
அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர் சி தயாரிக்க,
இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசை அமைத்து கதாநாயகனாக நடித்து இயக்க,
கதாநாயகியாக அறிமுகம் ஆத்மிகா, மற்றும் விவேக், இவர்களுடன் பல புது முகங்கள் நடிக்கும் படம் மீசையை முறுக்கு.
வழக்கம் போல தனது படங்களின் ஆடியோ வெளியீட்டை எந்த வி ஐ பியும் இல்லாமல் பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே நடத்தும் சுந்தர் சி இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் அப்படியே நடத்தினார்.
நிகழ்வில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .
இசை ஆர்வம் உள்ள கல்லூரி மாணவன் ஒருவன் கல்லூரி சார்பில் பல கல்லூரிகளில் போட்டிகளில்க லந்து கொள்வது , பிரச்னைகளை சந்திப்பது,
தமிழ்ப் பாடல்களைப் பாடுவோரைக் கேவலமான நினைக்கும் மாணவர்களை எதிர்கொள்வது, அதோடு காதல் மோதல் எல்லாம் கலந்த படமாக இது அமைகிறது என்பது முன்னோட்டத்தில் புரிகிறது .
பாடல்கள் இனிமையாக இருந்தன . நன்றாக படமாக்கப்பட்டு இருந்தன . உற்சாகமான பல புதுமுகங்கள் தென்படுகின்றன . ஆதி உற்சாகமாக ஆடிப் பாடுகிறார் .
நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி , ” ஆதியின் ‘கிளப்புல மப்புல சுத்துற பொம்பள’ பாடலைக் கேட்டபோது ஏதோ ஒரு பணக்கார வீட்டுப் பையன் ,
பொழுது போகாம , இந்த பாட்டை பண்ணி இருக்கார் . அது ஹிட் ஆச்சுன்னு நினைச்சேன் . ஆனா அடுத்ததடுத்த பாடல்களில் அவர் ஆர்வம் புரிஞ்சது .
ஆம்பள படத்தில் ஒரு வெரைட்டியாக ஒவ்வொரு இசை அமைப்பாளருக்கும் ஒரு பாடல் தரலாம்னு முடிவு பண்ணி ஆதியைக் கூப்பிட்டு பேசினேன் .
அவர் என்னை அவர் ஸ்டுடியோவுக்கு அழைச்சுட்டுப் போய் அவர் பண்ணின பாடல்களைப் போட்டுக் காட்டினார் . எல்லாமே நல்லா இருந்தது .
நான் திருப்தியானதைப் பார்த்துட்டு , ‘எல்லா பாடலும் கொடுத்தா பண்றேன் . ஒரு பாடல் பண்ண விருப்பம் இல்லை’ என்றார்.
அப்படியே பழகி என் கூடப் பிறக்காத தம்பியா மாறிட்டார்.
சரி அவருக்கு ஒரு படம் பண்ணுவோம்னு முடிவு பண்ணேன் . அப்புறம் அவரே கதை சொன்னார் . வசனம் எழுதினர் .
டைரக்டரா யாரைப் போடலாம்னு யோசிச்ச போது நானே பண்றேன்னு சொன்னார் . ஹீரோவாகவும் ஆனார். எனக்கு எல்லாமும் சரி என்றே பட்டது .
நடிக்கப் போன நடிகர் விவேக் ரெண்டு நாள் கழிச்சு எனக்கு போன் பண்ணி ” இவங்க கிட்ட கதை எல்லாம் கரெக்டா கேட்டீங்களா ? என்னமோ பண்றாங்க. இது சரி வருமா?” என்றார் .
நான் அவரிடம் ” நல்லா பண்ணுவாங்க . நீங்க பயப்படத் தேவை இல்லை” என்றேன் . போகப் போக அவர் ரொம்ப இன்வால்வ் ஆகி நடிச்சுக் கொடுத்ததோடு இவங்களோட ரொம்ப குளோஸ் ஆகிட்டார் .
இப்போ பாடல்களை , டிரைலரை எல்லாம் பாக்கும்போது ரொம்ப திருப்தியா இருக்கு . ஆதி முகம் ஸ்கிரீன்ல ரொம்ப ஈர்ப்பா இருக்கு . நான் நடிகர்களை நடிக்க வைக்கும்போது ,
சிலர்கிட்ட சொல்லுவேன் , ‘ உங்க தலைக்குப் பின்னால ஒரு ஒளிவட்டம் தெரியுது’ ன்னு .அது மாதிரி இந்தப் படத்துல ஆதி இருக்கார். இந்தப் படத்துக்குப் பின்னாடி அவர் பெரிய நடிகர் ஆகிடுவார் .
படம் நம்பிக்கையா இருக்கு ” என்றார் .
ஆதி தன் பேச்சில் ” என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்த சுந்தர் அண்ணனுக்கு நன்றி. இந்தப் படத்தின் பெரும்பாலான நடிகர்களை இன்டர்நெட்டில்தான் பிடித்தேன் .
எல்லோரும் புது முகங்கள் . அதுக்கு சுந்தர் அண்ணன் என்னை நம்பி சம்மதம் சொன்னார் .
விவேக் சார், ஒளிப்பதிவாளர் யூ கே செந்தில் குமார், சண்டைப் பயிற்சியாளர் தளபதி தினேஷ், கலை இயக்குனர் குருராஜ் இப்படி சில சீனியர்களை மட்டும் உடன் வைத்துக் கொண்டேன் .
அவர்கள் எல்லோரும் கவுரவம் பார்க்காமல் எங்களோடு ஒத்துழைத்ததற்கு நன்றி . விவேக் சார் டப்பிங் பேசி முடித்ததும் கட்டிப் பிடித்துப் பாராட்டினார்
நான் தனி இசைப் பாடல் மூலம் அறிமுகம் ஆனபோது , அதற்கு இங்கே வரவேற்பு இல்லை என்று வருத்தப்பட்டேன் . இன்றும் நிலமை அதுதான் . ஆனால் நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன் .
எனவே இனி ஒவ்வொரு படத்திலும் அப்படி தனி இசைப் பாடல் மூலம் கவனம் கவரும் படைப்பாளிகளை அடுத்தடுத்த படங்களில் அவர்களுக்கு வாய்ப்புத் தருவேன் ” என்றார் .