ஐ என்ற ஒரேழுத்து சொல்லுக்கு தலைவன் , அரசன் , இறைவன் , உயர்ந்தவன், என்று தமிழில் பல பொருட்கள் உண்டு . இந்த படத்தில் வரும் ஐ க்கு தலைவன் உயர்ந்தவன் என்ற தமிழ் மொழியியல் அர்த்தங்களோடு ஐ (இன்ஃபுளூயன்சா) வைரஸ் என்ற ஆங்கில அறிவியல் அர்த்தமும் இருக்கிறது .
அதே தான் …இதுதான் கதை என்று இதுவரை எழுதப்பட்ட அதே கதைதான் ‘ஐ’ படத்தின் கதை .
வடசென்னை வாழ் ஆணழகனான லிங்கேசனுக்கு (விக்ரம்), பிரபல மாடல் அழகியான தியா (எமி ஜாக்சன்) என்றால் அவ்வளவு பிடிக்கும் . தியா நடித்த விளம்பரப் படங்களைப் பார்த்து சிலிர்ப்பதே லிங்கேசனின் மையல் வாழ்க்கை.
மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொள்ளும்போது , தகுதி அடிப்படையில் அல்லாமல் சுயநலமாக இல்லாமல் தான் ஜெயிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிற ஒரு நபரின் பகையை லிங்கேசன் சம்பாதிக்கிறான் . ஆனாலும் தகுதியினாலும் நேர்மையாகவும் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வெல்கிறான். .
அதே நேரம் தனது நண்பன் (சந்தானம்) மூலம் தியாவை ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் சந்திக்க நேர்கிறது அவனுக்கு . தியாவுடன் வழமையாக நடிக்கும் பிரபல விளம்பரப் பட நடிகன் தியாவை இச்சைக்கு வறுபுறுத்த, அவள் மறுக்க , தனது செல்வாக்கால் தியாவை யாரும் புதுப் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யமுடியாதபடி செய்கிறான் அந்த விளம்பரப் பட நடிகன் .
அவனுக்கு போட்டியாக தனக்கு ஜோடியாக லிங்கேசனை உருவாக்குகிறாள் தியா . எனவே அந்த விளம்பரப் பட நடிகன் லிங்கேசனுக்கு எதிரியாகிறான்.
லிங்கேசன் நடிக்கும் விளம்பரப் படங்களுக்கு ஸ்டைலிஸ்ட் ஆக வரும் ஒரு திருநங்கை லிங்கேசனை காதலிக்கிறாள் . அதை லிங்கேசன் மறுக்க, அந்த திருநங்கையும் லிங்கேசனுக்கு எதிரியாகிறாள்.
லிங்கேசன் – தியா ஜோடிக்கு அதிக விளம்பரப் படங்களைத் தரும் ஒரு தொழில் அதிபர் (நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமார்) தயாரிக்கும் ஒரு குளிர்பானத்தில் நச்சுத் தன்மை இருப்பதால் அந்தப் படத்தின் விளம்பரப் படத்தில் நடிக்க மறுக்கும் லிங்கேசன் , அதற்கான காரணத்தை ஓர் எதிர்பாராத சூழலில் மீடியாவிடமும் சொல்லிவிட அதனால் அந்தக் குளிர்பானம் வியாபாரம் பாதிக்கப்பட , அந்த தொழில் அதிபரும் லிங்கேசனுக்கு எதிரியாகிறார்.
லிங்கேசனை தியா காதலித்து அந்தக் காதல் நிச்சயதார்த்தம்வரை போகிறது . அதனாலும் ஒரு எதிர்ப்பு உருவாகிறது .
இப்படி பல அயோக்கிய நாய்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து லிங்கேசனுக்கு மரணத்தை விடவும் ஒரு பெரிய தண்டனையை வைரஸ் கிருமி மூலம் கொடுத்து அவனை கூன் வீழ்ந்த முதியவனாக சிதைத்துப் போட,
பதிலுக்கு அவன் என்ன மாதிரியான தண்டனையை அவர்களுக்கு கொடுத்தான் …. தியா லிங்கேசன் காதலுக்கு என்ன ஆச்சு என்பதே ஐ .
படத்தின் இமயமாக ஷங்கர் இருக்கிறார் என்றால் அதனினும் உயர்ந்த சிகரமாக தனது நடிப்பால் பிரம்மிக்க வைத்து சிலிர்க்க வைக்கிறார் நண்பன் கென்னி என்கிற விக்ரம். .
ஆம் மக்களே !
ஷங்கரின் படங்களில் கமல் இருந்தாலும் ரஜினி இருந்தாலும் அது முதலில் ஷங்கரின் படமாகவே இருக்கும் . ஆனால் இந்த ஐ முதலில் விக்ரம் படம் அப்புறம்தான் ஷங்கர் படம் . அந்த அளவுக்கு இந்த படத்துக்காக நடிப்பு , ஆக்ஷ்ன காட்சிகள் , உடலை வருத்திக் கொள்வது என்ற பல வகையிலும் உயிரைக் கொடுப்பதற்கும் மேலாக உழைத்து இருக்கிறார் விக்ரம்.
வழக்கம் போல மேக்கிங்கில் விழிகளை விரிய வைத்து அசத்துகிறார ஷங்கர் . மெர்சல் ஆயிட்டேன் பாட்டை அவர் கிராபிக்ஸ் கலக்கலில் படம் ஆக்கி இருக்கும் விதம் அட்டகாசம் . சீனாவின் ‘பூ’ பூமி லொக்கேஷன் கண்ணுக்குள் இளநீர் ஊற்றுகிறது.
கில்லட்டின், ஃபேர் அண்ட் லவ்லி, ஆசியன் பெயின்ட்ஸ் , போன்ற பொருட்களுக்கு இந்தப் படத்தில் வரும் காட்சிகளுக்காக ஷங்கர் எடுத்து இருக்கும் விளம்பரங்கள் , நிஜத்தில் அந்தப் பொருட்களுக்காக நிகழ்வில் இருக்கும் விளம்பரங்களை விட சூப்பர் . (விளம்பரப் பட டைரக்டர்கள் உங்களுக்கு எதிரியாகிடப் போறாங்க ஷங்கர் சார் .)
கொஞ்சம் சைவ வசனங்கள், கொஞ்சம் அசைவ வசனங்கள் கலந்து எப்படியோ முதல் பகுதியில் வாய் விட்டு சிரிக்க வைக்கும் சந்தானம், இரண்டாம் பகுதியில் செண்டிமெண்ட் நண்பனாகவும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.
அதுவும் சுபா மற்றும் ஷங்கரின் கைவண்ணத்தில் சந்தானம் பேசும் அந்த ‘மெத்தட் ஆக்டிங்’ வசனம் வெரி வெரி இன்டல்லக்சுவல்.
ராம்குமார் பேசும் “சைடு வாக்கெடுத்து சாப்டா பேசினதும் அவனை சரத்பாபுன்னு நினைச்சிட்டியா?” என்ற வசனமும் ரசிக்க வைக்கிறது .
எமி ஜாக்சனை கூடையில் வைத்து விக்ரம் கடத்திப் போகும்போது கூடையில் என்ன என்ற கேள்விக்கு அவர் சொல்லும் “ஆப்பிள்” என்ற பதில் … பொருள் பொதிந்த, ஷங்கர் டச் !
கவர்ச்சி விருந்து படைக்கும் எமி ஜாக்சன், போட்டி போட்டுக் கொண்டு மெட்ராஸ் பாஷை பேசும் காட்சியில் நடிப்பிலும் ஜொலிக்கிறார்.
நியூசிலாந்து நாட்டின் WETA வொர்க்ஷாப் குழுவின் ஸ்பெஷல் மேக்கப்பும் கிராபிக்ஸ் காட்சிகளும் … பாராட்ட வார்த்தைகள் இல்லை .
ஒளிப்பதிவு பொதுவில் அருமை என்றாலும் பி சி ஸ்ரீராம் ஸ்பெஷல் என்று எதுவும் இல்லை. அதே போல ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் இசை மற்றும் பின்னணி இசையும் பெரிதாக அசத்தவில்லை .
நன்றாகவே இருந்தாலும் கூட , ஜிம்மில் நடக்கும் சண்டையும் சீனாவில் நடக்கும் சைக்கிள் சண்டையும் நீளம் அதிகமாக இருக்கிறது . காரணம் அதில் சுவாரஸ்யம் கம்மி என்பதுதான் .
அந்நியன் படத்தில் இதை விட நீளமான அந்த கராத்தே சண்டையை வாயில் ஈ போவது தெரியாமல் நாம் பார்த்தோம் . ஏனெனில் அது அவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது அல்லவா?
சில பல வில்லன்களை ஒரு ஹீரோ பழிவாங்கும்போது அந்த வில்லன்கள் செய்த கொடுமை என்ன என்பது முன்பே ரசிகனுக்கு பதைபதைக்கும்படி சொல்லப்பட்டு இருந்தால்தான், ஹீரோ பழிவாங்கும்போது அது ரசிகனை கவரும் . (உதாரணம் அபூர்வ சகோதரர்கள் )
ஆனால் இந்தப் படத்தில் முதல் மூன்று பழிவாங்கல் முறைகள் நன்றாக இருந்தாலும் அவர்கள் எந்த வகையில் வில்லன்கள் என்பது முழுமையாக சொல்லப்படாததால் உறைப்பு ஏறவில்லை .
அதே நேரம் பழிவாங்குவதற்கான காரணம் முழுக்க தெரிந்த பிறகு வரும் இரண்டு பழிவாங்கல் முறைகள் வெகு சாதாரணம். படத்தின் திரைக்கதை அமைப்பின்படி வேறு வழி இல்லை என்றாலும் அது ஒரு குறைதான் .
பாதிக்கப்பட்ட விளம்பரப் பட நடிகனை சந்தானம் பார்த்துப பேசும் காட்சியில் நிஜமானதொரு உடல் பாதிக்கப்பட்டவரை உட்காரவைத்து அவரை கிண்டல் செய்து சந்தானம் பேசுவது மனதை உறுத்துகிறது . அதற்குப் பதிலாக யாரவது ஒருவருக்கும் மேக்கப் போட்டு உட்காரவைத்து அந்த கிண்டல் காட்சியை எடுத்து இருக்கலாம் .
மொத்தத்தில் ஐ.. விக்ரம் – ஐ வியக்கிறோம் . ஷங்கர் – ஐ பாராட்டுகிறோம்.
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————————-
விக்ரம் , ஷங்கர், WETA WORKSHOP , சுபா