாக வாய்ப்புக் கிடைத்தால் சிறுவனை அடித்து உதைப்பது அவளது வழக்கம் அப்பாவின் தாயார்தான் அப்பா இல்லாதபோது ஆதரவு.
ஒரு நிலையில் கரும்பு வெட்டும் வேலைக்காக அப்பாவும் சித்தியும் கிளம்பிப் போய் விட , சித்தி மகனான குழந்தையின் மோதிரத்தை இந்த சிறுவனுக்கு கொடுத்து பாட்டி போட்டுக் கொள்ளச் சொல்ல, அவன் அதை தொலைத்து விடுகிறான். அக்காவிடம் அவன் அதை சொல்ல பாட்டியிடம் கூட சொல்லாமல் மறைத்து விட்டு , அப்பா , சித்தி வருவதற்குள் அதே மாதிரி மோதிரம் வாங்க அக்காவும் தம்பியும் பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டு காசு சேர்க்கிறார்கள். பணம் போதாத நிலையில் தம்பி ஒரு வீட்டில் திருடி விடுகிறான் .
அப்படியும் அப்பா , சித்தி வருவதற்குள் போதுமான பணம் சேர்க்க முடியாமல் போக, வட்டிக்குப் பணம் கொடுத்தவன் நெருக்க, சித்தி மோதிரத்தைத் தேட, என்ன நடந்தது என்பதே படம்.
குறைவான கதாபாத்திரங்கள் , எளிய படமாக்கலில் ஒரு படம்.
எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள் . என்றாலும் மோனிகாவும் சக்தி ரித்விக்கும் படம் முழுக்க அசத்துகிறார்கள் .
சித்தி மீதான தம்பியின் பயம் , அக்கா அவனுக்கு தாயாக இருப்பது, ஏழை மக்கள் கடன் வாங்கி விட்டு பணத்துக்கு அலைவது எல்லாம் படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது .
மோதிரம் வாங்க பணம் சேர்க்க கடலை உடைப்பது, காட்டு முயல் பிடிப்பது, முயலை விற்க மனமில்லாமல் வளர்ப்பது போன்ற பகுதிகள் கவிதை. உயிர் நேயம் உங்கள் சிக்கலைத் தீர்க்கும் என்பதை உணர்த்தும் விதம் சிறப்பு .
வெள்ளந்தி நபராக சிறுவர் சிறுமியோடு விளையாடும் ஜார்ஜ் மரியன் கதாபாத்திரம் நகைச்சுவை அலை வீசுகிறது . மந்திரித்த முட்டையிடம் இருந்து கடவுளையே காப்பாற்றுவது கலகல.
வெள்ளந்தி நபர், சிறுமியிடம் போனைக் கொடுத்து உன் அம்மாவிடம் பேசு என்று சொல்கிற காட்சியின் மூலம் அவர் அதுவரை போனில் பேசியது எல்லாம் எப்படி ? யாரிடம் என்று விளக்கும் காட்சி சிறப்பு.
நல்ல படம். ஆனால் கடைசி சில நிமிடங்களில் இருக்கும் பரபரப்பும் அழுத்தமும் மற்ற நேரங்களில் இல்லை.
திரையரங்க வெளியீட்டில் வெற்றி பெறத் தேவையான அழுத்தமான கதை, போதுமான திரைக்கதை அடர்த்தி, படமாக்கல் இல்லாதது குறை.