சிறு வயதில் அம்மாவை பிரசவத்துக்கும் அப்பாவை காட்டுப் புலிக்கும் பறி கொடுத்த பாலகன் புலி முருகன்.
வளர்ந்து பெரியவனாகி (மோகன்லால்) மைனாவை (கமாலினி முகர்ஜி) கல்யாணம் செய்து செல்வி என்ற ஒரு மகளுக்கு தகப்பன் ஆன பிறகும் கூட,
காட்டுப் பகுதியில் மக்களை அடித்துக் கொல்லும் புலிகளை வெறி கொண்டு வேட்டையாடுவதில் வல்லவன் அவன் . காரணம் தன் அப்பா போல எந்த மனிதனும் புலியால் சாகக் கூடாது என்பதுதான்
பொம்பள பொறுக்கி காட்டிலாகா அதிகாரி (கிஷோர்) மைனாவுக்கு குறி வைக்க, அதனால் அவனுக்கும் புலி முருகனுக்கும் ஜென்மப் பகை .
கேன்சருக்கு மருந்து தயாரிக்க கஞ்சா வேண்டும் என்று சொல்லி காட்டுக்குள் நுழையும் சிலர் , கம்பெனியில் புலி முருகனின் தம்பிக்கும் வேலை தருவதாக சொல்ல,
அவர்களுக்கு உதவவும் . வன இலாகா அதிகாரியின் கொலை வெறியில் இருந்து தப்பவும் , தன் லாரியில் கஞ்சா ஏற்றிக் கொண்டு புலியூரில் இருந்து போகிறான் முருகன்.
கம்பெனி ஓனருக்கும் (ஜெகபதி பாபு) புலி முருகனுக்கும் பகை பெரிதாகிறது . இந்த நேரத்தில் புலியூரில் புலி கடித்து பலர் சாக, ஊரைக் காக்க புலி முருகன் புலியூருக்கு போக ,
முருகனை கொல்ல ஒரு பக்கம் வன அதிகாரியும் இன்னொரு பக்கம் விதம் விதமான உலகளாவிய சண்டை வீரர்களோடு போதை கடத்தல் கம்பெனி முதலாளியும் காட்டுக்குள் இறங்க ,
கையில் ஆயுதமாக வைத்திருக்கும் வேல் மற்றும் கத்திச் சவுக்கு போன்ற ஆயுதங்களின் உதவியோடு புலி முருகனும் எதிர்கொள்ள,
மலையாள திரையுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 150 கோடி ரூபாய் வசூல் செய்த புலி முருகன் என்ற மலையாளப் படத்தின் மொழி மாற்றமே இந்தப் படம் .
படம் கேரளாவில் அந்த அளவு ஓடக் காரணம் , நாற்பது வயசுக்கு மேற்பட்ட மலையாளிகள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்துக் குவித்தார்கள்.
கையில் வேலோடும் முருகன் என்ற பெயரோடும் மோகன்லாலைப் பார்த்ததும் சிலிர்த்துப் போனார்கள் அந்த நாற்பது வயசுக்கு மேற்பட்ட மலையாளிகள் .
சிறுவயது புலி முருகனின் பிளாஷ்பேக் அருமை . அதுவும் அப்பாவைக் கொன்ற புலியை சிறுவன் புலி முருகன் கொல்லும் காட்சி அபாரம்.
மலையாள சினிமா கண்டிராத மாபெரும் வசூல் சாதனை செய்யக் கூட அவர்களுக்கு ஒரு தமிழனின் கதையும் தமிழ் அடையாளங்களும் தேவைப் படுகிறது .
ஆனால் இதே படத்தில் சந்தன வீரப்பனை ஒரு கோமாளி போலக் காட்டி தமிழர்களுக்கு எதிரான தங்கள் அரிப்பை சொறிந்து கொள்ளும் ,
இன்டலக்சுவல் அரகன்சும் படத்தில் இருக்கிறது . பின்னே மலையாளிகளா கொக்கா ?