வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, சிலம்பரசன் எஸ் டி ஆர் , சிட்தி இட்னானி, ராதிகா, அப்புக்குட்டி,, நீரஜ் மாதவ் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கும் படம்.
திருநெல்வேலி மாவட்டத்தின் கந்தக பூமி ஒன்றில் வறிய குடும்பத்தில் பிறந்து, முள்ளுக் காட்டில் போராடி, தனக்கு நல்லது நினைக்கும் ஒருவனின் செயலாலேயே பிரச்னைக்கு ஆளாகி, சொந்தக்காரர் வேலை பார்த்த பரோட்டா கடையில் வேலை பார்க்க மும்பை வந்து …..
அது கொத்து பரோட்டா கடை மட்டும் அல்ல, ஆட்களையும் கொத்திப் போடும் தாதாவுக்கு உரிமைப்பட்ட கடை என்பதை உணர்ந்து, எவ்வளவோ தவிர்க்க முயன்றும் தானும் அடிதடி கொலைக்குள் இறங்கி, ஒரு பெண்ணின் காதலில் விழுந்து, அதனால் ஒரு நிலையில் வன்முறையில் இருந்து விலக நினைத்த ஒரு முன்னாள் நல்லவனுக்கு…..
நடந்தது என்ன என்பதே வெந்து தணிந்தது காடு .
அட்டகாசமான துவக்கம் .
அந்த பொட்டல் பூமி, கந்தக மண் , முள்ளுக் காடு, அதில் முற்றிலும் புதிய தோற்றத்தில் சிம்பு, அந்தக் காட்சிகள், நெல்லை மொழி வசனங்கள் எல்லாம் சேர்ந்து இன்னொரு அசுரன் பார்க்கப் போகிறோமோ என்ற மனநிலையை ஏற்படுத்தியது .
நாயகனுக்கு பக்கத்து டவுனில் உதவும் சொந்தக்காரர் கதாபாத்திரத்தின் முடிவு வரை கூட படம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு அபாரமானது .முதல் அரை மணி நேரம் அருமை .
அதன் பிறகு கவுதம் இயக்கத்தில் சிம்பு முன்பே நடித்த படங்கள், தமிழ் சினிமா மென்று துப்பிய உலக சினிமாவில் உப்பிக் கிடக்கும் தாதா கதைகள் என்ற முட்டு சந்தில் சிக்கிக் கொள்ளும் காட்டெருமையாகிறது படம் . அதுவும் ஒரு காட்சியில் நாயகன் படத்தில் வரும் அய்யர் கதாபாத்திரத்தை அப்படியே காட்டி மறந்தவர்களுக்கும் தானே சொல்கிறது படம்.
படத்தை துவங்கியதில் இருக்கும் நோக்கம் முடிப்பதில் இல்லை. . முடிவில்லாத முடிவு என்ற ஒப்பெத்தலில் முடிகிறது படம்.
சிம்பு அட்டகாசமாக அற்புதமாக சிறப்பாக .. இப்படி இன்னும் பல சொல்லும் அளவுக்கு நடித்து இருக்கிறார் . திக்குத் தெரியாத சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இடங்களில் தன் நடிப்பால் யதார்த்தப்படுத்துகிறார். பிரம்மாதம் .
எப்படிப் பார்த்தாலும் அழகாக இருக்கிறார் சிட்தி இட்னானி, அதனால் அவர் குதறி குதறி தமிழ் பேசும்போது கூட அவர் மேல் கோபம் வராமல் கவுதம் மேனன் மேலும ஜெய மோகன் மேலும்தான் கோபம் வருகிறது ( திரைக்கதை வசனம் இருவரும்தான். கதை ஜெயமோகன்) அவரை தமிழ் பெண் என்று சொல்லாமல் வடக்கத்திக்காரி என்று சொல்வதில் என்ன பிரச்னை ?
ஓ, அப்போதுதான் மும்பை வாழ் தமிழர்களையும் இங்கே இருந்து வேலைக்குப் போகும் தமிழர்களையும் கேவலப்படுத்தி கதாபாத்திரங்கள் வசனங்களை வைக்க முடியும்…..
– என்று ஒற்றை வாக்கியத்தில் குற்றம் சாட்டவும் முடியவில்லை. ஏனெனில் அதே அளவு மும்பையில் வாழும் மலையாளிகளையும் கேரள மலையாளிகளையும் கேவலப்படுத்தும் காட்சிகள் வசனங்களையும் எழுதி இருக்கிறார்கள் பிறப்பால் கேரளர்களான இருவரும்.
இப்படி ஹீரோ மற்றும் ஒரு சில கேரக்டர்கள் தவிர படத்தில் வரும் எல்லா தமிழர்கள் மலையாளிகளையும் கேவலமாக சொல்வதன் மூலம் யாரை இவர்கள் குஷிப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை
தவிர பல இடங்களில் யதார்த்தம் மீறிய வசனங்கள்.
அசந்தர்ப்பமாக வரும் நீளமான ஷாட்கள் வேறு சுமை.
காதல் காட்சிகளில் வழக்கம் போல ஜொலிக்கிறார் கவுதம் மேனன் . முதல் சரணம் வரை ஒரே ஷாட்டில் பாடல் , கல்யாணப் பாடலில் மனசின் உணர்வின் உடல் மொழிகளாக, நாயகன் நாயகி மற்றவர்களை எல்லாம் செட் ப்ராப்பர்ட்டி ஆக்கி விட்டு வாயசைத்துப் பாடுவது… இதெல்லாம் கவுதம் மேனன் திரையில் எழுதி இருக்கும் கவிதைகள் .
போன் வழியே ஒரு பொண்டாட்டி பாடும் பாடலும் அது எடுக்கப்பட்ட விதமும் சிறப்பு. ஆனால் அந்த மனைவி ஒரு டியூப் லைட்டு. மூணாவது நாலாவது ஷாட்டிலேயே கண்டு பிடிக்க வேண்டிய விஷயத்தை முக்கால்வாசி பாடல் முடிந்துதான் கண்டுபிடிக்கிறார்.
ராவுத்தர் கேரக்டரும் காட்சிகளும் அபாரம்.
ஏ ஆர் ரகுமான் இசை, சித்தார்த்தாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத் தொகுப்பு, தாமரையின் வரிகள் ஆகியவை படத்தின் சிறப்பு அம்சங்கள்.
வைத்து வித்தியாசமான படம் தரலாம் என்று முயன்று கொஞ்ச நேரத்துக்குப் பிறகு எதற்கு வம்பு என்று முன்பே கவுதம் மேனன் எடுத்த சிம்புவின் படங்களையே மீண்டும் இருவரும் கொடுத்ததுதான் வம்பாகிப் போய் விட்டது.
படத்தில் ரசிக்கவும் பல காட்சிகள் விஷயங்கள் உண்டு
