மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் போன்ற திரைப்படங்களை இயக்கிய யுரேகாவுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது .
ஆனால் இது பிரான்ஸ் அரசே வழங்கும் புகழ் பெற்ற செவாலியே விருது அல்ல .பின்னே ? அதை விடப் பழமையானது என்கிறார் யுரேகா . அது பற்றி அவரே சொல்கிறார்
“எனது இயற்பெயர் ஜோசப் மோகன் குமார் . நான் 32 வருடங்களாக இலக்கியம் மற்றும் ஊடகப் பணி செய்து வருகிறேன்
1995 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் புதுக் கவிதைக்கான தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றேன்.
இரண்டாம் பரிசு பெற்றவர் மறைந்த கவிஞர் வாசகன் (சேரன் இயக்கிய தேசிய கீதம் “என் கனவினைக் கேள் நண்பா” என்ற காலத்தால் அழியாத பாடலை எழுதியவர் )
எனது கவிதைகளும் பிற பல நூல்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் உள்ள ,
கிறித்தவ இறையியல் கல்லூரிகள் , பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இறையியல் கல்லூரிகள் என்னை கவுரவப் பேராசிரியராக நியமித்து உள்ளன .
தற்போது இய்சு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு நவீன கோட்பாடுகளுடன் நான் எழுதி, அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்காக , ஜெருசலேமில் உள்ள ஆர்த்தடாக்ஸ் தலைமை திருச்சபையைச் சேர்ந்த நைட் ஆஃப் மால்ட்டா ஜெருசலேம் என்ற கிறிஸ்தவ அமைப்பு,
கடந்த பதிமூன்றாம் தேதி எனக்கு நைட் ஆஃப் கிரேஸ் செவாலியே விருது வழங்கி கவுரவித்துள்ளது. பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியே விருதும், இந்த நைட் ஆஃப் மால்ட்டா ஜெருசலேம் விருதும் வேறு வேறு .
பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியே விருது கலை இலக்கியம் சமூக சேவை இவற்றில் சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது .
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கிடைத்தது அந்த விருதுதான் .
ஆனால் நான் வாங்கி இருக்கும் செவாலியே விருது அதை விட பழமையானது . கி பி 1048லிருந்து 960 வருடங்களாக இது வழங்கப்பட்டு வருகிறது .
இந்த விருதைப் பெறும் முதல் பத்திரிகையாளன் நான்தான். இது வரை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த செவாலியே விருது இந்த ஆண்டு,
முதன் முறையாக மதங்களைக் கடந்து திருப்பூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்ற கல்வியாளருக்கு வழங்கப்பட்டுள்ளது செவாலியே என்றால் மக்கள் சேவை செய்பவர் என்று பொருள் . ” என்கிறார் .
சரி…. ‘சென்னைக்கு சிவப்பு விளக்கு வேண்டும்’ என்பதை வலியுறுத்தி சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தை எடுத்த இந்த யுரேகா இப்போது என்ன சொல்கிறார் ?
“இப்போதும் சொல்கிறேன் . சிவப்பு விளக்குப் பகுதி அங்கீகரிக்கப்பட்டால் பாலியல் பலாத்காரம் குறையும் . யார் தடுத்தாலும் ,
இன்னும் பத்து வருடங்களில் சென்னைக்கு சிவப்பு விளக்குப் பகுதி வந்தே தீரும். அதில் மாற்றமே இல்லை ” என்று அடித்துச் சொல்லும் யுரேகா அடுத்த பட வேலையில் இறங்கி விட்டார் .
“ஜெயவந்த் ஹீரோவாக நடிக்க ‘காட்டுப் பய சார் இந்த காளி’ என்ற படத்தை இயக்குகிறேன் . இதுவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தைச் சொல்லும் படம்தான்.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் லட்சக் கணக்கில் கடன் இருக்கிறது . அது எப்படி உருவானது என்பதை சொல்லும் படம் இது. தமிழனின் அடையாளமாக இந்தப் படம் இருக்கும் “என்கிறார் .
தமிழனின் அடையாளமாக வரும் படத்தின் பெயரிலேயே ஆங்கில வார்த்தையான சார் எதுக்கு என்று கேட்டால் “எல்லா தமிழனும் ஆங்கிலம் பேசணும் சார் ” என்கிறார் .
விருதுக்கு வாழ்த்துகள் !



