ZEE ஸ்டுடியோஸ், போனி கபூரின் BAY VIEW புராஜக்ட்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உதயந்தி ஸ்டாலின் , தான்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன் , ஷிவானி ராஜ சேகர் நடிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கி இருக்கும் படம்.
இந்தியில் வந்த ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் மறு உருவாக்கம் . இந்திய அரசியல் சட்டம் ஆர்ட்டிக்கிள் 15படி மதம், இனம் , நிலம் இவற்றின் அடிப்படையில் யாரையும் தரக் குறைவாக – தீண்டத் தகாதவராக நினைக்கக் கூடாது .
பொள்ளாச்சிப் பகுதிக்கு பணி மாறுதல் பெற்றுப் போகும் ஓர் உதவிக் காவல் ஆணையாளர் (உதயநிதி ஸ்டாலின்) , அங்கு காவல் நிலையத்தில் இருக்கும் பிராமணிய ஆதிக்கமும் சமூகத்தில் இருக்கும் ஆதிக்க சாதி உணர்வும், எப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கிறது என்று பார்த்துப் பதை பதைக்கும் நிலை ஏற்படுகிறது .
நியாயமாக முப்பது ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப் பட்ட இரு தாழ்த்தப்பட்ட பிரிவு சிறுமிகள் , எங்கே இருக்கிறாள் என்பதே தெரியாத ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமி இவர்களுக்கு அந்த காவல் ஆணையாளரால் நியாயம் பெற்றுத்தர முடிந்ததா என்பதே படம். சாதி வேறுபாடு பாராத இயல்பான காவல் அதிகாரி பாத்திரத்தில் மிக இயல்பாக அழகாக, மற்ற கதாபாத்திரங்களின் திரைப் பங்களிப்புக்கும் இடம் கொடுத்து நடித்து இருக்கிறார் உதயநிதி . அருமை .
ஆர்ட்டிக்கிள் 15 படைத்தை விட மேம்பட்ட விதத்தில் படத்தைக் கொடுத்து இருக்கிறார் அருண் ராஜா காமராஜ் . “நீங்க என்ன ஆளுங்க ?” என்ற மூன்று வார்த்தைகளால் இங்கே நடக்கும் அக்கிரமங்களை தோலுரிக்கிறார் . பிராமணியம் முதல் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதிகள் வரை எல்லா பிரிவிலும் நிகழும் சாதி ஆணவத்தை, எல்லோரும் தங்களுக்குக் கீழ் ஒரு சாதி இருப்பதை விரும்புவதை தோலுரித்துக் காட்டி இருக்கும் கருத்தாண்மை அருமை . தாழ்த்தப்பட்ட புரட்சி இளைஞராக ஜொலிக்கிறார் ஆரி. சாதி வெறி பிடித்த பிராமண போலீஸ் அதிகாரியாக சுரேஷ் நடிப்பு அருமை . இளவரசு சிறப்பு. ஷிவானி பொருத்தம். தான்யா சரிதான்யா.
வசனம் நன்றாக இருக்கிறது . ஆனால் சாதிய ஆணவங்களுக்கு எதிராக சீற வேண்டிய வசனங்கள் சற்றே சிடுசிடுத்து விட்டு மட்டும் அமைதி கொள்கிறது .
திபு நினன் தாமஸ் பின்னணி இசையும் செவக்காட்டு பாடலும் அருமை. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நம்மை களத்தில் இறக்கி விடுகிறது . பாராட்டுகள் . ரூபனின் படத் தொகுப்பு படத்தின் அழுத்தம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது .
வெகு ஜன மக்களை ஈர்க்கும் அளவுக்கு பரபரப்பும் உணர்ச்சிப் பிரவாகமும் இல்லா விட்டாலும் படைப்பியல் ரீதியாக நல்ல படம்