லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவ லக்ஷ்மி, ரெடின் கிங்ஸ்லி , மனோபாலா, மதுமிதா நடிப்பில் ஆதிராஜன் இயக்கி இருக்கும் படம்.
பள்ளி நாட்களில் காதலைச் சொன்ன நிலையில் , திடீரென்று அமெரிக்கா போய்விட்ட காதலியை, அவளைப் பற்றி மேல் விவரங்கள் தெரியாத நிலையிலும் தொடர்ந்து காதலித்தபடி அவளுக்காகக் காத்திருக்கிறான் ஓர் இசைக் கலைஞன் ( பிரஜன்) .
அதனால் அவனது முறைப்பெண் ( மனிஷா யாதவ்) அவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற விரக்தியில் தற்கொலைக்கு முயல்கிறாள் .
”அமெரிக்கக் காதலி வர வாய்ப்பில்லை. வந்தாலும் இந்நேரம் அவளுக்கு திருமணம் ஆகி இருக்கும்” என்று நண்பர்கள் வற்புறுத்திக் கூற , அத்தை மகளை மணக்கிறான் .
கல்யாணத்துக்குப் பிறகும் காதலி நினைப்பில் மனைவியை எடுத்தெறிந்து பேச, அவள் மன நலம் பாதிக்கப்பட்டு மன நல மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறாள் .
ஒரு நிலையில் ‘ காதலி’ வருகிறாள் , கல்யாணம் ஆகாத பெண்ணாக !
அப்புறம் நடந்தது என்ன என்பதே படம் .
படம் முழுக்க அட்டகாசமான பாடலிசை மற்றும் பின்னணி இசை கொடுத்து இருக்கிறார் இசைஞானி இளையராஜா . இனிமை
அதே போல ராஜா பட்டாசார்யாவின் ஒளிப்பதிவு அழகு.
ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை ஆங்காங்கே பட்டாசு வெடிக்கிறது
பள்ளிக் காதல், அது தொடர்பான காட்சிகள் நடிக நடிகையர் பயன்படுத்தப்பட்ட விதம் யாவும் அருமை அருமை . எல்லாம் முதல் பாதி வரைதான் .
ஒரு படத்துக்குக் கூட செய்வினை பில்லி சூனியம் வைக்க முடியுமோ என்னவோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு குப்புறக் கவிழ்ந்து சுக்கு நூறாக உடைகிறது இரண்டாம் பகுதி .
அமெரிக்கக் காதலி வருகிறாள் என்று சொல்லப் பட , ஒரு பெண்மணி வருகிறார் . வருவது கதாநாயகியின் அம்மா போல. ஏதோ சுவையான டுவிஸ்ட் இருக்கிறது போல என்று எண்ணினால் … அந்தக் காதலியே அவர்தான் சார் … ! தலை சுற்றி விடுகிறது நமக்கு.
அட்லீஸ்ட்..அந்தக் காதலி அமெரிக்காவில் தசைச் சுருக்க நோய் அல்லது சீக்கிரம் வயதாகும் நோயால் பாதிக்கப்பட்டு விட்டார் என்று ஒரு வசனமாவது டப்பிங்கில் போட்டு இருக்கலாம் .
அது மட்டுமல்ல அதற்குப் பிறகும் காற்றில் கத்தி வீசும் கதையாக ஏகப்பட்ட திடீர் திடீர் திருப்பங்கள் . புளிப்பு மிட்டாய் இல்லாமல் பார்ப்பது கடினம்.
காதல் கதைக்கு லாஜிக்தான் ஆக்சிஜன் . குறைந்த பட்சம் மூக்கைப் பொத்திக் கொண்டு சுவாசிக்க, ஒரு நாற்றம் பிடித்த காற்று அளவுக்காவது லாஜிக் வேண்டும் . ஆனால் இங்கே வீசுவது எல்லாம் விஷ வாயு என்னும் அளவுக்கு இரண்டாம் பகுதியில் அர்த்தம், லாஜிக் எதுவும் இல்லாத காட்சிகள், திருப்பங்கள், வசனங்கள், நடிப்புகள்….
விட்டு விடுதலையானது போல இருக்கிறது வெளியே வரும்போது !
மொத்தத்தில் நினைவெல்லாம் தீயடா .

