சரத்குமார் , ராதிகா சரத்குமார் , லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் தனுஷின் உண்டர்பார் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்க , தனுஷ் – காஜல் அகர்வால் இணை நடிப்பில் காதலில் சொதப்புவது எப்படி? மற்றும் வாயை மூடிப் பேசவும் ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கி இருக்கும் படம் மாரி . மும்மாரி பெய்யாவிட்டாலும் ஒரு மாரியாவது ரசனை மழை பெய்கிறதா மாரி ? பார்க்கலாம் .
புறா வளர்ப்பு, புறா பந்தயம் இவற்றை காலகாலமாக ஒரு ஒழுங்குடன் முறைப்படி நேர்மையாக செய்வதை கவுரவமாகவும் வழக்கமாகவும் கொண்ட — அதே நேரம் சட்டவிரோத தொழில்கள் செய்கிற ரவுடிகள் ஆளுமை காட்டும் ஓர் ஏரியா . . மூத்த ரவுடிக்கு (சண்முகராஜன்) கட்டுப்பட்டு நடக்கும் இரண்டு ரவுடிகள் மாரி (தனுஷ்) பேட் ரவி (மைம் கோபி )
அப்பாவி வியாபாரிகளிடம் மாமூல் பிடுங்கி காசு சம்பாதிக்கும் அளவு மாரி கெட்டவன் எனிலும் அதிலும் ஓர் ஒழுங்கு கொண்டவன். பேட் ரவி என்ன வேண்டுமானாலும் செய்பவன் . புறா பந்தயம் நடத்தும் கவுரவத்தை ஒழுங்கான செயல்பாடுகள் காரணமாக தொடர்ந்து மாரியிடமே கொடுக்கிறான் மூத்த ரவுடி . இதில் பேட் ரவிக்கு காண்டு .
மாரியின் அல்லக் கைகள் இருவர் (ரோபோஷங்கர் , வினோத்)
மாரி மீது ஒரு நபரைக் கொலை செய்ய முயன்ற ஒரு வழக்கு இருப்பதாக பேச்சு. அந்த கொலை முயற்சி பில்டப்பிலேயே ஏரியாவை ஆட்டிப் படைப்பவன் மாரி . புதிதாக ஏரியாவுக்கு வரும் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் (பாடகர் விஜய் யேசுதாஸ்) அந்தக் கொலைக் கேசை நிரூபித்து மாரியை வளைக்கக் காத்திருக்கிறார் .. கொலை முயற்சி பற்றிப் பேசுபவரகளை நூல் பிடித்தது போல விசாரித்தும் பலன் இல்லை .
ஏரியாவுக்கு புதிதாக குடிவரும் பேஷன் டிசைனர் பெண்ணை (காஜல் அகர்வால் ) சீண்டுகிறான் மாரி. அவனுக்கும் அவளுக்கும் முட்டிக் கொள்கிறது . அவளை பேட் ரவி பெரும் சிரமத்துக்கு ஆளாக்க , மாரி அவளுக்கு சப்போர்ட் செய்ய , பிரச்னையில் தப்பிக்கும் அவள் மாரியை விரும்புகிறாள் .
ஒரு நிலையில் பேச்சு வழக்கில் தான் செய்த கொலை முயற்சியை மாரி அவளிடம் சொல்ல ,அடுத்த நாள் இன்ஸ்பெக்டர் மாரியை கைது செய்கிறார் . அவர் கையில், மாரி தான் செய்த கொலை முயற்சி பற்றி அந்தப் பெண்ணிடம் சொன்னதன் வீடியோ பதிவு . அதை பதிவு செய்து கொடுத்ததும் அவளே.
;;நம்ம கிட்டயே புதிய பறவை படம் ஓட்டிட்டாங்களே” என்று கமென்ட் அடித்து விட்டு ஜெயிலுக்கு போகிறான் மாரி .
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் .
கெட்டவனை நல்லவனாக்க ஒரே வழி, அவனை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அவனை விட கெட்டவன் ஆக்குவதுதான் என்ற சைக்காலஜிப்படி அமைந்த திரைக்கதை .
நடை உடை பாவனை, கெட்டப் , அலட்டலான கதாபாத்திரத்தை அசால்ட்டாக செய்திருக்கும் பக்குவ நடிப்பு , வழக்கம் போல அட்டகாசமான நடனம் (குறிப்பாக கார் மீது ஏறி ஆடிக் கொண்டே அடுத்தடுத்து கார்களில் தாவி ஒரே ஷாட்டில் ஆடுவது ) , சீறிச் சினந்து போடும் சண்டை என்று அசத்துகிறார் தனுஷ் . பொருத்தமான இடங்களில் மாமனாரின் உடல் மொழிகளை பயன்படுத்திக் கொள்கிறார்.
லோ கிளாஸ் வார்த்தை என்ற குறை ஒரு பக்கம் இருந்தாலும் செஞ்சிருவோம் என்று சொல்லும்போது எல்லாம் அவர் காட்டும் ஸ்டைல் நைஸ் . என்னதான் கேரக்டர் நியாயம் சொன்னாலும் புகைப் பழக்கத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்க வேண்டாம் தனுஷ். டூ பேட் !
காஜல் அகர்வால் வழக்கமான மசாலா தமிழ்ப் படக் கதாநாயகி .
ஆரம்பத்தில் ஓரிரு காட்சிகள் தவிர, நகைச்சுவை என்ற பெயரில் படம் முழுக்க, எரிச்சல் மூட்டுகிறார் ரோபோ ஷங்கர் . ஒரு காட்சியில் இயக்குனர் பாலாஜி மோகன் நடித்து இருக்க , சம்மந்தமே இல்லாமல் “மெதுவா அடிங்கப்பா. அவர்தான் படத்தின் டைரக்டர்” என்று எல்லாம் ரோபோ ஷங்கர் டப்பிங்கில் பேசிப் போட்டு நிரப்பி இருப்பது, சினிமாவை கேலிக்கூத்தாக்கும் விஷயம்.
எல்லா விதத்திலும் அடக்கி வாசிப்பது நல்லது ரோபோ ஷங்கர் !
அவரை ஒப்பிடும்போது
அடிதாங்கியாக நடித்து இருக்கும் வினோத் மிக இயல்பாக நடித்து கவர்கிறார் . வாழ்த்துக்கள் நண்பா !
சில இடங்களில் வசன காமெடி ஒர்க் அவுட் ஆகிறது . கேரக்டரைசேஷனுக்கு பொருத்தமான அந்த — மாரி ஆட்டோ ஓட்டும் எபிசோட் – செம கல கல. கமர்ஷியல் பில்டப் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் ஆயிரம் முறை பார்த்து சலித்த காட்சிகள் அலுப்பூட்டுகின்றன .
அனிருத்தின் பாடல்கள் பின்னணி இசை இரண்டும் சுமார் ரகமே. சாக்கு மூட்டைக்குள் கடத்தப்பட்டு வந்து சிரிக்க வைத்து ஆடும் ஆட்டம் அளவுக்கு, பாட்டு இல்லையே .
புறா வளர்ப்பு , புறா பந்தயம் அது தொடர்பான காட்சிகள் அருமை . பேசாமல் இன்னும் கொஞ்சம் ரிசர்ச் செய்து முழுக்க முழுக்க அதை வைத்தே பரபரவென அட்டகாசமாக ஒரு படம் பண்ணி இருக்கலாம் . (இன்னும் ஆறு மாசம் கேப் விட்டு யார் வேண்டுமானாலும் கூட அதை செய்தால் ஜெயிக்கலாம் போல !)
ஆனால் ரவுடி , மார்க்கெட் மாமூல் , செம்மரக் கடத்தல், பெரிய மற்றும் துணை ரவுடிகள் என்று புளித்த மாவை டன் கணக்கில் கொட்டிக் கலந்து சேர்த்து விட்டார்கள் .
ஒருவன் நான் கெட்டவன்தான் என்று கித்தாப்பாக படத்தின் கடைசிவரை சொல்லிக் கொள்வதை இப்படி எல்லாம் நியாயப்படுத்துவது அநியாயம் . அது தொடர்பாக காஜல் அகர்வால் பேசும் சில வசனங்கள் உச்சகட்ட பேத்தல் .
படம் முடிந்து வரும்போது தனுஷ் மட்டும் ஞாபகத்தில் தங்குகிறார் .
மாரி.. தூறல் !