அம்பலவாணன் – பிரேமா தயாரிப்பில், தருண் குமார், அபர்நதி, அனு ஸ்ரீ, அருள் தாஸ், பாவா லக்ஷ்மணன், கயல் தேவராஜ் நடிப்பில் சுகுமாரின் ஒளிப்பதிவில்
தகராறு, வீர சிவாஜி , ஹைப்பர் (கன்னடம்),D7 என்ற வெப் சீரிஸ் ஆகியவற்றை இயக்கிய கணேஷ் விநாயகன் இயக்கி இருக்கும் படம் தேன்.
மேற்குத் தொடர்ச்சி மழைப் பகுதியில் தேன் எடுத்துப் பிழைக்கும் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படம் இது .
மலைப் பகுதியின் பனி காரணமாக மூத்தவர்களுக்கு ஏற்படும் சுவாசக் கோளாறில் சிக்கிக் கொள்கிறார் நாயகியின் (அபர்நதி) தந்தை (கயல் தேவராஜ்) .
அப்பாவின் நோய்க்கு மருந்தான குறிஞ்சித் தேனைத் தேடி நாயகனை (தருண்குமார்) சந்திக்கிறார் நாயகி. அவர்களுக்குள் காதல் நோய் வருகிறது.
இதற்கிடையே மலைவாழ் மக்களை அந்த மண்ணில் இருந்து அப்புறப்படுத்தும் கார்ப்பரேட் அடி வருடி அரசுகளின் எச்சைப் பொருக்கி அரசியலை நாயகன் எதிர்க்க, அவனுக்கும் அரசி எந்திரத்துக்கும் பகை வருகிறது .
இந்நிலையில் மலைப் பகுதிகளில் அமைக்கப் படும் ஆலைகளின் ரசாயனக் கழிவுகளால் நாயகி உடல் நலம் பாதிக்கப்பட அவளைக் காக்க போராடுகிறான் நாயகன்.
அந்த சிகிசைக்கு கிடைக்கும் காப்பீட்டுப் பணம் காரணமாக மருத்துவர்களுக்குள் சண்டை . விளைவாக என்ன ஆனது ? என்பதே இந்தப் படம் .
மக்களுக்காகப் பாடுபடுவதாக நடித்து பெரு முதலாளிகளின் காசுக்கு சோரம் போகும் கதாபாத்திரம் ஒன்றில் அருள்தாஸ் நடித்திருக்கிறார் .
படம் ஒரு கண்ணீர்க் கவிதை போல் வந்திருக்கிறது என்கிறார்கள் .
இயக்குனர் கணேஷ் வினாயகனிடம் அலைபேசியில் பேசினேன்.
“முடிந்தவரை உண்மைக்கு நெருக்கமாகப் படமாக்கி இருக்கிறோம் ….
நாயகன் தருண்குமார் என்னுடைய முதல் படமான தகராறு படத்திலும் நடித்தவர் .
அபர்நதி மாடல் ஆக இருந்தவர் . ஆனால் இந்தப் படத்தில் அவருக்கு மேக்கப் ஹேர் டிரஸ் எதுவும் இல்;இல்லை. ஒரு சாதாரணப் பெண்ணாக நீ உன் வீட்டில் எப்படி உன் முடியை முடிந்து கொள்வாயோ அப்படி இருந்தால் போதும் என்று சொன்னேன். அப்படியே செய்தார். கிளிசரினை மட்டும் எப்போதாவது அழுவதற்குப் பயன்படுத்தினார் .
நாயகியின் அப்பாவாக பத்திரிக்கையாளர் கயல் தேவராஜ் நடித்து உள்ளார்.
சுகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். முன்பே அவர் மைனா, கும்கி போன்ற படங்களில் காடுகளில் பழகியவர் .
சனத் பரத்வாஜின் இசை, லாரான்ச்கிஷோரின் படத் தொகுப்பு, மாயபாண்டியின் கலை இயக்கம், மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கு எழுதிய ராசி தங்கதுரையின் வசனம் உட்பட அனைத்துக் கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பாக வந்துள்ளது .
படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்கிறார் நம்பிக்கையாக.
வரும் 25 ஆம் தேதி திரையரங்கக் கூடுகளில் இருந்து சொட்ட ஆரம்பிக்கிறது தேன்
