பாலையா என்று ஆந்திர சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நூறாவது படமாக வெளியாகி,
சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய கௌதமி புத்ர சாதகர்ணி என்ற தெலுங்குப் படம், அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்திரா தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த பிரம்மாண்டமான வரலாற்றுப் படத்தின் நாயகி ஸ்ரேயா.
மற்றும் கபீர்பேடி தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.
வசனத்துடன் தமிழாக்கப் பொறுப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி.
இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்.
சுமார் ஒரு மாதம் முன்பு படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடக்க, அதில் எம் ஜி ஆர் லதா, வெண்ணிற ஆடை நிர்மலா , கே எஸ் ரவிகுமார், கலந்து கொண்டு வாழ்த்திய நிலையில் ,
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது . படத்தின் பாடல்களை கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கார்த்தி வெளியிட்டனர்.
பால கிருஷ்ணாவின் அடுத்த படத்தை இயக்கப் போகிறவர் கே எஸ் ரவிகுமார் . அதை தயாரிக்கப் போகிறவர் கல்யாண். அவரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் .
நிகழ்வுக்கு பாலகிருஷ்ணாவும் வந்திருந்தார் . சென்னையில் ஆடியோ பொறியியல் படித்த சிரந்தன் பட் என்பவர் இசையமைத்த படத்தின் டிரைலரோடு மூன்று பாடல்களும் திரையிடப்பட்டன.
பிரம்மாண்டமாக இருந்தது டிரைலர் . பால கிருஷ்ணாவுக்கு குரல் கொடுத்தவர் சிறப்பாகப் பேசி இருக்கிறார் .
பாடல்களும் இனிமை . ஸ்ரேயா மொத்த வித்தையையும் இறக்கி வைக்கிறார்
சி.கல்யான். பேசும்போது
” பாகுபலியில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும்.ஆனால், இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் நேரடியாக எடுக்கப்பட்டவை.” என்றார்
காட்ற கட்ற பிரசாத் பேசுகையில் ” கர்ணன் படத்தில் என்.டி.ஆர் வாங்கிய பெயரை விட கெளதமி புத்ர சாதகர்ணி படத்தின் மூலம் பால கிருஷ்ணா தமிழ்நாட்டில் புகழ் பெறுவார் “என்றார்
படத்திற்குத் தமிழில் வசனம் எழுதியிருக்கிற மருதபரணி, ” சிவாஜிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், எம்.ஜி.ஆருக்கு மதுரை வீரன், என்.டி.ஆருக்கு நாதேசம் போல பாலகிருஷணாவுக்கு இந்தப் படம் இருக்கும்.
அந்த அளவுக்கு வசனங்கள் சிறப்பாக வந்துள்ளது . கௌதமி புத்ர சாதகர்ணி சாதாரண அரசன் அல்ல. நாட்காட்டி, தெலுங்கு வருடப்பிறப்பு போன்றவைகளை துவங்கியவன் அவன்தான்.
இந்தியா முழுவதும் ஒரே நாணயம் அறிமுகப்படுத்தியதும் சாதகர்ணிதான் என்கிற தகவலையும் தெரிவித்தார்.
கே.எஸ்.ரவிக்குமார் தன் பேச்சில் ” தசாவதாரம் இயக்குவதற்கு எனக்கு ஒன்றரை வருடம் ஆயிற்று… ஆனால், இவ்வளவு பிரமாண்டமான படத்தை 79 நாட்களில் இயக்கியிருக்கிறார் கிரிஷ்.
படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் பெயருக்கு முன்னாலும் அவர்களின் தாயாரின் பெயரைப் போட்டு அறிமுகப்படுத்தியதும் சிறப்பான ஒன்று.
எல்லாவகையிலும் என் டி ராமராவின் மறுபதிப்பாக இருக்கிறார் பால கிருஷ்ணா ” என்றார்.
கார்த்தி தன் பேச்சில் “எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் கொண்டாடும் முன்னாடியே என்.டி.ஆரையும் நாகேஸ்வரராவையும் கொண்டாடிய ஊர் இது.
நிச்சயம் இந்தப் படத்தைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.. தேடினாலும் கிடைக்காத நமது வரலாற்றைகாதல், வீரம் என்று படமாகக் கொடுத்திருக்கிறார் கிரிஷ்.
எனக்கெல்லாம் இப்போதே நடனம் ஆடும் காட்சி என்றால் காய்ச்சல் வந்து விடும் . ஆனால் பாலகிருஷ்ணா பிரம்மாதமாக ஆடுகிறார் . இந்த வயதிலும் பாலகிருஷ்ணாவின் எனர்ஜி வியக்க வைக்கிறது . ” என்றார்
தமிழில் பேசிய பால கிருஷ்ணா “நான் சென்னையில் இந்த விழாவில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சி. ஏன்னா நானும் உங்களில் ஒருத்தன்தான். நான் சென்னையில் பிறந்தவன்; சென்னையில் வளர்ந்தவன்.
தமிழ் நாட்டு தண்ணிய குடிச்சி வளர்ந்தவன். என்னோட நூறாவது படத்திற்கு நிறைய கதைகளை கேட்டேன். புது மாதிரியாக ஏதாவது செய்யணும்னு நினைச்சுட்டு இருந்தேன். எதுவும் சரியா வரலே.
அப்போ டைரக்டர் கிருஷ் இந்த கதையைச் சொன்னார் உடனே ஒகே சொன்னேன். இது நம்மளை ஆண்ட நம்முடைய ஒரு மன்னனின் கதை.
இந்த கதையை கேட்டவுடனே , பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி, எங்கப்பா என்.டி.ஆர் இவங்களை நினைச்சுக்கிட்டேன். இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது.
இந்த படத்தில் நடித்தது என்னோட பெத்தவங்க ஆசியும் பெரியவங்க ஆசியும்தான். இது இல்லாம சாதகர்ணியோட அம்மா கவுதமியோட ஆசிர்வாதமும் சாதகர்ணியின் ஆசியும்தான்.
அம்மாவை பெருமைப்படுத்துங்கள். நிச்சயம் நல்லா இருப்போம்.. அடுத்ததா நான் கே.எஸ் ரவிகுமார் படத்திலே நடிக்கிறேன்..சூட்டிங் கூட இங்க தான் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்குது.
நானும் உங்களில் ஒருத்தன் தான்.. இந்த படத்தை குடும்பத்தோட போய் பாருங்க. தாயை பெருமைப்படுத்திய இந்த படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார் .
அருமை !