2 டி என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க கார்த்தி, அதிதி சங்கர் , ராஜ்கிரண் , பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன் , சூரி நடிப்பில் முத்தையா இயக்கி இருக்கும் படம் .
ஆணாதிக்க மனோபாவம் கொண்ட தாசில்தார் ஒருவர் ( பிரகாஷ் ராஜ்) நான்கு ஆண் பிள்ளைகளைப் பெற்ற நிலையில் மனைவிக்கு (சரண்யா) துரோகம் செய்து வேறொரு பெண்ணை வலுக்கட்டாயப்படுத்திக் குடும்பம் நடத்த ,
மனைவி அதை தட்டிக் கேட்க , மனைவியை அவர் அடித்து விரட்ட, மூன்று மகன்கள் அப்பாவோடு இருந்துவிட, இளைய மகன் மட்டும் அம்மாவோடு வந்து விட
அம்மா இளைய மகனை தனது அண்ணனிடம் (ராஜ்கிரண்) ஒப்படைத்து விட்டு நெருப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள் . அயோக்கிய அப்பா மீதான வன்மத்தோடு வளர்ந்து இளைஞன் ஆகும் இளைய மகன் (கார்த்தி) நல்ல பிள்ளையாக இருக்க , அப்பாவோ மருமகள்களை வரதட்சனைக் கொடுமை செய்வது , மகன்களை சுயமாக முன்னேறி சுயமரியாதையோடு வாழ விடாமல் அடிமைகளாகவே வைத்திருப்பது என்று ஆணவத்தின் ஆணி வேராக இருக்கிறார்.
ஒரு நிலையில் உண்மை புரிந்து எல்லோரும் தம்பியின் பக்கம் போக, தாசில்தார் தனி மரமாக , அதுவரை தாசில்தாரை அண்டிப் பிழைத்த சிலரே அவரைக் கொலை செய்ய முயல , இளைய மகன் அப்பாவை மன்னித்துக் காப்பாற்றினானா? இல்லையா? என்பதே விருமன் . திரைக்கதையில் கொஞ்சம் கூட லாஜிக்கோ யதார்த்தமோ இல்லாத போதும் , அன்பு பாசம், நேர்மை, உறவுகளுக்கு உதவும் குணம் , இவற்றை வலியுறுத்தி காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குனர் முத்தையா. பல காட்சிகளில், வசனம் பாராட்டுப் பெறுகிறது .
குத்துக் கல்லு , குழவிக் கல்லு என்று கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள், ஏலம் எங்கு நடந்தாலும் அதை நடக்க விடாமல் தடுக்கும் வேலையை செய்து அதனால் பலன் பெறுவோரிடம் பணம் பெறும் நபர் ( ஆர் கே சுரேஷ்) போன்ற கதாபாத்திரங்கள் இவற்றாலும் கவனம் கவர்கிறார் இயக்குனர் முத்தையா
பருத்தி வீரனை நினைவு படுத்தும் கெட்டப்பில் ஆவேசமும் அன்பும் நிறைந்த கதாபாத்திரத்தில் ரணகளம் செய்திருக்கிறார் கார்த்தி . அருமை .
இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளமே பெரும் வரவேற்புக்கு காரணமாக அமைந்து விட்டாலும் உற்சாகமாக ஆடிப் பாடி நடித்திருக்கிறார் அதிதி . ராஜ் கிரண் கம்பீரத்திலும் பிரகாஷ் ராஜ் கல் நெஞ்சு மிக்க வில்லத்தனத்திலும் சரண்யா நெகிழ்ச்சியிலும் பரிணமிக்கிறார்கள். சிரிக்க வைக்கிறார் சூரி
யுவன் சங்கர் ராஜாவின் இசையும் பாடல்களும் பட்டியைக் கிளப்புகின்றன.
அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் சும்மா அதிரடிக்கின்றன.
கடைசிக் காட்சிகள் நெகிழ்ச்சி
படம் முழுக்க வரும் கிராமிய முகங்கள் சிறப்பு .
கிராமியப் பின்னணியில் ஒரு அதிரடி மசாலா படம் விருமன்