புலிப் பார்வை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தமிழினத்துக்கு எதிரான அந்தப் படத்தின் சில சித்தரிப்புகளை கண்டித்து எதிர்ப்புக் குரல் கொடுத்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம், பொது வெளியில் பெரும் மனத் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கருத்து ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு பலம் சேர்க்கும் புலிப் பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களை தடை செய்ய வேண்டும் என்று, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
வேல்முருகனின் மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் தலைமையில் கூடிய 64 தமிழ் அமைப்புகள் இந்தப் படங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடையும் என்று கூறி உள்ளன .
இந்த நிலையில் அவசர அவசரமாக படத்தின் தயாரிப்பாளர் மதன் , இயக்குனர் பிரவீன் காந்த் . தயாரிப்பு செயலர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா , மற்றும் பாலச்சந்திரனாக நடித்த சிறுவன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
சந்திப்பு நடந்த விஷயம் எல்லா பத்திரிக்கையாளர்களுக்கும் முறையாக தெரிவிக்கப்படவில்லை.
முதலில் மைக் பிடித்த இயக்குனர் பிரவீன் காந்த் ”பாலாவுக்கு விடுதலைப் புலிகள் சீருடையை அணிவித்த விஷயம் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. ‘என்ன செலவானாலும் பரவாயில்லை. அந்த உடையை எல்லாம் மாற்றி விடுங்கள் ‘என்று பாரி வேந்தர் கூறி விட்டார் .
எனவே மாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்றார் .
(முந்தைய நமது, ‘மாணவர்களைத் தாக்கிய புலிப் பார்வை படக் குழு’ என்ற தலைப்பிட்ட செய்திக் கட்டுரையில்
“பாலச்சந்திரனை ராணுவ உடையில் காட்டுவதால் நியாயத்துக்கு புறம்பான விளைவுகள் ஏற்படும் எனும்போது அந்தக் காட்சிகளை தூக்கி விடலாம் . வேறு மாதிரி காட்சிகளை அமைத்து படம் ஆக்கலாம் . பாரி வேந்தரின் பண பலத்துக்கு முன்னால் அது ஒரு சுண்டைக்காய் சமாச்சாரம். தவறு என்று தெரியவரும்போது திருத்திக் கொள்ளலாம் .அதில் ஒன்றும் தவறில்லை .என்று பேசத்தான் உனக்கு எவனுமே இல்லாமல் போய் விட்டானடா தமிழா !” என்று நாம் குறிப்பிட்டிருந்தது நினைவு கூறத் தக்கது )
ஆனால் அடுத்துப் பேசிய தயாரிப்பாளர் பி.மதன் “படத்தில் கற்பனையாக நினைத்துப் பார்ப்பது போன்ற, வித்தியாசமான ஒரு காட்சியில்தான் அந்த உடை அணிவிக்கப்பட்டு இருந்தது . அது இப்போது நீக்கப்பட்டு விட்டது ” என்றார் .
மேலும் பிரவீன் காந்த் தனது பேச்சில் “படம் பார்த்து விட்டு சீமான் , நெடுமாறன், ஆகியோர் சொன்ன கருத்துகள் அடிப்படையில் சில காட்சிகள் வசனங்கள் நீக்கப்பட்டன. மாணவர் கருத்துக்களையும் ஏற்று நீக்கங்கள் செய்து இருக்கிறோம் ” என்றார் .
“அவை என்ன வசனங்கள்?” என்று நான் கேட்க “அதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள் . பெரிதாக ஏதும் இல்லை ” என்றார் .
தொடர்ந்து பிரவீன் காந்திடம் நான் கேட்ட கேள்விகளும் அதற்கு அவரது பதில்களும் .
பாடல் வெளியீட்டு விழாவில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள மாணவர் செம்பியன் ‘படத்தில் விடுதலைப் புலிகள் ஆபாச பாடலுக்கு நடனம் ஆடுவது போல ஒரு காட்சி இருக்கிறது’ என்றாரே .இப்போது அதை நீங்கள் நீக்கி இருக்கலாம் . ஆனால் எந்த நோக்கத்தில் அப்படி எடுத்தீர்கள் ?
இல்லை அப்படி ஒரு காட்சி எடுக்கப் படவே இல்லை . அது சுத்தப் பொய்.
பிரபாகரன் கதாபாத்திரம் ஒரு இடத்தில் ‘இது கவுரவத்துக்காக நடக்கும் போர்’ என்று கூறுவதாக ஒரு வசனம் வைத்தீர்களா?
அப்படி இல்லை . பதுங்கு குழியில் வாழ்க்கையையே தொலைத்த ஒரு பெண் ‘பெரியமனுஷங்க கவுரவத்துக்கு எங்களை ஏன் கொல்றீங்க ” என்றுதான் கேட்பார் .
அப்படியானால் போராளிகள் கவுரவத்துக்காக நடத்திய போர் அது என்று அந்த பெண் கூறுவதாக அர்த்தமா ?
இல்லை . அது இலங்கை அரசை கண்டிக்கும் வசனம் .
இது தவிர, வேறு என்ன காட்சிகள் நீக்கப்பட்டன ?
விடுதலைப் புலிகளுக்குள்ளும் காதல் இருந்தது என்பதை சொல்ல புலிக் கொடியில் இருந்து இதயம் வருவது போல காட்சி வைத்திருந்தோம் . அதையும் நீக்கி விட்டோம் .
மாணவர்கள் கருத்தையும் கேட்டு காட்சிகளை நீக்கியதாக இப்போது சொல்கிறீர்கள் . அப்படி இருக்க பாடல் வெளியீட்டு விழாவில் அந்த மாணவர்களை தாக்க வேண்டிய அவசியம் என்ன ?
இந்த கேள்விக்கு பதில் சொல்ல …
பிரவீன் காந்திடம் இருந்து மைக்கை வாங்கிய தயாரிப்பாளர் மதன் :
” அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை . மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்காக நான் மனப் பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் . அது மட்டுமல்ல படத்தில் நீக்க வேண்டிய காட்சிகளை நீக்கி விட்டு இந்தப் படத்தை தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட அனைவருக்கும் போட்டுக் காட்டுவேன் . அவர்கள் எல்லோரும் சம்மதம் சொன்னால் மட்டுமே படத்தை வெளியிடுவேன் . இல்லை என்றால் இந்தப் படத்தை முழுக்க முழுக்க நாங்களே முடக்கி விடுவோம் . ரிலீஸ் ஆகாது ” என்றார்.
என்ன நடக்கிறது என்று பார்ப்போம் .