ஆனால் படத்தயாரிப்பு என்பது அசாதாரண விசயம் என்று கருதும் சாதாரண மக்கள் நூற்றுக் கணக்கானவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் முதற்கொண்டு சிறு சிறு தொகையாகக் கூட பெற்று ஒன்று சேர்த்து, அவர்களையும் பங்குதாரர்கள் ஆக்கி படம் தயாரிக்க பணம் திரட்டும் முறையான கிரவுட் ஃ பண்டிங் (கூட்ட முதலீடு ) முறையில், கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட லூசியா திரைப்படம் எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் எடுத்து முடிக்கப்பட்டதோடு, நல்ல பெயரையும் வாங்கியதால் அதைப் பின்பற்றி பல முயற்சிகள் உருவாகின்றன .
அந்த வகையில் தமிழ் நாட்டில் குறையொன்றும் இல்லை போன்ற படங்கள் எடுக்கப் பட்டாலும் அந்த முறையை கிரவுட் ஃபண்டிங் என்பதில் இருந்து மூவி ஃபண்டிங் என்று இன்னும் சிறப்பான பெயரைத் தந்து , கேள்விக்குறி படத்தை இயக்கிய ஜெயலானியும் சினேகாவின் காதலர்கள் படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் முத்து ராமலிங்கமும் அடுத்து இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டது பழைய செய்தி .
அதோடு தாங்கள் இயக்கும் படங்களை மட்டும் இன்றி, நல்ல கதைகள் படமாக வேண்டும் என்ற எண்ணத்தில் திரைக்கதைப் போட்டி ஒன்று நடத்தி, ஐந்து முழு நீள படத்துக்கான திரைகதைகளையும் ஐந்து குறும்படங்களுக்கான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்தும் வைத்து விட்டுதான், மூவி ஃபண்டிங் வேலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் இறங்கினார்கள் .
இந்தியா மட்டும் அல்லாது சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் அதற்கான முதலீட்டாளர்கள் கிடைத்து இரண்டு படங்களுக்கான பணம் தயாராகிவிட்ட நிலையில் அந்த வெற்றியை அறிவிக்க பத்திரிக்கையாளர்களை சந்த்தித்தார்கள்.
சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் கரு பழனியப்பனும் மீரா கதிரவனும்!
முறையே முத்து ராமலிங்கமும் ஜெயலானியும் இயக்கும் இரண்டு படங்கள் மட்டுமல்லாது இரண்டு குறும்படங்களையும் இவர்கள் தயாரிக்கிறார்கள் . அவற்றில் ஆர்ட்டிக்கிள் 36 என்ற படத்தை இவர்களே தயாரிக்க , முன்னரே கொடுத்த வாக்குப்படி இயக்குனர் மீரா கதிரவன் நிழல் எதுவோ நிஜம் எதுவோ என்ற படத்தை தயாரிக்கிறார் .
இந்த மூவி ஃபண்டிங்கில் முதலீட்டாளர்களாகவும் நடிப்பு மற்றும் தொழில் நுட்பப் பணிகளில் பங்கெடுப்பவர்களாகவும் இணைந்த பலர் தங்கள் ஆர்வத்தையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தினார்கள் .
அதன் பிறகு
இயக்குனர் மீரா கதிரவன் ” எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு நான் மணிரத்னம் சாரின் மெட்ராஸ் டாக்கீஸ் சீனிவாசனிடம் ஒரு கதை கொடுத்து இருந்தேன் . அது அவர்களுக்கு பிடித்து இருந்தாலும் எனது படமாக்கும் திறமை பற்றி அறிந்து கொள்ள ஒரு குறும்படம் எடுத்து வரச் சொன்னார்கள். அதற்கு தேவையான பணத்தை ஆயிரம் இரண்டாயிரமாக பல நண்பர்களிடம் இருந்து பெற்றுதான் அதை எடுத்தேன் . அது கூட கிரவுட் ஃபண்டிங்தான் ” என்றார்.
சினேகாவின் காதலர்கள் படத்தை தயாரித்த — தமிழன் டி வி உரிமையாளர் கலைக்கோட்டுதயம் ” அந்தப் படத்தை தயாரித்தபோது எல்லாவற்றையும் பணம் கொடுத்து வெளியே இருந்து வாங்க வேண்டி இருந்தது. இப்போது என்னிடம் கேமரா, எடிட் சூட், டப்பிங் ஸ்டுடியோ எல்லாம் இருக்கிறது . இனி செலவைக் குறைத்து படம் எடுப்பேன் . கேமரா வசதி செய்து கொடுப்பதன் மூலம் நானும் இந்த மூவி ஃபண்டிங் திட்டத்தில் முதலீட்டாளராக இணைகிறேன் ” என்று, தனது அனுபவங்களையும் சேர்த்துச் சொன்னார்.
கிரவுட் ஃபண்டிங் திட்டத்தின் வரலாற்றை தோண்டி எடுத்து துடைத்துக் கொடுத்த கரு பழனியப்பன்
“1920 களில் மகாகவி சுப்பிரமணிய பாரதி, தான் எழுதிய ஒரு புத்தகத்தை பதிப்பிக்கக காசு இல்லாத நிலையில், தன் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் இந்த புத்தகம் எந்த அளவுக்கு விற்கும் . இதனால் நமக்கு எந்த அளவு லாபலம் கிடைக்கும் . அதை விட சமுதாயத்துக்கும் என்னென்ன பலன் உண்டு என்பதைக் குறிப்பிட்டு “வரும் லாபத்தில் உங்களுக்கும் குறிப்பிட்ட சதவீதம் பங்கு தருகிறேன் . எனவே இந்தப் புத்தகம் பதிப்பிக்க எனக்கு பணம் அனுப்புங்கள் ‘ என்று அந்தக் கடிதத்தில் கேட்கிறான்.
அதே போல பணம் தந்த எல்லோருக்கும் புரோ நோட்டு எழுதிக் கொடுத்ததோடு , காலணா அரையணா வட்டி மட்டுமே கொடுக்கப்பட்ட காலத்தில் இரண்டு ரூபாய் வட்டி தரவும் சம்மதிக்கிறான் . அது பற்றி பேசும்போது ”நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் . நிதி குறைந்தவர் காசுகள் தாரீர். இரண்டும் இல்லார் வார்த்தை அருள்வீர்” என்கிறான் .
எனவே லூசியா எல்லாம் இப்போ . உண்மையில் கிரவுட் ஃபண்டிங் திட்டத்தை ஆரம்பித்து வைத்தவன் பாரதிதான். பாரதி செய்த எல்லா விஷயங்களும் அவன் காலத்துக்கு பிறகு வெற்றிகரமாக நடந்தது . எனவே அவன் ஆரம்பித்து வைத்த இந்த கிரவுட் ஃபண்டிங் திட்டமும் வெற்றி பெறும். சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேல் நான் அறிந்த முத்து ராமலிங்கம் அதை சிறப்பாக செய்வார் என்று வார்த்தை அருள்கிறேன் ” என்று வாழ்த்தினார்
ஜெய்லானி ” எங்கள் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி நல்ல படங்களை தயாரிப்பதும்தான் எங்கள் நோக்கம் . எனவே அப்படிப்பட்ட படைப்பாளிகள் எங்களை தங்கள் திரைக்கதையோடு அணுகினால் — அவர்களின் கதை நாங்கள் வைத்திருக்கும் தேர்வுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டால் –அவர்களது படங்களையும் தயாரிப்போம் ” என்றார்.
வாழ்த்துகள் !