எஸ் ஏ வி பிக்சர்ஸ் சார்பில் த. சக்திவேல் தயாரிக்க, கிரண், அர்பிதா , நடிகர் கிஷோர், தர்ஷன் , ஆகியோர் நடிக்க, திம்மப்பள்ளி சந்திரா என்பவர் இயக்கி இருக்கும் படம் கைபேசி காதல்.
கைபேசி காதல் என்றதும் கைபேசி எப்படி எல்லாம் காதலை வளர்க்கிறது என்பதை சொல்லும் படம் என்றுதான் தோன்றும் . ஆனால் உண்மையில் கைபேசி மீது ஒரு இளைஞனுக்கு வரும் காதல்தான் இந்தப் படமாம் .
அதற்கேற்ப படத்தில் நாயகன் கை பேசிக்கு வகிட்டுப் பொட்டு வைத்து தாலி கட்டுகிறார் . மழை பெய்யும் போது கைபேசிக்கு மட்டும் குடை பிடித்துக் கொண்டு அவர் நனைகிறார். கைபேசி முன்னால் தோப்புக்கரணம் போடுகிறார் . அதற்கு வியர்க்கும் என்று விசிறி விடுகிறார்.
பாடத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அபிராமி ராமநாதன், எஸ் பி முத்துராமன், வி.சி.குகநாதன் , இயக்குனர் பேரரசு ஜாகுவார் தங்கம் என்று பல பிரபலங்கள் .
படத்தின் முன்னோட்டத்திலும் பாடல் காட்சிகளிலும் கவர்ச்சியும் இருந்தது . கைபேசி மீது ஹீரோவுக்கு இருக்கும் கவர்ச்சியும் காட்டப்பட்டது . பாடல்களில் வரிகள் தெளிவாக கேட்கும் அளவுக்கு இசை அமைத்து இருந்தார் புது இசை அமைப்பாளர் விஜய் முருகன் .
மைக்கை பிடித்து இயக்குனர் திம்மப்பள்ளி சந்திரா (ஆம்பள தாங்க !) பேச ஆரம்பித்தபோதுதான் அந்த உண்மை வெளிப்பட்டது . அவர் ஒரு கன்னடக்காரர் . அவரால் தமிழ் பேசவே முடியவில்லை. . ஆனாலும் இஷ்டம் என்ற வார்த்தைக்கு கஷ்டம் என்ற வார்த்தையை எல்லாம் போட்டு முயன்று தமிழ் பேசினார் சந்திரா .
“இன்னிக்கு எது இல்லாமலும் இருக்க முடியும் . ஆனா செல்போன் இல்லாம இருக்க முடியாதுன்னு ஆகிப் போச்சு. ஒருத்தர்கிட்ட இருந்து ரெண்டு மணி நேரம் செல்போனைப் பிடுங்கி வச்சுட்டா அவனுக்கு பைத்தியமே பிடிச்சுடும். அதனால ஒரு இளைஞன் செல்போனைக் காதலித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன் . . அப்படி செல்போனை காதலிக்க ஆரம்பித்த பிறகு அவன் வாழ்க்கையில் ஏற்படும் விபரீத மாற்றங்கள்தான் இந்தப் படம் ” என்றார் சந்திரா .
அடுத்து பேசிய ஹீரோ கிரண் , ஹீரோயின் அர்பிதா, இரண்டாவது ஹீரோ தர்ஷன் , இசையமைப்பாளர் விஜய் முருகன் அனைவருமே கன்னடர்கள் . அவர்களும் ‘எனக்கு தமிழ் தெரியாது’ என்று கூறிவிட்டே பேச ஆரம்பிக்க , அரங்கம் கலகலத்தது .
“படத்துல நாந்தான் ஹீரோயின்னு சொன்னாங்க . ஆனா படத்துல ஹீரோவுக்கு ஜோடி செல்போன்தான். டைரக்டர் என் கிட்ட பொய் சொல்லி ஏமாத்திட்டாரு ” என்று செல்லமாகக் கலாய்த்தார் அர்பிதா .
கர்நாடகத்தில் காவிரி நீரை மறித்து கர்நாடக அரசு அநியாயமாக அணை கட்டுவதை எதிர்த்து தமிழக விவசாயிகள் பந்த் நடத்திய நாளில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா !
விளைவாக, பாடல் வெளியீட்டு விழாவில் மேகதாது விவகாரம் பெரிதாக எதிரொலித்தது.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அருணகிரி ” காதலுக்கு இந்தப் படத்தில் செல் போன் தூது போகும் என்று நினைத்தேன் . முன்பெல்லாம் காதலுக்கு தோழி தூது போவாள். தோழி இல்லாத காதலர்கள் அன்னத்தை தூது விடுவார் . அன்னம் தூது, மேக தூது .. என்று பல தூது போன நம் மண்ணில்தான் இன்று கர்நாடகம் கட்ட துவங்கும் மேகதாதுவால் பிரச்னை ” என்று முதல் மணியை அடித்தார் .
அடுத்துப் பேசிய ஜாகுவார் தங்கம் ” வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்கிறோம் . அது இதோ இன்று வரை உண்மையாகிக் கொண்டு இருக்கிறது . இங்கே கன்னடக் கலைஞர்கள் உருவாக்கிய படத்துக்கு ஆதரவு தந்து கொண்டு இருக்கிறோம் . ஆனால் கர்நாடகம் அநியாயமாக அணை கட்ட முயல்கிறது. எனவே இந்தப் படம் சம்மந்தப்பட்ட கன்னடக் கலைஞர்கள் தங்கள் ஊருக்கு போய் எங்கள் தமிழர்களின் பெருந்தன்மையை எடுத்து சொல்ல வேண்டும்.” என்றார் .
பழம்பெரும் கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் இயக்கும் படத்தை தயாரிக்க விரும்பிய தயாரிப்பாளர் ஏ வி மெய்யப்பன் , அதற்காக கதை சொல்லி ஒகே வாங்கும் சவாலை கொடுத்து , தன்னை பெங்களூர் அனுப்பி வைத்த கதையை சுவையாக சொன்ன வி .சி. குகநாதன்,
தொடர்ந்து ” அவர் ஒரு மாபெரும் இயக்குனர் . நாங்கள் அவரை உயர்வாக மதிக்கிறோம். திறமையும் உழைப்பும் உள்ள யாரையும் தமிழர்கள் புறக்கணிப்பதில்லை . எத்தனையோ கன்னடர்களை வாழவைக்கும் பூமியாக தமிழகம் உள்ளது . இந்த படம் சம்மந்தப்பட்ட கன்னடக் கலைஞர்கள் அதை உணர்ந்து எங்களைப் பற்றி சொல்லி நட்புறவோடு வாழ கற்றுக் கொடுக்க வேண்டும் ” என்றார் .
புட்டண்ணா கனகல் பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட எஸ் பி முத்துராமனும்” இந்த நிகழ்ச்சிக்காக , படத்தின் பத்திரிகை தொடர்பாளர் பெரு.துளசி . பழனிவேல் என்னை வந்து அழைத்த போது நான் அவரிடம் ‘மேகதாது விசயத்துக்காக பந்த் நடக்கும்போது இப்படி கன்னடக் கலைஞர்கள் சம்மந்தப்பட்ட படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வைக்கிறீங்களே . பிரச்னை இல்லாம நடக்குமா ?’என்று கேட்டேன் . ‘கண்டிப்பாக நடக்கும்’ என்றார் பெரு.துளசி பழனி வேல்.
நம்மவர்களும் பெருந்தன்மையாக இங்கே அந்தக் கலைஞர்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம் . இங்கே பேசிய ஜாகுவார் தங்கமும் வி சி குகநாதனும் வீராவேசமாக பேசினார்கள் . நான் மிதவாதி . மேகதாதுவில் கர்நாடகம் ஆணை கட்டுவது தப்பு . அதை இந்தப் படம் சம்மந்தப்பட்ட கன்னடக் கலைஞர்கள் அங்கே சொல்ல வேண்டும் ” என்றார் .
முத்தாய்ப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனிதா ” இங்கே நாம் இந்த கன்னடக் கலைஞர்களை வாழ்த்துகிறோம் என்றால் அது நமது பெருந்தன்மை. வெளியே மேகதாதுவுக்கு போராடுகிறோம் என்றால் அது நமது உரிமையை மீட்கும் வீரம் ” என்றார் .
அபிராமி ராமநாதனும் படத்தையும் படம் சம்மந்தப்பட்ட கலைஞர்களையும் வாழ்த்திப் பேசினார் .